siruppiddy

6/3/14

விசாரணைப் பொறிமுறையை கனடா உறுதிப்படுத்த வேண்டும்!

  ஐ.நா. மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை உறுதிப்படுத்துவதாக அந்தப்

பிரேரணை வாசகம் அமைய வேண்டும். அதற்காக கனடா தான் சார்ந்த நாடுகளோடு கலந்துரையாடி தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு கனடா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சு மீதான விமர்சனத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பான எதிர்கட்சி எம்.பி. போல் டிவரும் மனிதஉரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான எதிர்க்கட்சி எம்.பி. வெயின் மார்ஸ்டனும் கனடா அரசைக் கோரியிருக்கின்றனர்.
  

3/3/14

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்துக்கான முதல் அமர்வு இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளிலேயே இலங்கைக்கு எதிராகக் காட்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஜெனிவா செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான தமது இறுக்கமான நிலைப்பாட்டை ஆரம்ப உரையிலேயே வெளிப்படுத்துவர் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோர் உரையாற்றுவர்.
அதையடுத்து, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம் பெறவுள்ளன. அமெரிக்கா சார்பில், ஐ.நாவுக்கான தூதுவரான சமந்தா பவர் உரையாற்றவுள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா மீண்டும் முன்வைக்கவுள்ளதால், சமந்தா பவரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சமந்தா பவர், தனது உரையில், இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அவர், கடந்த 27ம் திகதி வெளியிட்ட டுவிற்றர் செய்தியில், ஜனநாயக ஆட்சி முறைக்கும், மனித உரிமைகளுக்கும் இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்றும், மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அழைப்புக்கு ஆதரவளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தக் கூட்டத் தொடரில் உயர்மட்டப் பிரதி நிதிகளின் உரை நிகழ்ச்சி நிரலில், இடம்பெற்றிருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், கனேடிய வெளிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பதிலாக, பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்துக்கான இணை அமைச்சர் ஹியூகோ சுவைரும், கனேடிய வெளிவிவகார இணைய அமைச்சர் லைன் யெயலிச்சும் இன்றைய கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

1/3/14

தயாராகும் அரசாங்கம் நவநீதம்பிள்ளைக்கு பதில்

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சவாலில் வெற்றி பெறுவதற்காக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் 74 விடயங்களுக்கு எதிரான விபரங்களுடன் தகவல்களை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை மீது குற்றம் சுமத்தும் தரப்பினர் மற்றும் போர்க்குற்றங்களை சுமத்தும் சாட்சியாளர்களின் அடையாளங்களை வெளியிடுமாறு சவால் விடுக்க அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 74 விடயங்களில் பல விடயங்கள் உண்மையல்ல என்பதை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் சாட்சியங்களுடன் ஒப்புவிக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதனை தவிர வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரில் நடந்த சம்பவங்களை மட்டும் விசாரணை செய்யாமல், கடந்த 30 வருடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்க தரப்பில் கோரப்பட உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா உட்பட பல நட்பு நாடுகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாட்சியாளர்கள் யார் என்பதை 20 வருடங்கள் வரை வெளியிடாமல் இருப்பது சட்டவிரோதமானது என அரசாங்கம் நேரடியாகவே கூட்டத் தொடரின் போது தெரிவிக்க உள்ளது.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இலங்கைக்கு இடமளிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுக்க உள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.

27/2/14

பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நிபுணர்கள் குழு

இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை கண்டறிய பொருளாதார நிபுணர்களை கொண்டு குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, ரெஜினோல்ட் குரே, திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

பொருளாதார தடைகளை விதிக்க கூடிய அளவில் பாரதூரமான நிலை தற்போது ஏற்படவில்லை என்றாலும் நிலைமை மோசமாகி இறுதியில் அப்படியான நிலைமை உருவாகினால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றின் ஊடாக விடயங்களை ஆராய்வது முக்கியமானது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

25/2/14

இந்தியாவுடன் பேச வேண்டியுள்ளது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும்.
வரும் 3ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலதிகமாக இது இடம்பெறும்.
தீர்மானம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம்.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆரதரவு தரும் நாடுகளுடன் நாம் பேச வேண்டும்.
தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம், சிறிலங்காவிலும், ஜெனிவாவிலும் உள்ள ஆதரவு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேசுவோம்.
ஜெனிவா செல்லும் குழு குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.  இந்தியாவுக்கும் ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.
நாம் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை உள்ளது. பெரும்பாலும் அங்கு செல்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜெனிவா தீர்மானம் மற்றும் இரணைமடு நீர் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த, நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூடமைப்பின் உயர்மட்டக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளது.

இரா.சம்பந்தன் தலையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

9/2/14

திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்

சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.
திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 5 மணிக்கு திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய கலாச்சார உடையான புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவர் கடைக்குள் இருக்கும் வரை வேறு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிராந்தி இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். இவருடன் 33 பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

6/2/14

குண்டுமீட்கப்பட்டது திருமலையில்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு  கடற்கரைக்குபின் புறமாக முப்பது கிலோநிறை கொண்ட குண்டு  ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.   இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு  முப்பது கிலோநிறை கொண்டது.  நான்கு அடி நீளம் கொண்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இலங்கையில் இவ்வாறன குண்டு இதுவரை காலமும் பாவிக்கப்படவில்லை என்று கடற்படையினரும், இராணுவத்தினரும் தெரிவிக்கின்றனர்.   அந்த குண்டை சலப்பையாறு கடற்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.