siruppiddy

29/9/14

அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை .எனக்கு பிள்ளை வந்தாலே போதும்!

வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார்.
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
சமாதான காலத்தில் முழங்காவிலில் இருந்து எனது கணவரது ஊரான யாழ்ப்பாணம் போய் விட்டோம். வறுமை காரணமாக மகன் வவுனியா அகிலன் லொச்சில் இரவு நேரம் வேலைக்குப் போய் வந்தார்.அந்த வருமானத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
பின்னர் 2009.01.08 ஆம் திகதி வெள்ளைவானில் வந்தவர்களால் எனது மகன் கடத்திச் செல்லப்பட்டார் என முதலாளி என்னிடம் தெரிவித்தார். பல சிரமங்கள் பட்டு வவுனியாவுக்கு சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
ஆனால் வவுனியா குறித்த காலப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அன்று வெள்ளை வானில் வந்தவர்களும் இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் தான் வந்திருந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் எல்லா இடமும் பதிவுகள் செய்து தேடி விட்டோம் ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது கணவரும் என்னை விட்டு போய் விட்டார். நான் மகன் வருவான் என்று புது வீடும் கட்டிவிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றேன்.
எனது மற்றப்பிள்ளைகள் தான் பண உதவிகள் செய்கின்றனர். எனக்கு அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை. பிள்ளை வந்தாலே போதும் உயிருடன் பிடித்துச் சென்ற பிள்ளை உயிருடன் தானே இருக்க வேண்டும். எனக்கு எனது மகன் வேண்டும் என்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28/9/14

இன அழிப்புத் தொடர்பில் 40 பக்க ஆவணங்களைக் கையளித்தார்

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழர்களுக்கு எதிரான  இன அழிப்பு தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் பேரவையின்,  முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை  வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு  40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.
நேற்றைய தினம் தாயகம் திரும்பிய ரவிகரனிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்கள், புலனாய்வுத்துறையால்  தொடரும் அச்சுறுத்தல்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நில அபகரிப்பு விடயங்கள்,கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , தமிழர் தாயகப்பகுதியில் இனப்பரம்பல் கோலம் மாற்றப்படும் நிலை, தமிழர் கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியமளித்துள்ளதாக தெரிய வருகிறது.  வலிமையான ஆதாரங்களை உள்ளடக்கிய 40 பக்க ஆவணங்களும் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

26/9/14

போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழுவினர்

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்: பசுமைத்தாயகம் வலியுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர.அருள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ் குமார், சேலம் இரா.அருள், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
 நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ்குமார் ஆற்றிய உரையின் சுருக்கம்:
இலங்கை மீதான ஐ.நா.மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை குறித்த வாய்மொழி அறிக்கையை தாக்கல் செய்ததற்காக பசுமைத்தாயகம் அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை தொடர்பான பேரவையின் ஆணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு பதிலாக இன்னுமொரு உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் இலங்கை அரசு நடத்திய இத்தகைய விசாரணை தோல்வி அடைந்ததால் தான் ஐ.நா.மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக்கு இந்தப் பேரவை ஆணையிட்டது.
இலங்கையில் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அங்கு நிலவும் நிலைமை, கடந்த 8ஆம் தேதி இலங்கை அரசு இந்த பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றில் இருந்து வெகுதொலைவில் உள்ளன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகள் இன்னும் இலங்கைப் படைகளின் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. சிங்கள ராணுவத்தின் 85% வீரர்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 96% தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்கள் அல்லது சோதனைச்சாவடியின் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தான் வாழ்கின்றனர். ஐ.நா. மனித உரிமை ஆணையரே சுட்டிக்காட்டியுள்ளவாறு இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோருக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது; அதுமட்டுமின்றி, இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மார்க்கத்தை கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறையும் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இனம் மற்றும் மத வேற்றுமையின் காரணமாக தமிழர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் பரவலாக நடத்தப்படுவது தடையின்றி அனுமதிக்கப்படும் நிலையில், இனியும் தாமதமின்றி அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். ஆனால், அத்தகைய விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காத நிலையில், கடந்த காலங்களில் நடந்தவை மட்டுமின்றி, இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னுரிமை
அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
                                     இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் பேசினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22/9/14

மகிந்த சட்ட விதிமுறைகளை மீறியுள்ளார் மேன்முறையீட்டு

நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது அனுமதி பெற வேண்டிய நபர்கள் தொடர்பில் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சட்டமா அதிபர், பிரதம நீதியரசர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படும் போது தரப்படுத்தல் தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

21/9/14

கழுத்து பட்டியுடன் அதிகாரி கைது!

 முல்லைதீவில் வடமாகாணசபை நிகழ்வில் சம்பவம்!!
விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரியொருவர் முல்லைதீவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாணசபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலான வடமாகாண விளையாட்டுப்போட்டிகள் இம்முறை முல்லைதீவில் நடைபெற்று வருகின்றது.
குறித்த விளையாட்டுப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்றுநரான எஸ்.சதீஸ் (வயது 40) என்பவர்  விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே கைதாகியுள்ளார்.
கூட்டமைப்பின் வசமுள்ள வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடந்து கொண்டிருந்த விளையாட்டுப்போட்டியில் வைத்து அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டமை பல தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தனது பட்டியை பெருமையாக காட்டிக்கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலையடுத்தே இக்கைது நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20/9/14

சில கிபிர் விமானங்களும் அபிராமியின் வலது கையும்

முன் கதை - 01
சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான்.
பின் கதை - 01
2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம்.
உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் சொல்லுவம்.
எனக்கு முதல் முதல் கிபிர் அனுபவம், ஒருக்கா ரியூசனுக்கு போட்டு வாற வழில நடந்தது. அண்டைக்கு நான் தப்பினது ஏதோ என்ர அதிஸ்ரம். அண்டேல இருந்து எனக்கு கிபிர் எண்டா பயம். எல்லாருக்கும் பயம்தான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகம். அதோட முதல் முதல் கிபிர் அடிக்கேக்க பயப்படும் போது என்ர வலது கை நடுங்கினது. அதுக்கு பிறகு தூரத்தில கிபிர் சத்தம் கேட்டாகூட என்ர கை வெட வெட எண்டு நடுங்கும்.
பின் கதை - 2
பள்ளி கூடம் யெளவனம் தொடங்கின காலம் அது. பள்ளி கூடத்தில் எனக்கு நிறைய நண்பர்கள், நண்பிகள். அதில முக்கியமா தோழி அபிராமி. மற்ற நட்புகளை விட அபிராமிய எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம், ஒரு இங்கிலிஸ் படம். எனக்கு அப்ப சாகசம், மந்திர தந்திரம் நிறைஞ்ச கதை புத்தகங்கள், படங்கள் பார்க்கப் பிடிக்கும். நானும் அபிராமியும் உற்ற நண்பர்களாக அப்பிடிப்பட்ட ஒரு படம்தான் காரணம். அபிராமி ஒரு நாள் தான் கொழும்புக்கு போன நேரம் பார்த்த Bridge to Terabithia எண்ட படத்த பற்றி சொன்னாள்.
படத்தில எங்கட வயச ஒத்த ஒரு சுட்டி பையனும் பெண்ணும் தங்கட தனிமைய போக்க வீட்டுக்கு அண்மையில் ஆற்றோடு இருக்கிய காட்டுக்குள்ள விளையாட போவார்கள். அந்த காட்டினை தாங்கள் ஆளும் ராஜ்ஜியமாக கற்பனை செய்து கொள்வார்கள். அதற்கு தெரபேதியா என்று பெயரிடுவார்கள். அங்கே இருக்கும் அணில் முதலான சிறு மிருகங்களை அரக்கர்களாகவும் எதிரியாகவும் கற்பனை செய்து, தாங்கள் சாகசம் புரிவதாய் விளையாடுவார்கள். அவர்கள் தங்களுடைய நாட்டுக்கு சுலபமாய் வர தடையாக இருக்கும் ஆற்றின் மீது பாலம் ஒண்டு அமைக்க முனைவார்கள். பாலம் கட்டப்பட்டதா? அந்த நட்புக்கு என்ன நடந்தது? என்பது மீதிக் கதை
Bridge to Terabithia – Katherine Paterson எழுதிய புகழ்மிகு சிறுவர் நாவல். இயக்குனர் Gabor caspo இதனை படமாக்கினார். இதோ ஆர்வமுள்ளவர்கள், படத்தைப் பார்க்கலாம்.
 
இப்படியொரு கதையை அவள் சொன்னதில் இருந்து இருவரும் தோழர்களானோம். நாங்கள் பள்ளிக் கூடம் விட்டுபோற வழியில் ஒரு சிறிய பாலம் இருக்கும். அதில் மழை காலத்தில மட்டும் தண்ணீர் பாயும். அந்த பாலத்துக்கு நாங்கள் தெரபேதியா பிரிச் எண்டு பெயர் வச்சம். ஒவ்வொரு நாளும் அந்தப் பாலத்தில இருந்திட்டு தான் வீட்ட போவம்.
பின் கதை - 3
அண்டைக்குதான் அது நடந்தது. நாங்கள் இருவரும் பாலத்தில இருக்கேக்க தீடிரெண்டு பெரிய சத்தம். கிபிர்…!!! நாங்கள் இரண்டு பேரும் அலறி அடித்துக் கொண்டு எங்கட பாலத்துல பதுங்கினம். என் கை வெட வெடக்கத் தொடங்கியது. கிபிர் போனா பிறகும் கை நடுக்கம் நிற்கவில்லை. அப்போ அபிராமி என்ர நடுங்கிற கையை பிடித்தாள்.
“பயப்படாதயடா கிபிர் போட்டுது.”
அவள் கையைப் பிடித்தவுடன் என் கை நடுக்கம் ஆச்சரியமாக உடனே நின்று போனது. அதுக்குப் பிறகு எப்ப கிபிர் சத்தம் கேட்டாலும் என்ர கை என்னை அறியாம அபின்ர கைய இறுக்கி பிடித்து கொள்ளும். அவள் “தெரபேதியாவின் ராசாக்கு பயத்த பாரன்” எண்டு கேலி செய்வாள். எனினும் கையை விட்டதில்லை.
பின் கதை - 4
கொஞ்ச நாள் அபிராமி பள்ளி கூட வாறதில்லை. சக தோழிகளிடம் கேட்ட போது தமக்குள் எதோ சொல்லி சிரித்தனர். எனக்கு முழுமையாய் புரியாவிட்டாலும், ஓரளவு உள்ளுணர்ந்து கொண்டேன். அபிராமி பள்ளி கூடம் திரும்ப வரத் தொடங்கினாள்.
“கொஞ்சம் குண்டாகிட்டாயடி”
சிரித்தாள். வழமைபோல்தான் அவள் இருப்பதாயும் கதைப்பதாயும் எனக்குத் தோன்றியது. அப்போது தான் அது நடந்தது. தீடிரென வானத்தில் இரச்சல் எழதொடங்கியது. எல்லாரும் பதுங்கு குழிக்குள் பதுங்கினம். நான் வழமை போல அபியின் கையைப் பற்றினேன். அவள் ஏதோ நெருப்பு பட்டது போல் கையை உதறி எடுத்துக் கொண்டாள்.
“இனி இப்பிடி கைய தொடாதையடா…!”
முன் கதை - 2
நண்பன் தங்கச்சியின்ர சாமத்திய வீட்டுக்கு சொன்னபோது எனக்கு அபியின்ர ஞாபகம் தான் வந்தது.
எங்கட சமூகத்தில இருக்கிற அல்லது நடக்கிற மிகப்பெரிய அவலங்களில் இதுவும் ஒன்று. திடீரென பிள்ளைகளின் உடலிலும் மனதிலும் நுழையும் பாலியல் எனும் ஒன்றைப் பற்றி நம் சமூகம் அவர்களுக்கு எத்தகைய ஒரு வழிகாட்டலை செய்கின்றது என்று நாம் யாரும் கவனித்து இருகின்றோமா?
எனக்கு நடந்தது வெறும் புறக்கணிப்பு. அண்டைக்கு அபிராமியின் கையை நான் பற்றும்போது எந்தவித அழுக்கும் என் நெஞ்சில் இல்லை. ஆனால், அபியை அத்தகைய செயலினை செய்யத் தூண்டியது எது என்பதே இந்த சமூகத்தின் பெரிய பிரச்சினை.
ஆண் – பெண் நட்பு, சாதரண தொடுகை, கருத்துப் பகிர்வு, புரிதல், தேடல் என்பன பாலியல் எனும் ஒன்று புகுந்த பின்பு ஏன் விளைதிறன் அற்று போகின்றது.
ஒரு பெண் பிள்ளையோ, ஆண் பிள்ளையோ வயதிற்கு வருதல் என்பதை ஏன் இப்படியொரு பிறழ்வான வடிவத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறது இந்த சமூகம்.
பெண் பிள்ளை ஒன்று பாலின மாற்றத்தை சந்திப்பதை “பூப்புனித நீராட்டு விழா” என்று கொண்டாடுகிறார்கள். சிவாஜி படத்தில சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, “எங்க வீட்டில பொண்ணிருக்கு” எண்டு சொல்லத்தானா இந்த சடங்கு? பாவம் அந்த பிள்ளையும், தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீடியோக்காரன் சொல்வதற்கு எல்லாம் திரும்பி திரும்பி போஸ் கொடுப்பது எத்தகையதொரு அவலம்.
பாலின மாற்றம் இயற்கை என்பதை ஏன் யாரும் தங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பதில்லை. அதனை ஒரு போகப்பொருள் போலவும், தவறு செய்யத் தூண்டுவது போலவும் ஏன் கற்பிக்கின்றார்கள்?
இன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கற்பழிப்புகளும், நடப்பதற்கான காரணம் ஒழுங்கற்ற அடிப்படை பாலியல் கல்வி எம் சமூகத்தினால் வழங்கப்படாமையினாலேயே ஆகும். அண்ணன், தங்கை கைகளை கோர்த்த படி சென்றாலே “கூ” என்று கத்தும் தெருவோர நாய்களை உருவாக்கியதும் இந்த சமுகம் தான்.
9ஆம் வகுப்பு சுகாதார புத்தகத்தில் பாலியல் கல்வி இருக்கிறது. ஆண் – பெண் என்பது என்ன? எது பாலியல்? அடிப்படை பாலியல் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது, ஆனால், பிரச்சினை என்ன என்றால், வகுப்பில் அந்தப் பக்கங்களை எந்த ஆசிரிய பெருந்தகைகளும் திறப்பதே இல்லை. ஆண் பிள்ளைகள் ஒரு பக்கமும், பெண் பிள்ளைகள் ஒரு பக்கமும் இரகசியமாக அந்தப் பக்கங்களை புரட்டிப் பார்த்து தமக்குள் வெட்கப்பட்டு கேலியாக ஒருவருக்கு ஒருவர் பார்த்து சத்தமின்றி சிரித்து கொள்கிறார்கள்.
இதைப் படிக்கும் அம்மாக்கள், அப்பாக்கள் அல்லது ஆசிரியளில் யாராவது என் பிள்ளைக்கு பாலியல் பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று கையைத் தூக்குங்கள் பார்க்கலாம்.
எப்போது உங்கள் கைகள் உயரும் என்று என் பேனாவும் இந்த சமூகமும் காத்திருகின்றது.
பின் கதை – 5
எனினும், இறுதிப்போரில் ஷெல் வீழ்ந்து இறந்து போன என் அபியின் வலது கை இனி மீளாது என்ற யதார்த்தத்தை, வானில் விமானம் ஏதும் சத்தமிட்டால் கூட நடுங்கும் என் கை புரிந்து கொள்வதாய் இல்லை.
“நீர் வழிப்படும் புனை போல் ஆருயிர் முறை வழிப்படும்”

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17/9/14

விசாரணைக்குப் புறம்பாக உள்நாட்டு விசாரணைக்கு பான் கீ மூன் உதவி

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கு மறுத்து வருகிறது. 
இந்த நிலையில் பான் கீ மூன் இவ்வாறு உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் வெளிவிவகார திணைக்களத்தின் குழுவினை அனுப்பவுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலித்த கோஹன்னவிடம் இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் வினவிய போது, அவர் அதற்கு பதில் வழங்காத போதும், இந்த விடயத்தை நிராகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

10/9/14

கிளிநொச்சியில் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணையாம்!

 காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இந்த மாதம் கிளிநொச்சியில் தங்களின் அடுத்தக்கட்ட விசாரணைகளை நடத்தவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் அந்த குழு கிளிநொச்சியில் விசாரணையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
27ம் மற்றும் 28ம் திகதிகளில் முலங்காவில்லிலும் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூனகரியிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த விசாரணைகளின் போது ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களும் உடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

9/9/14

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் - அமெரிக்காவும் பிரித்தானியாவும் !!

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பமான 27 வது கூட்டத் தொடரில் பேசிய ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆற்றிய பங்கை பாராட்டுவதாக தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல், மரியாதை,ஊக்குவிப்பு, வன்முறை, பாதுகாப்பு தொடர்பில் உலகின் கவனத்தை திரும்பியமை, பாலியல் மற்றும் பாலின அடையாளம் போன்ற விடயங்களில் முன்னாள் ஆணையாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையை அமெரிக்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இந்த விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஹார்பர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என ஜெனிவாவுக்கான பிரித்தானிய பிரதிநிதி கோரினார்.
அச்சுறுத்தல், பழிவாங்கல்கள் இல்லாமல் விசாரணைக்கான ஒத்துழைப்பு மற்றும் அணுகலை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

8/9/14

நல்லிணக்கத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை!

 தாங்கள் மேற்கொண்ட நல்லிணக்கங்களை உலகம் கண்டு கொள்ளாதிருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமருடன் கொழும்பில் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திகளையும், நல்லிணக்க செயற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை உலக நாடுகள் புரிந்துக் கொள்ளவில்லை.
இதனால் சிறிலங்கா உலக நாடுகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்..
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

6/9/14

தமிழீழ தாகம் தமிழினம் உள்ளவரை தொடரும் [காணொளி]],

சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெ.மணியரசன் ஐயா அவர்கள் தெரிவிப்பதோடு சம நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

4/9/14

நாட்டுக்கான அச்சுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே !!

ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே, நாட்டுக்கான அச்சுறத்தல் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
தற்போது இலங்கையில் முடிசூடாத மன்னர்களை போல ராஜபக்ஷ குடும்பத்தினர் நடந்துக் கொள்கின்றனர்.அவர்கள் வைத்ததே சட்டம் என்ற ரீதியில் இலங்கை காணப்படுகிறது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆதரவான இராணுவத்தினரைக் கொண்டு தனி ஆட்சியே நடத்தி வருகிறார். 
அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பணபலத்தை கொண்டு மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். 
அதுவே தற்போது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

2/9/14

கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம்!

வடமாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டு வருகின்றன.
இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
அவர்களின் பதவிகளுக்கு துரிதமாக தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் அரச காரியாலயங்களில் இவ்வாறு அதிக அளவில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்