siruppiddy

8/11/13

பரமேஸ்வரனின் நியாயமான போராட்டத்துக்கு மக்கள் திரளவேண்டும்:



பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்ற பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை, இந்தப் போராட்டக் கோரிக்கை தொடர்பாக உடனடியாக பிரித்தானியா தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இது முற்றிலும் நியாயமான போராட்டம் என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் இரங்க மறுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு நாங்கள் ஒப்பற்ற ஒரு இளைஞனை உண்ணாவிரதப் போராட்டம் மூலமாக இழந்தோம். அன்று இந்தியா செய்த தவறை இன்று பிரித்தானியா செய்யாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் பிரித்தானியாவிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அலை அலையாக திரண்டு சென்று தமது ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் ஹமரூன் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பரமேஸ்வரன் தனது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றமையை நாம் உணர்ந்துகொள்கின்றோம். இந்த உறுதிக்கு அவரை நாம் பாராட்டுகின்றோம்.
எவனொருவன் தனது இலட்சியக் கனவில் உறுதியாக நிற்கின்றானோ

அவனே உண்மையான தியாகி. அவனே உண்மையான வீரன். அந்த வகையில் இங்கே தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக அங்கே பிரித்தானியாவில் ஒரு உறவு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை தொடர்பாக நாம் மெய் சிலிர்க்கின்றோம். ஈழத் தமிழ் மக்கள் என்றும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அவருக்கு வெளிப்படையாகவே நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

இதேவேளை, பரமேஸ்வரனின் கோரிக்கை நியாயமானது. போர்க்குற்றம் செய்த மகிந்த ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடைபெறுவது கேலிக்கூத்தானது. மகிந்தவும் அவரது அமைச்சர்களும் போர்க்குற்றவாளிகள். அவர்கள் சர்வதேசத்தால்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மகிந்தவைப் பிடித்து தண்டிப்பதற்குப் பதிலாக அவரது தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் பிரித்தானியப் பிரதமர் அதில் கலந்துகொள்வது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி அவர்களுடைய ஆசைகளை நிராசைகளாக்குகின்ற செயற்பாடாகும்.

எனவே, பரமேஸ்வரன் போன்ற தேசியப் பற்றாளர்கள், பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் போன்றோரின் கோரிக்கையை ஏற்று பிரித்தானியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமல் விடுவதையே நாங்கள் விரும்புகின்றோம்.

கடந்த 1987 ஆம் ஆண்டும் தாயகத்தில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த போது 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து எங்கள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், துரதிஸ்டவசமாக இந்திய அரசாங்கமானது அவரது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் எமது ஒப்பற்ற ஒரு வீரனை நாம் இழந்தோம். அதே நிலை எமது பரமேஸ்வரனுக்கு ஏற்படக்கூடாதென்றே நாம் விரும்புகின்றோம். அன்று இந்தியா செய்த தவறை இன்று பிரித்தானியா செய்யாது என்று நாம் நம்புகின்றோம்.

எனவே, பரமேஸ்வரன் விடயத்தில் பிரித்தானியா அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று நாம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றோம். உலகுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்ற பிரித்தானியப் பிரதமர் இந்த

 விடயத்தில் உடனடியாகத் தலையிடுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.
மேலும், பரமேஸ்வரன் எங்கள் உறவு. அவர் எங்களுக்காக போராடுகின்றார். அவரைத் தனித்து விடவேண்டாம் என்று ஈழத் தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

 அவரது போராட்ட அமைவிடத்திற்கு பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அலை அலையாக அணி திரள்வதன் மூலம் அவரது கோரிக்கை வலுப்பெறும். எனவே இந்த விடயத்தில் பிரித்தானிய வாழ். ஈழத் தமிழ் மக்கள் உடனடியாக சிந்தித்து செயலாற்றுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக