siruppiddy

27/4/14

இன்டர்போலுக்கு உதவ நோர்வே இணக்கம்

நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் நெடியவன் என்ற சிவபரனை கைது செய்ய இன்டர்போல் பிறப்பித்துள்ள பிடிவிராந்துக்கு உதவ நோர்வே முதல் முறையாக இணக்கம் வெளியிட்டுள்ளது. நெடியவனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நோர்வே இராஜாங்க செயலாளர் மோரன் ஹொன்லபட் தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. நெடியவன் பயங்கரவாதத்திற்காக நிதி திரட்டியுள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தி, 6000 ஜிகாபைட் இரகசிய தகவல்களை நோர்வே

அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளமையே இதற்கான காரணமாகும். கோனிக் என்ற நடவடிக்கையின் கீழ் நெடியவன் நிதி திரட்டிய விதம் பற்றி அறிந்து கொண்டதாக நெதர்லாந்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். நெடியவனின் சகாக்களான கோபி, தேவியன், அப்பன் ஆகியோர் அண்மையில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

16/4/14

இயக்குணர் குமரன் பத்மநாதன்`ஆண்கள் சிறுவர் இல்லம் திறப்பு! `

 கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் இன்று புதன்கிழமை (16.04.2014) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இல்ல கட்டடத்தினை கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க, யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் உதய பெரேரா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜ் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

இந்த இல்லத்தில் உணவு விடுதி, தங்குமிட விடுதி, பொழுதுபோக்கு விடுதி மற்றும் அலுவலகம் என நான்கு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் இயக்குநர் குமரன் பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீட பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜ், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் சுதந்த ரணசிங்க, யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் விஸ்வரூபன், கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் கே.முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
*நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்வுகள் நடைபெற்றன *

12/4/14

ஆமிக்கு ஆட்பிடிப்பில்! முகவரானார் அதிபர்**

வன்னியினில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளினில் படைக்கு அல்ல, ஏனைய வேலைகளிற்கே என்று கூறியே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதே பாணியிலேயே கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதால் அங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக சூழலினில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பினில் மாணவ அமைப்புக்கள் கடும் சீற்றமடைந்துள்ளன. குறிப்பாக குறித்த தொழில்நுட்பக்கல்லூரி அதிபரே மாணவர்களை பொறியினுள் தள்ளிவிடும் கைங்கரியத்தினில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலிருந்து தொழில்நுட்பக்கல்லூரியினில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்புச்செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக்கல்லூரிப் பணிப்பாளர் கலாநிதி ந.யோகராஜனின் அனுசரணையுடனேயே படையினர் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை சீருடையினில் அங்கு சென்ற படை அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இக் கலந்துரையாடலில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று யோகராஜன் நிர்ப்பந்தித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய படை அதிகாரி இது படையினருக்கான ஆட்சேர்ப்பு அல்ல என்று கூறியதுடன் படைதரப்பின் அங்கமான விரிவுரையாளர்கள், சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் வெற்றிடங்களிற்கே இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் தாங்கள் எந்தத் துறைகளில் கல்வி கற்கின்றார்களோ அந்த துறையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இணைந்துகொள்பவர்களுக்கு படைப்பயிற்சி இல்லையெனவும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வேதனம், உடைகள், தங்குமிடம், உணவு இலவசம், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே வேலை என்று பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டிருந்தன.கற்கை நெறியைப் பூர்த்தி செய்யாத மாணவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும் என்று படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

11/4/14

பாரம்பரிய காணிகளை தமிழ் முஸ்லிம் உரிமையாளர்களுக்கு **

 யுத்தம் ஓய்ந்து, அமைதி நிலவும் சூழ்நிலையில் முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட பெருமுறிப்பு சவாரத்துவெளி, காதர் மீரான்குளம், தண்ணிமுறிப்பு குடியேற்றக் காணிகளை மீண்டும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணிமுறிப்பு பெருநீர்ப்பாய்ச்சல் குளத்தின் கீழ் இருந்த விவசாயிகள் 12 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள முள்ளிவளை, தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு, அலம்பில், செம்மலை ஆகிய இடங்களில் வசித்து வந்ததால் அப்போதைய அரசு இந்த வறிய விவசாயிகளின் போக்குவரத்துச் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்கள் குடியிருப்பதற்காக ஓர் ஏக்கர் வீதம் குடிநிலக் காணிகளை 1974 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது.

இது தண்ணிமுறிப்பு குளத்துடன், பெருமுறிப்பு சவாரத்து வெளி, கலிங்கு வெட்டை, காதர் மீரான்குளம் ஆகிய விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கான தண்ணிமுறிப்பு குடியேற்றம் ஆகும்.

பின் சில காரணங்களால் சுமார் 33 வருடங்களின் பின்னர் இத் தண்ணிமுறிப்பு மீள்குடியேற்ற கிராமம் முற்றாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில் பற்றைக் காடுகளாக மாறியிருந்தது.

இந்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரஹீம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, பாரம்பரிய காணி உரிமையாளர்களுக்கு அக் காணிகளை துப்புரவு செய்து அங்கு வீடுகளை அமைத்து, குடியேறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இதனை அமைச்சர் ஹக்கீம், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிரி, வட மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

4/4/14

பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்!

முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று முல்லைத்தீவில் தெரிவித்தார்.
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டப்பட்ட 101 வீடுகளின் திறப்புக்களை மக்களிடம் கையளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமானப்படையால் அபகரிக்கப்பட்ட காணிகளில் இருந்து 29 காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கிலிருந்து  அகற்றப்போவதில்லை என்று தெரிவித்த கோத்தபாய அதற்காக யாருடைய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் புலிகள் உருவாகாமல் இருக்க  இராணுவத்தினர் வடக்கில் அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவமுகாம் ஒரு பிரதேசத்தில் இருந்தால் அந்தப் பிரதேசத்தின் வருமானம் அதிகரிக்கும் எனத் தெரிவித்த கோத்தபாய இங்கு மொழிப் பிரச்சினை காரணமாகவே இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவில்லை என்றும் தெரிவித்தார். இதற்காக ஜனாதிபதி மும்மொழிகளையும் கற்பிற்குடம் முயற்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் இராணுவத்தினருடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மக்களும் இராணுவமும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனும் நெருக்கத்துடனும் பழக வேண்டும் என்றும் அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற கோத்தபாய அங்கும் ஒன்பது வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார்.