siruppiddy

31/1/14

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களுக்காக போராடினார்:

அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து வருவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை வட பகுதி மக்கள் விரும்பவில்லை.

அதேவேளை வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த சகலவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அவர் தமிழர்களுக்காக போராடிய ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் கூட நாட்டில் தமிழர்களின் போராட்டம் இடம்பெற்றுதான் வருகிறது.
நவசமசமாஜ கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஐக்கிய கூட்டமைப்பில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் வடக்கில் மட்டுமல்ல கொழும்பிலும் போராட வேண்டும் என விக்னேஸ்வரன் கூறினார்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டது என இராணுவப் பேச்சாளர் நாட்டுக்கு தெரிவிப்பதற்கு அப்பால் சென்று சர்வதேசத்திற்கும் அந்த செய்தியை வழங்க வேண்டும் என்றார்.

29/1/14

முரளிதரன், சந்திரகாந்தனிடம் விசாரணை நடத்த கோரிக்கை

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி நகரசபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய குறித்த இயக்கத்தின் உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி, ’1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் 2004ஆம் ஆண்டு பேத்தாளையில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் விசாணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

காத்தான்குடி நகர சபையின் மாதாந்த கூட்டம் நகரசபை தலைவர் ஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்ட பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சபில் நழீமி, ‘இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகள்  காரணமாகவும், யுத்தம் காரணமாகவும் காணாமற் போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினை நாம் வரவேற்கின்றோம்’ என்றார்.

காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து காணாமற் போனவர்கள் தொடர்பிலான தகவல்களைச் சேகரித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், அந்த தகவல்களை மேற்படி ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை மேற்படி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இதற்கு காத்தான்குடிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரேரணைக்கு ஆரதவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்’ என்றார். குறித்த இயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளானவை,
 கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவைகளைத் தோண்டுதல்.
கடத்தப்பட்டு கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எலும்புக்கூடுகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான மரணச்சடங்குகளை உரிய சமய ஆசாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளல்.
   அவ்வாறு கடத்திக் கொல்லப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ;ட ஈடுகளை வழங்குதல்
.
   மேற்படி கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவோரினை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல்.

கடந்த 30 வருட கால இன முரண்பாடுகளால், யுத்தத்தினால் காணாமற் போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு இந்த பிரேரணையை பரிசீலித்து நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கின்றோம்’ என்றார்.

இதேவேளை, ‘பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டுமெனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்’ என தெரிவித்த சபில் நழீமி, இது தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சுயேட்சகை;குழு உறுப்பினர்களான ஏ.எல்.எம். சபீல், எம்.எச்.ஏ.நசீர் ஆகியோர் கையொப்பமிட்ட பிரேரணையையும் சபைக்கு சமர்ப்பித்தார்.

இந்த பிரேரணை தொடர்பில் ஆராய்ந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், ஏற்கனவே காத்தான்குடியிலும் அதனை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள்
தொடர்பாக சேகரிக்கப்பட்ட விபரங்களை காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கையளித்து அது தொடர்பாக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்துவருவதால் இவ்வுறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஏற்கனவே இந்த விவகாரம் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில் அரசியல் இலாபத்திற்காக இந்த பிரேரணை இவர்கள் சமர்பித்ததாகவும் இந்த வியடமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நடவடிக்கை எடுத்து வருவதால் அவருக்கு இதற்கான ஒத்துழைப்பினை காத்தான்குடி நகர சபை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சுயேட்சைக்குழு காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதமும் கருத்துப் பறிமாறல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

12/1/14

வட்டுக்கோட்டைப் பகுதியில்படைமுகாமை அகற்றக்கோரி???

பிளாவத்தை படைமுகாமை அகற்றக்கோரி நேற்றிரவு பொதுமக்கள் போராட்டம்!  – பெண்களுடன் சேட்டை விட்டதால் மக்கள் கொதிப்பு.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பிளாவத்தை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை நேற்றிரவு மேற்கொண்டனர். குறித்த படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் அருகாகவுள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த பெண்கள்;

 மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்றிரவும் அருகாகவுள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் வசித்து வரும் வீடுகள் மீதே படைமுகாமில் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளன. இதையடுத்து திரண்ட பொதுமக்கள் படைமுகாமை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில்; குதித்தனர்.
   
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போதும் பொலிஸார் அம்முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். எனினும் முறுகல் நிலை

வலுவடைந்ததையடுத்து குறித்த முகாமைச் சேர்ந்த படையினர் அம்முகாமிலிருந்து வெளியேறி அருகாகவுள்ள பிரதான முகாமான வடலியடைப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அண்மையில் குறித்த முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் குளித்துக் கொண்டிருந்த கிராமப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதையடுத்து, அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தினால், அச்சிப்பாய்கள் முகாமிலிருந்து இடமாற்றப்பட்டதுடன் அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

9/1/14

அமெரிக்கத் தூதரகத்தின் நடவடிக்கைக்கு இராணுவத்தினர் எதிர்ப்பு

அமெரிக்கத் தூதரகத்தின் நடவடிக்கைக்கு இராணுவusaத்தினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கத் தூதரகம் அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இரணபாலை புனித அந்தோனியார் மைதானத்தில் இராணவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக அமெரிக்கத் தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளதாகவும், இது முற்றிலும் அடிப்படையற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்பட உள்ள சூழ்;ச்சித் திட்டத்தின் ஓர் கட்டமாகவே இதனை நோக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் காயமடைந்து உயிரிழந்த புலிப் போராளிகளின் சடலங்களை ஒப்படைப்பதற்கு குறித்த மைதானம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசம் பாதுகாப்பானதாக இருந்திருக்காவிட்டால் புலிகள் அந்த மைதானத்தை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த விதமான உறுதிப்படுத்தல்களும் இன்றி அமெரிக்கத் தூதரகம் அடிப்படையற்ற வகையில் டுவிட் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

போலியான குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்ப்பளிக்கும் வகையில் அமெரிக்க தூதரகம் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்கள் தொடர்பில் விளக்கம் கோரப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்தப்படாத போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

8/1/14

ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு ???

3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன' என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் உள்ளிட்ட குழுவினரிடம் தான் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

  'படையினரால் பயன்படுத்தப்பட்ட இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவே பெரும்பாலான பொதுமக்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர்' என்றும் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிவதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த இவர், யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்;னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசனும் கலந்துகொண்டார். இதன்போதே மன்னார் மறைமாவட்ட ஆயரினால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர், 'இறுதிக்கட்ட யுத்தத்தின் போது குண்டுத் தாக்குதல்களால் காயமடைந்த மக்கள் புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான உரிய மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. அதற்கான அனுமதியினை பாதுகாப்பு தரப்பினர் வழங்கவில்லை' என்றார்.

 'செம்மணி புதைகுழியில் 500க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் நீதிமன்ற அனுமதியுடன் அது தோண்டப்பட்ட போது மூன்று அல்லது நான்கு சடலங்கள் மட்டுமே இருந்தன. ஏனைய சடலங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை' என்று தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

 'காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்கான தீர்வினைப் விரைவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆயர், யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கான சுதந்திரம் இங்கு காணப்படுவதில்லை'
அத்துடன், '2008 ஜூன் மாதம் முதல் 2009 மே மாதம் வரையில் வடக்கிலிருந்த பொதுமக்களின் சனத்தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இக்காலப் பகுதியிலிருந்த 146,000 பேர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் இல்லை' என்றும் அந்த குழுவினரிடம் சுட்டிகாட்டியதாக அவர் தெரிவித்தார்.

இராணுவம் மறுப்பு
 மன்னார் ஆயரின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய இந்த வகையான குண்டுகளை தாம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றார்.
கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை. விமானக் குண்டுத்தாக்குதல்களை நடத்தினோம். அதுவும், யுவிஎப்பினால் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளையே பயங்கரவாதிகளில் சரியான இலக்குகளின் மீதே தாக்குதல்களை நடத்தினோம்.
இரசாயன குண்டுகளை புலிகளே பயன்படுத்தினர் என்றும் அவர் கூறினார்

7/1/14

இயக்குனர், இசையமைப்பாளர்கள், நடிகர்களால் இது முடியுமா...?

அமெரிக்க ஹிபொப் கலைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி நிகழ்சியொன்றில் பங்கேற்றதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குறித்த ஹிபொப் கலைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி பாடல் பாடியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபல இசைக் கலைஞர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி பாடல் பாடியதுடன் விடுதலைப் புலிகள் பற்றி மேடையில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கரகோசம் எழுப்புமாறு ஒரு கலைஞர் ரசிகர்களிடம் கோரியதுடன் தாமும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியக் கொடியை தோற்கடிக்கப்பட்டாலும் சுதந்திரப் போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெட் பெர்ஸ் என்ற ஹிபொப் கலைஞர்களே இவ்வாறு தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழன், தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் தமிழ் இயக்குனர், இசையமைப்பாளர்கள், நடிகர்களால் இது முடியுமா...?
 

5/1/14

பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்:

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.

முல்லிவாய்க்கால் முற்றம் தொடர்பாக 4வது கட்ட நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் விரைவு ரயிலில் புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

மீனவர்கள் பிரச்சனை தீரவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மீனவ மக்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மீனவர்கள் நலன் பாதுகாக்க மீனவர் பாதுகாப்பு படை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

உலகிலேயே 5வது இடத்தில் இருக்கும் மிகப்பெரிய இந்திய கடற்படை சிங்களர்களின் கொட்டத்தை அடக்கி தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டது. அதோடு தொடர்ந்து தமிழர்களின் விரோதப்போக்க்கையே இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஈழத்தமிழர்கள் கொல்லபட்ட முழு விபரங்கள் தெரியாது இருந்த போதே கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பலர் தோற்கடிக்கப்பட்டனர். வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதோடு கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளையும் மக்கள் முற்றிலுமாக தோற்கடிப்பார்கள் என்று தெரிவித்தார்.