siruppiddy

28/4/15

சரித்திர முக்கியத்துவ 19வது திருத்தம் வாக்கெடுப்பு இன்று???

முழு நாடும் எதிர்பார்த்த 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எம்பிக்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். முதல்நாள் விவாதம் இரவு 8.30 மணிவரை நடைபெற்றது.
இதன்போது, எதிர்த்தரப்பு சார்பில் பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றதோடு, இதன்போது திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதில், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, பைசர் முஸ்தபா, பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக் குழுவினர் 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களை ஆராய்ந்ததோடு, இன்று காலை மீண்டும் கூடி இது தொடர்பில் இறுதிமுடிவு எடுக்க இருக்கின்றனர்.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, 19வது திருத்தத்துக்கு பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள அநேகமான திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு திருத்தங்கள் தொடர்பிலேயே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. நாளை கூடி (இன்று) இறுதி முடிவு எடுக்க இருக்கிறோம் என்றார்.
இதேவேளை, 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நண்பகல் வரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது. 19வது திருத்தத்துக்கு 20ற்கும் மேற்பட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.
19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருப்பதால் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அடங்கலான 116 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், ஐ.தே.கவின் 41 உறுப்பினர்களின் ஆதரவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் 13 எம்பிக்களினது ஆதரவும், ஜனநாயக தேசிய முன்னணியின் மூன்று உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவும் 19வது திருத்தத்துக்குக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதேவேளை சில ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் 19வது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பி;ல் இன்று காலை வரையான முக்கிய நிகழ்வுகள்
19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, நேற்று இரவு அரசாங்கத்தின் குழுவில் அடங்கியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், அஜித் பி பெரேரா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஎம் ஏ சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதிக்கு விளங்கப்படுத்தினர்.
அரசியலமைப்பு சபை மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பதில் ஜனாதிபதியின் ஆலோசனைகளை பிரதமர் பெறவேண்டும் என்ற இரண்டு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தின.
இதனையடுத்து பிரச்சினைகளை களைவதற்காக நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ரவூப் ஹக்கீம், எம் ஏ சுமந்திரன், பிரதியமைச்சர் அஜித் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா, பைசர் முஸ்தபா, ரஜீவ விஜேசிங்க ஆகியோருடன் நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த சட்டமா அதிபர் யுவஞ்சன வணசுந்தர மத்தியஸ்தராகவும் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்.
இந்தக்குழு 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள 90வீத விடயங்களில் இணக்கங்களை கண்டது.
எனினும் அரசியலமைப்பு சபையானது, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் சுயாதீன உறுப்பினர்களாக அமையாது, நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டமைய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனைதவிர அரசியலமைப்பு சபையில் சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் அடங்கியிருக்க வேண்டும் என்று அவர் இணக்கம் வெளியிட்டனர்.
எனினும் அமைச்சரவை நியமிப்பில் பிரதமர், ஜனாதிபதியின் ஆலோசனையை பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சேபித்தது.
19வது திருத்தத்தில் பிரதமருக்கு உள்ள ஒரே அதிகாரம் அதுமட்டுமே என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியது.
இந்தநிலையில் நேற்று மாலை பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை சந்தித்து உரையாடினர்.
இந்த கலந்துரையாடலை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்.
இதேவேளை ஜனாதிபதியினால் நேற்று காலை நியமிக்கப்பட்ட குழு நேற்று மாலை வரை பல சந்திப்புக்களை நடத்திய போதும் பிரச்சினைகளை களைவதற்கான இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று நாடாளுமன்றத்தில் 19வது திருத்தம் தொடர்பான விவாதம் இரண்டாம் நாளாக தொடரவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



23/4/15

நாடாளுமன்றம் கலைக்கப்படாது மைத்திரி உறுதி

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டம்  இன்று 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22/4/15

அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் போராட்டம்!!!

வடமராட்சி கிழக்கில் அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் இன்று  தமது பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடி;கைகளை வலியுறுத்தி  10 அம்சகோரிக்கைள் வைத்து உண்ணா விரதப்போராட்டம்  ஒன்றினை நடத்தினர். பின்னர் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இவ் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று அரச ஆதரவு சக்திகளால் பொது மக்களை நோக்கி கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.அதையும் தண்டி மக்கள் போராட்டத்தினை நடத்தியுள்ளனர் .
மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினை தெரிவித்து பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். அதே போல் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

21/4/15

இன்­றைய தினம் நாடாளுமன்றத்தில் பசில்!

முன்னாள் பொரு­ளாதார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ச இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
இன்று பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் இலங்­கைக்கு வருவேன் எனவும் பாரா­ளு­மன்ற அமர்வில் கலந்­து­கொள்வேன் எனவும் பஷில் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.
தனிப்­பட்ட கார­ணத்­திற்­காக அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றி­ருந்தேன். அதன்­படி திட்­ட­மிட்­டி­ருந்த தினத்தில் நான் நாடு திரும்­பு­கின்றேன். இது இர­க­சி­ய­மா­ன­தல்ல. நான் எந்­த­வி­த­மான நிதி மோச­டி­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இதே­வேளை ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்­றி­ருந்த பஷில் ராஜ­பக்ச மீது நிதி மோசடி குற்­றச்­சாட்­டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

18/4/15

மீண்டும் முன்னாள் முதலமைச்சர் வரதர் யாழினில் !!!


வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் மீண்டும் யாழ்.திரும்பியுள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்து உரையாடியிருந்தார்.ஈபிடிபி அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களான இரா.சிவச்சந்திரன்,சுந்தரம் டிவகலாலா ஏற்பாட்டினில்  இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள 'ஆறுதல்' அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் 'முதலமைச்சராக எனது அனுபவம்' என்ற தலைப்பில் அவர் கருத்துரை வழங்குகிறார்.
பின்னர் ஆனந்த சங்கரியையும் அவர் சந்திக்கின்றார்.இந்திய அரசின் ஏற்பாட்டினில் வருகை தந்திருக்கும் அவர் யாழிலுள்ள துணை தூதுவராலயத்தினில் இரகசிய சந்திப்புக்களையும் நடத்தியுள்ளார்.
கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய கூட்டு ஒன்றை தோற்றுவிப்பதில் அவர் ஆர்வம் காட்டிவருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15/4/15

பெரும்பான்மை! ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் சுரேஸ்!!!

 நான்கு கட்சிகளது கூட்டமைப்பான தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்குள் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அதில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்தேசியகூட்டமைப்பின் ஒதுக்கீடுகளில் 51வீதம் தமிழரசுக்கட்சிக்கும், ஏனைய 49 வீதத்தை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொள்ளட்டும் என்றும் அவ்வாறான நிலைப்பாட்டிற்கு சம்மதித்தாலே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலேயே கைச்சாத்திடுவதென தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுகட்சயின் ஆலோசனையினை
 நிராகரித்துள்ளார். நான்கு கட்சிகளது கூட்டமைப்பான தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்குள் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியதென தெரிவித்த அவர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களென்ற 
வகைப்படுத்தல் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதொன்றெனவும் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சிக்கு 51 வீத ஒதுக்கீடு தேவையென்ற தீர்மானத்தை தமிழரசுக்கட்சியின் மாவட்டக்கிளையொன்று தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி எடுக்கும் தீர்மானங்களே இறுதியானவை. மாவட்டக்கிளைகள் எடுக்கும் தீர்மானங்கள் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து தமிழரசுக்கட்சிக்கு இரண்டு வரைபுகளை வழங்கியுள்ளோம். அதில் கட்சிகள் அனைத்திற்கும் சமஅந்தஸ்தை கோரியுள்ளோம். எனவே தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோமெனவும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

12/4/15

ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவி.

ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட மகிந்தராஜபக்ஷவின் மருமகன் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவி கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கான தூதுவராக இருந்த அவர், யுக்ரெயின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் அவரை கைது செய்ய இன்டர்போலின் உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு கோரிக்கை விடுக்கப்படும் 
என்று அவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

4/4/15

தமிழ்நாடு சென்று பேச்சு நடத்த தயார்! தீர்வு காணும் முயற்சியில்

மீனவர்கள் பிரச்சினைக்கு வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம், இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாணசபையும் தமிழ்நாடு அரசும் இந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசுடன் சிறிலங்கா அதிபர் மீனவர்கள் பிரச்சினை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழ்நாடு சென்று பேச்சு நடத்தவும் தான் தயாராக இருப்பதாக அவர் கூட்டத்தில் தெரிவித்ததாகவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், கடல் வளங்கள் சுரண்டப்படுவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்த மீன்பிடிமுறையை இலங்கைக் கடற்பரப்பில் முழுமையாக தடை செய்வதற்கான வலுவான சட்டத்தை கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இருதரப்பு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் நடந்த மீனவர்களுக்கிடையிலான கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட, ஆண்டுக்கு 83 நாட்கள் சிறிலங்கா கடற்பரப்பில், இந்திய மீனவர்களை அனுமதிக்கக் கோரும், யோசனையும் இந்தக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு கடலோரக் காவல்படையை பயன்படுத்துமாறு கோரும் மனு ஒன்று சிறிலங்கா அதிபரிடம், வடக்கு மாகாண கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில், சிறிலங்கா அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்திய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

2/4/15

அரசியல் தீர்வு காண மைத்திரி அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் ????

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
சிறிலங்காவுக்குப் பயணம் 
மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.

கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர்.

இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி மைத்திரி அரசை ஆட்சிபீடத்தில் ஏறவைத்தனர் தமிழ் மக்கள்.

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இதுவரைக்கும் கெடுபிடிகள் இல்லை. ஆனால், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு தாமதம் காட்டுகின்றது.

காலஅவகாசம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். இதற்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.

வலிகாமம், சம்பூர் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
மக்கள் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு நிறுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
 செய்யப்பட வேண்டும். காணாமல்போனோர் மற்றும் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பில் 
அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளோம்.
அத்துடன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மைத்திரி அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க செனட் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதல்வர் உள்ளிட்டோருடனும் 
கலந்துரையடியிருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழர்களின் பிரச்சினைகள் விடயத்தில் புதிய அரசாங்கம் மெத்தனப் போக்குடனேயே நடந்து கொள்வதாகவும் மெதுவாகவே செயற்படுவதாகவும் அமெரிக்க செனட் குழுவினரிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>