siruppiddy

26/3/14

ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு!

அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்க தீர்மானம் மற்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளிவந்த நிலையில் அதன் நிலமை மற்றும் இதனது தாக்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மகாநாடு பாராளுடன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடக்கும் மண்டபத்திற்கு அருகில் இடம் பெற்றது.

 இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களால் பலதரப்பட்ட வினாக்களும் தெடுக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது

20/3/14

நேற்று நள்ளிரவு முதல் சிவில் உடை இராணுவத்தினரால்

வவுனியாவில் உள்ள கிராமங்களில் நேற்று(19) நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக சிவில் உடை தரித்த இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு, தேடுதல் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
வவுனியாவின் பிரதான கிராமங்களான பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வியாழன் நண்பகல் வரை அதனைத்

தொடர்கின்றனர். இவ்வேளை வீடுகளில் பட அல்பங்கள் சோதிக்கப்படுகின்றன. நள்ளிரவின் பின்னர் திடீரென இப்பகுதியில் ஆள் நடமாட்டம் காரணமாக வளர்ப்பு நாய்கள் குரைக்கத் தொடங்கியதால் ஊர் மக்கள் அச்சத்துடன் விழித்துக் கொண்டனர்.

இன்று காலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொது மக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டைப் பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம் பெறும் இடத்தினைப் போன்று அவர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடித்திரிந்ததாகவும் தெரிய வருகின்றது.

மேலும், வவுனியாவின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு வீடாக சென்று பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின்; சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராமத்தவர்களை ஒரு பொது மைதானத்திற்கு விசாரணைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே, தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெரும் எடுப்பிலான இத்தகைய சுற்றி வளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகளால் மீண்டும் இப் பிரதேசத்தில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கவே அரசு முயற்சிக்கின்றது.

மனித உரிமை விவகாரம் ஜெனீவாவில் சூடுபிடித்துள்ள நிலையில், அதனைத் திசை திருப்பவும் தனது ஆக்கிரமிப்புக் கொள்கையிலிருந்து சிறிதளவும் விலகாத தன்மையைக் கொண்டுள்ள இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் மீண்டும் தமது இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களைக் கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடே இதுவாகும்.

சமீபத்தில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெற்ற அடாவடித்தனமான, சுற்றிவளைப்பு, தேடுதல், கைதுகள் மற்றும் வண.பிதாக்கள் ஒன்றுமறியாத தாய் இராஜேஸ்வரி மற்றும் பராயமடைந்த மகள் கைது விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கவனத்திலெடுத்து இங்குள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

16/3/14

ஒசாமா பின் லேடனை போல் பிரபாகரனை பார்க்க வேண்டும்:

ஜெனிவாவில் சில நாடுகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அந்நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை காணக் கூடியதாக உள்ளது என அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒசாமா பின் லேடனைபோல் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்க வேண்டும்.

ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை ஏந்தியவாறு தமிழர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.

இதே போன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒசாமா பின் லேடனின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டிருந்தால், பெரும்பாலான நாடுகள் அதனை கடுமையாக எதிர்த்திருக்கும்.

அதேவேளை ஜெனிவா மனித உரிமை பேரவையில் எந்த சவால் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகளுடன், அதனை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் படிப்படியாக அந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

13/3/14

தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு ஜனாதிபதிக்கு எதிராக..

 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் இன்று முறைப்பாடு செய்தனர்.

ஜனாதிபதி அரச தலைவராக தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவே அவர் பிரசாரங்களில் கலந்து கொள்ள வேண்டும் அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி அரச தலைவருக்கான அரச வளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உட்பட சில வேட்பாளர்களின் இலக்கங்கள் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் அரசியல் அதிகாரம், அரச வளங்களை நாட்டின் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் சம்பந்தமாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளருடான சந்திப்பில் கரு ஜயசூரியவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜேதாச ராஜபக்ஷ, மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

7/3/14

மேலும் இராணுவத்துக்கு 44 தமிழ் யுவதிகள்

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

6/3/14

விசாரணைப் பொறிமுறையை கனடா உறுதிப்படுத்த வேண்டும்!

  ஐ.நா. மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை உறுதிப்படுத்துவதாக அந்தப்

பிரேரணை வாசகம் அமைய வேண்டும். அதற்காக கனடா தான் சார்ந்த நாடுகளோடு கலந்துரையாடி தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு கனடா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சு மீதான விமர்சனத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பான எதிர்கட்சி எம்.பி. போல் டிவரும் மனிதஉரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான எதிர்க்கட்சி எம்.பி. வெயின் மார்ஸ்டனும் கனடா அரசைக் கோரியிருக்கின்றனர்.
  

3/3/14

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்துக்கான முதல் அமர்வு இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளிலேயே இலங்கைக்கு எதிராகக் காட்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஜெனிவா செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான தமது இறுக்கமான நிலைப்பாட்டை ஆரம்ப உரையிலேயே வெளிப்படுத்துவர் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் உரையாற்றுவர்.
அதையடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம் பெறவுள்ளன. அமெரிக்கா சார்பில், ஐ.நாவுக்கான தூதுவரான சமந்தா பவர் உரையாற்றவுள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் முன்வைக்கவுள்ளதால், சமந்தா பவரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சமந்தா பவர், தனது உரையில், இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அவர், கடந்த 27ம் திகதி வெளியிட்ட டுவிற்றர் செய்தியில், ஜனநாயக ஆட்சி முறைக்கும், மனித உரிமைகளுக்கும் இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்றும், மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அழைப்புக்கு ஆதரவளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தக் கூட்டத் தொடரில் உயர்மட்டப் பிரதி நிதிகளின் உரை நிகழ்ச்சி நிரலில், இடம்பெற்றிருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், கனேடிய வெளிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பதிலாக, பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்துக்கான இணை அமைச்சர் ஹியூகோ சுவைரும், கனேடிய வெளிவிவகார இணைய அமைச்சர் லைன் யெயலிச்சும் இன்றைய கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

1/3/14

தயாராகும் அரசாங்கம் நவநீதம்பிள்ளைக்கு பதில்

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சவாலில் வெற்றி பெறுவதற்காக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் 74 விடயங்களுக்கு எதிரான விபரங்களுடன் தகவல்களை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை மீது குற்றம் சுமத்தும் தரப்பினர் மற்றும் போர்க்குற்றங்களை சுமத்தும் சாட்சியாளர்களின் அடையாளங்களை வெளியிடுமாறு சவால் விடுக்க அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 74 விடயங்களில் பல விடயங்கள் உண்மையல்ல என்பதை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் சாட்சியங்களுடன் ஒப்புவிக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதனை தவிர வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரில் நடந்த சம்பவங்களை மட்டும் விசாரணை செய்யாமல், கடந்த 30 வருடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்க தரப்பில் கோரப்பட உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா உட்பட பல நட்பு நாடுகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாட்சியாளர்கள் யார் என்பதை 20 வருடங்கள் வரை வெளியிடாமல் இருப்பது சட்டவிரோதமானது என அரசாங்கம் நேரடியாகவே கூட்டத் தொடரின் போது தெரிவிக்க உள்ளது.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இலங்கைக்கு இடமளிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுக்க உள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.