siruppiddy

8/11/13

‘மெத்தப்படித்த கனவான்களின்’ அதிமேதாவித்தனம்!

                             
 
இலண்டனில் உள்ள டவுணிங் வீதியில் அமைந்திருக்கும் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலத்தில் நேற்று 07.11.2013 வியாழக்கிழமை பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, இனவழிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை மீளப்பெறுமாறு பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக (15 மீற்றர் தொலைவில்) கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் ஈடுபட்டு வரும் நிலையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இவையெல்லாம் இன்று இணையத்தளங்களில் பரபரப்பாக வரப்போகும் செய்திகள்தான்.
ஆனால் இந்தப் பரப்பரப்புக்குள் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி உள்ளது.

அது மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தி!
அது இதுதான்:
பிரித்தானியப் பிரதமரைச் சந்திக்கச் சென்ற பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் ‘மெத்தப்படித்த கனவான்கள்’ எவரும் நான்கு நாட்களாக உணவேதுமின்றி கடும் குளிரில் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் பட்டினிப் போரில் ஈடுபடும் பரமேஸ்வரனை பிரதமரின் வாசத்தலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

சரி. இதற்கு பாதுகாப்பு அனுமதி கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
போகும் வழியில் ஒரு நிமிடம் தானும் தமது வாகனத்தை நிறுத்தி பரமேஸ்வரனை சந்தித்து அவரது உடல்நலம் குறித்தாவது விசாரித்தார்களா? அதுவும் இல்லை.

ஏன் பிரதமரை தாம் சந்திக்கச் செல்வது பற்றி அவரிடம் தொலைபேசி வாயிலாகக் கூட இந்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’ தெரிவிக்கவில்லை.
போனால் போகட்டும். போகும் அவசரத்தில் இப்படிச் செய்து விட்டார்கள் என்று நாம் எம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் இவர்களை சந்திக்கச் சென்றது பிரித்தானியப் பிரதமரை அல்லவா?
சரி. திரும்பி வரும் வழியிலாவது பரமேஸ்வரனை சந்தித்திருக்கலாம் அல்லவா?
ஆனால் அப்படியெதுவுமே நடக்கவில்லை.
மாறாக...
பிரித்தானியப் பிரதமரை சந்தித்த மகிழ்ச்சியில் 10 டவுணிங் வீதியை விட்டு வெளியேறினார்கள் இந்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’.


இவர்களில் ஒருவருக்குத் தானும் பரமேஸ்வரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற எண்ணமே இருக்கவில்லை. அல்லது பரமேஸ்வரனின் உடல்நலம் பற்றி விசாரிக்கும் சிந்தனையும் இருக்கவில்லை.
தமது கோட் பட்டன்களை இறுகப்பூட்டிக் கொண்டு பரமேஸ்வரன் என்ற இளைஞன் அருகில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருப்பதைக் கூட அறியாதவர்கள் போன்று அங்கிருந்து அகன்றுவிட்டார்கள்.
ஆனால் இவர்களில் இருந்து சற்று மாறுதலாக வீதியைக் கடந்து அங்கு வந்தார் இனவழிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பின் பிரதிநிதி ஜனனி ஜனநாயகம்.

தமது முகங்களைத் திருப்பிக் கொண்டு ‘மெத்தப்படித்த கனவான்கள்’ அங்கிருந்து அகன்று செல்ல ஜனனி ஜனநாயகம் மட்டும் பரமேஸ்வரனை சந்தித்து உரையாடினார். பிரதமருடனான சந்திப்பில் நடந்ததை எடுத்து விளக்கினார்.

இவற்றையெல்லாம் அங்கிருந்து அவதானித்த மூத்தவர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்: ‘‘தம்பி. 70களிலை அமிர்தலிங்கத்தாரும், கூட்டணிக்காரரும் செய்த கூத்தை இப்ப இந்தப் பேரவைக்கார கோட் சூட் போட்ட ஆக்கள் செய்யினம். அவையள் வேட்டியும், சேட்டும் போட்டிருந்து சனத்தை ஏமாத்தினவை. இவையள் கோட்டும் சூட்டும் போட்டிருக்கினம். அவ்வளவுதான் வித்தியாசம்’’ என்றார் அந்த மூத்தவர்.
இன்னொரு விதத்தில் கூறுவதானால்:

‘மெத்தப்படித்த கனவான்கள்’ பற்றி 2008ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாக கணித்ததும், அதனை அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) எடுத்துரைத்ததும் மீண்டுமொரு தடவை இலண்டனில் நிரூபணமாகியுள்ளது.
 

பரமேஸ்வரனின் நியாயமான போராட்டத்துக்கு மக்கள் திரளவேண்டும்:



பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்ற பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை, இந்தப் போராட்டக் கோரிக்கை தொடர்பாக உடனடியாக பிரித்தானியா தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இது முற்றிலும் நியாயமான போராட்டம் என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் இரங்க மறுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு நாங்கள் ஒப்பற்ற ஒரு இளைஞனை உண்ணாவிரதப் போராட்டம் மூலமாக இழந்தோம். அன்று இந்தியா செய்த தவறை இன்று பிரித்தானியா செய்யாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் பிரித்தானியாவிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அலை அலையாக திரண்டு சென்று தமது ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் ஹமரூன் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பரமேஸ்வரன் தனது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றமையை நாம் உணர்ந்துகொள்கின்றோம். இந்த உறுதிக்கு அவரை நாம் பாராட்டுகின்றோம்.
எவனொருவன் தனது இலட்சியக் கனவில் உறுதியாக நிற்கின்றானோ

அவனே உண்மையான தியாகி. அவனே உண்மையான வீரன். அந்த வகையில் இங்கே தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக அங்கே பிரித்தானியாவில் ஒரு உறவு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பாக நாம் மெய் சிலிர்க்கின்றோம். ஈழத் தமிழ் மக்கள் என்றும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அவருக்கு வெளிப்படையாகவே நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

இதேவேளை, பரமேஸ்வரனின் கோரிக்கை நியாயமானது. போர்க்குற்றம் செய்த மகிந்த ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடைபெறுவது கேலிக்கூத்தானது. மகிந்தவும் அவரது அமைச்சர்களும் போர்க்குற்றவாளிகள். அவர்கள் சர்வதேசத்தால்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மகிந்தவைப் பிடித்து தண்டிப்பதற்குப் பதிலாக அவரது தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் பிரித்தானியப் பிரதமர் அதில் கலந்துகொள்வது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி அவர்களுடைய ஆசைகளை நிராசைகளாக்குகின்ற செயற்பாடாகும்.

எனவே, பரமேஸ்வரன் போன்ற தேசியப் பற்றாளர்கள், பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் போன்றோரின் கோரிக்கையை ஏற்று பிரித்தானியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விடுவதையே நாங்கள் விரும்புகின்றோம்.

கடந்த 1987 ஆம் ஆண்டும் தாயகத்தில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த போது 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து எங்கள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், துரதிஸ்டவசமாக இந்திய அரசாங்கமானது அவரது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் எமது ஒப்பற்ற ஒரு வீரனை நாம் இழந்தோம். அதே நிலை எமது பரமேஸ்வரனுக்கு ஏற்படக்கூடாதென்றே நாம் விரும்புகின்றோம். அன்று இந்தியா செய்த தவறை இன்று பிரித்தானியா செய்யாது என்று நாம் நம்புகின்றோம்.

எனவே, பரமேஸ்வரன் விடயத்தில் பிரித்தானியா அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று நாம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றோம். உலகுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்ற பிரித்தானியப் பிரதமர் இந்த

 விடயத்தில் உடனடியாகத் தலையிடுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.
மேலும், பரமேஸ்வரன் எங்கள் உறவு. அவர் எங்களுக்காக போராடுகின்றார். அவரைத் தனித்து விடவேண்டாம் என்று ஈழத் தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

 அவரது போராட்ட அமைவிடத்திற்கு பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அலை அலையாக அணி திரள்வதன் மூலம் அவரது கோரிக்கை வலுப்பெறும். எனவே இந்த விடயத்தில் பிரித்தானிய வாழ். ஈழத் தமிழ் மக்கள் உடனடியாக சிந்தித்து செயலாற்றுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

7/11/13

கைக்குண்டுகளும் துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் மீட்பு

                                 

யாழ்.கொடிகாமம் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் உட்பட ஒருதொகுதி துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் புகையிரத நிலைய வீதிக்கு அருகிலுள்ள அன்ரனி என்பவருக்கு சொந்தமான

காணியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே இவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த கிணற்றினை தூர்வாறுவதற்காக இறைத்த போதே குறித்த வெடி பொருட்கள் வெளிப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அவை மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்.கோப்பாய் பகுதியில் கைவிடப்பட்ட பற்றைக்காணியிலிருந்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

6/11/13

நினைவு முற்றத்தை இடித்து தகர்க்க வேண்டும் என்று சிலர்:"

                         
 
ஈழத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது நினைவு சின்னமாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் செயல்படும்.
இதனை இடிக்க நினைத்தால் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் ஆன்மா, மன்னிக்காது. இவ்வாறு பழ. நெடுமாறன் கூறினார்.தஞ்சை விளார் சாலையில் 1ž ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்

அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் நுழைவு வாயிலில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் வளாகத்தில் உள்ள தமிழ்தாய் சிலைக்கு மாலை அணிவித்தார். இதனை தொடர்ந்து பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தோழமை கட்சியினர், மக்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. ஆனாலும் வழக்கம் போல் 8, 9, 10ந் தேதிகளில் விழா நடைபெறும்.
8ந் தேதி மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள முத்துக்குமார் திடல் பாலச்சந்திரன் அரங்கில் விழா நடைபெறும்.

விழாவில் அழைப்பு விடுத்துள்ள அனைத்து தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக உலக தமிழர் உதவியுடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் வேலை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இது யாருக்கும் எதிரானது அல்ல. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோவில். இதனை சிலர் இடிக்க, தகர்க்க வேண்டும் என்று ஈடுபட்டனர்.

மத்திய உளவுதுறை பொலிஸார் இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனை யார் தடுக்க நினைத்தாலோ, இடிக்க நினைத்தாலோ அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உலக தமிழர்கள் வந்து வழிபட்டு செல்லும் புனித இடமாக செயல்படும். தமிழர்களின் நினைவு இடமாக விளங்கும். ஈழத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது நினைவு சின்னமாக இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் செயல்படும்.

இலங்கையில் நடைபெற்ற போரை கண்டித்து தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேர் தீக்குளித்து இறந்தனர். அவர்களின் நினைவு சின்னமாக விளங்கும்.

இதனை இடிக்க நினைத்தால் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் ஆன்மா, முத்துக்குமார் ஆன்மா மன்னிக்காது. மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது.

4/11/13

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்தஞ்சையில் திறப்பு:

                              
தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
”வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி வருகிற 8 ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள், தஞ்சை, விளார் சாலையில் அமைந்துள்ள முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்காக விளார் சாலையில் உள்ள நினைவு முற்றத்தின் அருகிலேயே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த பந்தலிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கலந்து கொள்பவர்கள் தங்குவதற்குத் திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா தொடங்குகிறது. ஈழ கவிஞர் காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார். முனைவர் ம.நடராஜன் தலைமையில் நான் (பழ.நெடுமாறன்) திறந்து வைக்கிறேன். வைகோ, தா.பாண்டியன், பொன்.ராதாகிருஷ்ணன், இரா.இளவரசு, த.வெள்ளையன், சுப.உதயகுமார், தஞ்சை அ.ராமமூர்த்தி, பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

மலேசிய துணை அமைச்சர் வேதமூர்த்தி வி.ஐ.டி.வேந்தர், ஜி.விசுவநாதன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்ழக துணை வேந்தர் பொன்னவைக்கோ, விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் சுண்முகசுந்தரம் ஆகியோர் நூல்களை வெளியீட்டு உரையாற்றுகிறார்கள்.
2ஆம் நாள் நிகழ்ச்சி

இரண்டாம் நாள் நிகழ்ச்சியான 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் மாணவர் அரங்கத்திற்கு சி.தினேஷ் தலைமை வகிக்கிறார். செம்மியன் தொடங்கி வைக்கிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் மகளிர் அரங்கத்திற்கு முனைவர் கல்பனா தலைமை தாங்குகிறார். ம.பொ.சி. மாதவி பாஸ்கரன் தொடங்கி வைக்கிறார். மாலை 3 மணிக்கு நடைபெறும் பாவலர் அரங்கிற்கு இன்குலாப் தலைமை தாங்குகிறார். த.பழமலய் தொடங்கி வைக்கிறார்.
மாலை 5 மணிக்கு நடைபெறும் அறிஞர் அரங்கிற்கு முனைவர்

இரா.இளங்குமரனார் தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழண்ணல் தொடங்கி வைக்கிறார். மாலை 7 மணிக்கு நடைபெறும் பொது அரங்கிற்கு இரா.நல்லகண்ணு தலைமை தாங்குகிறார் சா.சந்திரேசன் தொடங்கி வைக்கிறார். இதில் சீமான், டாக்டர் கிருஷ்ணசாமி, கொளத்தூர் மணி, வேல்முருகன், குடந்தை சோ.அரசன் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.
3ஆம் நாள் நிகழ்ச்சி

மூன்றாம் நாள் நிகழ்ச்சியான 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் உலகத் தமிழர் அரங்கத்திற்கு நீதி நாயகம் கே.சந்துரு தலைமை வகிக்கிறார். மலேசியா இரா.திருமாவளவன் தொடங்கி வைக்கிறார். பகல் 11.30 மணிக்கு நடைபெறும் அறிஞர் அரங்கத்திற்கு முனைவர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். திருவாவடுதுறை ஆதீன இளவரசு தொடங்கி வைக்கிறார்
. மாலை 3 மணிக்கு நடைபெறும் பிற மாநிலத் தமிழர் அரங்கிற்கு சி.ராமமூர்த்தி தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழப்பன் தொடங்கி வைக்கிறார்.

மாலை 5 மணிக்கு நடைபெறும் திரைத்துறை அரங்கிற்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்குகிறார். கலைப்புலி தாணு தொடங்கி வைக்கிறார். நடிகர்கள் சத்தியராஜ், சிவக்குமார், ராஜேஷ், இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வெ.சேகர், தங்கர் பச்சான், ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.

மாலை 7 மணிக்கு நடைபெறும் பொது அரங்கிற்கு கி.த.பச்சையப்பன் தலைமை தாங்குகிறார். சேலம் மு.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைக்கிறார். இறுதியாக நான் (பழ.நெடுமாறன்) நிறைவுரையாற்றுகிறேன்.
இந்த மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

3/11/13

சிறிலங்கா கலக்கத்தில் புதிய போர்க்குற்ற ஆதாரம்;


போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி

வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள்

ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்தநிலையில், அவர் சிறிலங்காப் படையினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல் 4 நேற்று வெளியிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில், மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை,

 சிறிலங்காப் படையினர், வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. ஆறு சிறிலங்காப் படையினர் அவரைப் பிடித்து வருவதும், அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும்

, அதற்கு அவர் ஐயோ அது நானில்லை என்று அழுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் இசைப்பிரியா சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும்

, இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய மாநாட்டை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த புதிய போர்க்குற்ற ஆதாரம் வெளியாகியுள்ளது -

2/11/13

தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே

 
 
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, வன்னியில் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவற்றின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தால் எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள மேற்படி பேரவை சர்வதேச நாடுகளின் இரட்டை போக்கையே இது எடுத்துக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சனல்-4 தொலைக்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை

 வெளியிட்டுள்ள இசைப்பிரியாவின் காணொளியைப் பார்வையிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தவர்களாக உள்ளனர். சிறிலங்காப் படையினர் வன்னியில் எமது மக்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு எத்தகைய சித்திரவதைகளை மேற்கொண்டிருப்பார்கள் என்பது இந்தக் காணொளி ஊடாக தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர். தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக செயற்பட்டவர். அதற்கு அப்பால் அவர் ஒரு சிறந்த கலைஞர். அவர் உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர்

கொல்லப்படவில்லையென்றும் யுத்தத்திலேயே அவர் இறந்ததாகவும் படைத்தரப்பு இதுவரை கூறி வந்தது. ஆனால், அவர் உயிருடன் பிடிக்கப்பட்டு கடும் சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றுக்கு பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

யுத்தத்தில் சண்டையிடுகின்ற தரப்பினருடன் மோதுவதுதான் யுத்த தர்மம். அதேபோன்று எதிரியின் பலத்திற்கேற்ப ஆயுதங்களையே உபயோகிக்க வேண்டும் என்பதும் யுத்த விதி. ஆனால், சிறிலங்கா படையினர் வன்னி யுத்தத்தில் அனைத்து விதிகளையும் மீறி நிராயுதபாணிகளாக நின்ற எமது மக்களை கொன்று குவித்தனர்.

 தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டுவந்து வன்னியில் கொட்டி எமது மக்களைக் கொலை செய்தனர்.
இது போக எமது தமிழ்ப் பெண்களைப் பாலியல்
வல்லுறவுக்குட்படுத்துவதற்கென்றே தனியான படை அணியொன்று வன்னிக்குள் களமிறக்கப்பட்டிருந்தது. சனல்-4 வெளியிட்டுள்ள இசைப்பிரியாவின் காணொளி மூலமாக இந்த விடயம் தெட்டத் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இசைப்பிரியா கொடுமையான முறையில் வல்லுறவுக்குட்படுத்த பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சனல்-4 வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில் இசைப்பிரியா மேலாடைகள் அற்ற நிலையில் சதுப்பு நிலமொன்றில் இருக்கின்றார்.

 அவரை படையினர் இழுத்து வருகின்றனர். மேலாடை அற்ற நிலையில் அவர் வர மறுத்த போது வெள்ளைத் துணி ஒன்றினால் அவரின் உடம்பை மறைத்து அவரை அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வெறுமனே உள்ளாடை மட்டும் அணிந்த ஒரு நபர் காணப்படுகின்றார். யுத்த களத்தில் படையினன் ஒருவன் வெறுமனே உள்ளாடையுடன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், குறித்த நபர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த களமிறக்கப்பட்ட அணியினனாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. உலகில் யுத்தம் நடைபெறுகின்ற பல நாடுகளில் ஒரு இனத்தை அடக்கியொடுக்குவதற்கு பாலியல் வல்லுறவு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை

 அமைப்புகள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சிறிலங்காவிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்றுறவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரை உடனடியாகத் தலையிடுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதன் மூலமே சர்வதேச நாடுகளின் நேர்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும்.