siruppiddy

28/10/15

பிள்ளையானுக்கு நடேசன் கொலையில் நேரடி தொடர்பு ; பிரதீப் மாஸ்ரர் சாட்சியம்


ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் 
சுட்டுக்கொல்லப்பட்டார்.
நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது. அக்காலப்பகுதியில் பிள்ளையானும் சகாக்களும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்ததாக 
கூறப்படுகிறது.
நடேசன் இறந்த பின் சற்று நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் மரக்காலை சுற்றுமதிலுக்கு அருகில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். கொலையாளிகள் பின்னர் அம்மக்களுடன் நின்று நடக்கும் சம்பவங்களை அவதானித்து கொண்டிருந்தனர் என பிரதீப் மாஸ்ரர் சாட்சியம் கூறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


20/10/15

அரசாங்கம் படையினரைக் காப்பாற்ற கருணைச்சபை???

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினரைக் காப்பாற்ற கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் 
முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும்
இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட உதவிகளை செய்து கொடுக்கவும் அரசாங்கம் தனியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/10/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் வெறும் நோட்டு.

கட்டுக்காட்டாய்
இவனருகில்
இத்தனை நோட்டுக்கள்.
இவன் பசி என்ன?
வயிற்றுப் பசியா?
அன்புப் பசியா!
ஆதரவுப் பசியா!

காலம் கைவிட்டதா!
காட்டுமிராண்டிகளுக்கு
கருக்கட்டியதா!
யாரோ கட்டிய
உயிர்க் கூடு இவன்
தரையின்றி
படரும் பயிரிவன்.;;!
ஏதுமறியா இவன்
கரங்களில் இருக்கும்
பணம் இவன்
உய்வதர்க்கு உரமிடுமா!?

உறவைத் தேடும்
அன்புப் பறவை
பாசத்தோடு பற்றிக்
கொள்வதற்கு
கொளுகொம்பாக
காலம் இவனுக்கு
வழிகாட்டுமா.
கருணைக் கண்கள்
இவனைக் தாங்குமா!
நாளாந்த வலிகளோடு
நலன் கெடும்
எங்கள் சமூகம்
நிமிர்வது எப்போ..!?
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



7/10/15

ஆக்கம் இணுவை சக்திதாசனின் கைம் பெண் !

என்ன பாவம் செய்தேனோ ?
எனக்கு தெரியாது 
நானறிய ஒரு பாவமும் செய்யவில்லை 
என்பது மட்டும் தெரியும்

கீரியும் பாம்பும்
சண்டை பிடித்தால் கூட
முன்னுக்கு சென்று விலக்கு பிடிக்க
பின்னுக்கு நின்றதில்லை என்றும்

ஏழையாய் இருந்ததினாலோ என்னமோ
ஏழைகளைக் கண்டால் மனம் அழும்

இடம் பெயர்ந்திருந்த போது
நானிருந்த முகாமில்
ஓடியோடி எல்லாமாய் இருந்த ஒருவர் மீது
புலம் பெயர்ந்தது மனம்

விழிகள் நோக்க
விடியாப் பொழுதொன்றில் – மஞ்சள்
கயிறும் இல்லாமலே …
இதயங்கள் இடம் மாறிக் கொண்டன
மாலை மாத்தாமலேயே …
மனங்கள் ஒன்றாகிக் கொண்டன

கூட அவர் இருந்ததினால்
கொள்ளை என்று ஏதுவும் இருக்கவில்லை
மாதம் ஒரு முகாமென்று
மாறி மாறி இடம் பெயர்ந்தாலும்
பாவற்காய் கூட தேனாய் இனித்தது
இனிப்புக்கு விருந்தாய் வயித்திலும் சனிச்சுது

அவசரமாய் கண்டிக்கு சென்று வாறனென்று
சென்றவர் தான் ….

ஆண்டுகள் பல மாண்டு விட்டன
ஆட்சிகள் பல மாறி விட்டன
கண்டு வந்ததாக சொன்னவர்கள்
முண்டு விழுங்குகின்றனர் வார்த்தைகளை

கூட பக்கத்தில்
அவர் நினைப்போடு …. நான்

ஏதேதோ …
பெயர் சொல்லி
அழைக்கின்றனர் என்னை

அவர் வரவுக்காய்
பூ சூடியபடி வாசலில் கோலமிட்டு காத்திருக்கிறேன் !

ஆக்கம்  இணுவையூர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


2/10/15

விடுதலை புலிகளின் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்டவியக்கும் காணொளி


விஸ்வமடுவில் வாணூர்தி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஒளிநாடா:உலகையே வியக்க வைத்த காணொளி .உலகையே வியக்க வைத்த போராட்ட அமைப்பு எந்த வித நாடுகளின்
 உதவியின்றி தங்களின் உழைப்பு மூலம் வளர்ந்த மறவர்கள் அவர்களின் வளர்ச்சியை பார்த்து உலகமே வியர்ப்பில் பயத்துடன் திரும்பி பார்த்தது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

30/9/15

சிவப்பு நிலா கவிஞர்சுபா ரஞ்சனின்


ஒளிரும் நிலவே
வெண்ணிலவே
எத்தனை முகத்திற்கு
உவமையானாய்.

எத்தனை கவிஞர்க்கு
காதலியானாய்
புரிய முடியா மனிதர்க்கெலாம்
தூது சென்றாய்..

வளர்வதும் தேய்வதும்
வகுத்த விந்தையின் நியதியோ
நேசித்து கவி பாடும்
இயற்கையின் விந்தையோ

அபூர்வமாய் உன்
கன்னங்கள் சிவக்க
கலையை உணர்ந்து
கண்கள் விரிகிறதே..

நிலவே உனை நின்று ரசித்தால்
ஆன்மாவில் அடைபட்ட 
துன்பம் எல்லாம்
எங்கோ இந்தப் பெருவெளியில்
தொலைகிறதே…


                                                     ஆக்கம் கவிஞர்சுபாரஞ்சன் 

25/9/15

அமெரிக்க யோசனைக்கு பிரதமர் ரணில்அனுசரணை! - த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளும் பங்கேற்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று ரணில் தெரிவித்தார்.

எனவே இந்த யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கமும் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை உரிய அரசியல் அபைம்பு மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்ட அமெரிக்காவின் புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்ட நகல் பிரேரணை வரைபில் காணப்பட்ட 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு் திருத்தங்களுக்குள்ளாக்கப்பட்ட பிரேரணை ஜெனிவா நேரப்படி நேற்று 5.15 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா நேற்றைய தினம் தனது பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

குறிப்பாக அப்பிரேரணையில் சர்வதேச குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் , விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கையின் நீதித்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், சர்வதேசத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பூரண பங்களிப்பை வழங்கவுள்ளது.

அதேநேரம் அரசாங்கம் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இவ்விடயங்களை கருத்திற்கொண்டு தனது ஒத்துழைப்புக்களை வழங்கி முழு அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

மேலும் இப்பிரேரணையில் சிபார்சு செய்யப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனூடாக கடந்த காலத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கானவொரு வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.

இவ்வரைபானது பல்வேறு கடினமான நிலைமைகளில் கருத்தொற்றுமை மிக்கதாகவுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கான பொறுப்புக்கூறும் தரப்பினர் என்ற அடிப்படையிலும் அவர்கள் திருப்திகொள்ளும் வகையில் சொற்றொடர்கள் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே இ்ந்த வரைபில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக அமையும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுத்து அவர்களின் நம்பிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

ஐ.நாவில் வெளியான அமெரிக்க திட்ட வரைவு...! எதிர்பார்ப்பில் ஏமாற்றமா.....?

இலங்கை தொடர்பிலான அமெரிக்க பிரேரணை ஜெனிவா நேரம் இன்று மாலை 5;30 மணிக்கு வெளியாகியுள்ளது.

இத் திட்ட வரைவில் எதிர்பார்த்ததை விட சில சரத்துக்கள் வித்தியாசமான முறையில் மாற்றி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கலப்பு நீதி மன்றம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதம் விஷேட சபை என மாற்றப்பட்டதுடன் அதனை விசாரிக்கும் நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ் வரைவு எதிர்வரும் 30ம் திகதி சபையின் விவாதிக்கப்படும்போது மேலும் ஒரு சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் போதிலும் , இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டே நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் கலப்பு நீதி மன்றம் என்னும் சொற்பதம் நீக்கப்பட்டமையானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ம் இணைப்பு

போர்க்குற்றம் தொடர்பில் திருத்த யோசனை அமெரிக்க சார்பு நாடுகள் முன்வைத்தன. ஹைபிரைட்டுக்கு பதில், இலங்கையின் நீதித்துறையுடன் சர்வதேச பங்களிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த யோசனையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று நகல் யோசனை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச சட்ட உரிமை மீறல்கள், மனித உரிமைமீறல் போன்றவற்றை விசாரணை செய்ய இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பாரபட்சமற்ற இலங்கையின் நீதித்துறை பொறிமுறை உருவாக்கப்பட்டு; அதில், சுயாதீன நீதி நிறுவனங்கள் இணைக்கப்படவேண்டும்.

அத்துடன் பொதுநலவாய நாடுகள் அலுவலகம், சர்வதேச நீதிபதிகள், சர்வதேச பாதுகாப்பு சட்டத்தரணிகளும் பங்கேற்கவேண்டும் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்ட ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்ற அம்சம் இதில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஐக்கிய அமரிக்கா, முன்னாள் யுகோஸ்லேவியா குடியரசு, மெசிடோனியா, மொன்டிக்ரோ, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

“நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இந்த யோசனையில் திருத்தங்களை முன்வைக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில், இலங்கையில் தனிப்பட்டவர்கள், மனித உரிமை காப்பாளர்கள், மதத்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நீதி அமைப்பில் இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை வரவேற்பதாகவும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த யோசனையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் கண்காணித்து தமது 32வது அமர்வில் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

இதனையடுத்து 34வது அமர்வில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவேண்டும் என்றும் திருத்த யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>