தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். எனவே நாங்கள் தியாகம் செய்தே எமது தேசியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளினை ஒன்றிணைத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘போரின் தாக்கம், போரின் கொடுமை காரணமாகவே நான் அரசியலில் பிரவேசித்தேன். இந்தப் போர் எமது தமிழ் சகோதரிகள் மத்தியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பெண்களே. இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களுக்கு நாங்கள் என்ன செய்யப்போகின்றோம்? என்ற எந்தவொரு திட்டமும் எங்களிடம் இல்லை.
வடமாகாணத்தில் ஒரு நிதிக்கட்டமைப்பை உருவாக்கி, அதன் ஊடாக புலம்பெயர் உறவுகளிடம் இருந்து நிதியை பெற்று, இவர்களுக்கு (பாதிக்கப்பட்ட பெண்களுக்கு) உதவ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அது சாத்தியமாகவில்லை.
பெண்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பெண்கள் தங்கள் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக நாங்கள் எங்கள் பெண்களை தயார்ப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இன விடுதலைக்காக ஆறு தசாப்த காலத்தில் 6 இலட்சம் மக்களை இழந்துள்ளோம். 20 இலட்சம் மக்கள் இன்னமும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டு இருகின்றனர். இன்றுவரை எங்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு எட்டப்படவில்லை.
மாகாண சபை என்பது எங்களுக்கான தீர்வு அல்ல. அதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த தீர்வுத்திட்டத்தை நிராகரித்து இருந்தார்கள்.
இந்த 13ஆம் தீர்வு திட்டம் எங்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு திட்டத்தை பெற்று தரப்போவதில்லை. ஆனால் இந்த மாகாண சபை என்பது எங்களுடைய கருத்து களமாக அமையலாம்.
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாது, புனர்வாழ்வு வழங்கப்படாது, சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேண்டும்.
இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அரசியல் போராட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னேடுத்து நாங்கள் எமது தேசியத்தை பெற்று கொள்ள வேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கியம் வளர வேண்டும்: மனோ
இதேவேளை, இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் ‘தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்குள் ஐக்கியம் வளர வேண்டும்’ என்று தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
‘வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் மட்டும்தான் தமிழ்மக்கள் என்றில்லாமல் மலையக மக்களும் தமிழ் மக்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிதான்.
தமிழீழ விடுதலை போராட்டத்திலும் சரி அறவழி போராட்டத்திலும் சரி மலையக மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கி இருந்தார்கள். அந்த உணர்வை அன்று அடையாளம் கண்ட கட்சியாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இருக்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்குள் ஐக்கியம் வளர வேண்டும். அதேவேளை தமிழ் மக்களிடையே வடக்கு தமிழர்கள், கிழக்கு தமிழர்கள், தென்னிலங்கை தமிழர்கள், மலையக தமிழர்கள், வன்னி தமிழர்கள் என்ற போக்கு நீங்கி தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்
அது மட்டுமல்ல தமிழ்மக்களின் போராட்டத்திற்கு புரட்சிகர இடதுசாரி முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும். அத்துடன் தமிழ்பேசும் மக்கள் மத்தியிலே இருக்கக்கூடிய முஸ்லிம் மக்களையும் அரவணைத்து உள்வாங்கி வலுவான ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்’ என மேலும் தெரிவித்தார்.
போராடுவதை விட்டுவிட்டால் தேசமும் சுதந்திரமும் பறிபோய்விடும்
இதேவேளை, இங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ‘தமிழர்கள் தங்கள் போராடும் தன்மையை விட்டுவிட்டால் தமிழர்கள் தேசம், சுதந்திரம் என்பன பறிபோய்விடும்’ என்று தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘தியாகம் என்பது சாதராண விடயமல்ல. தமது உயிரை கொடுக்க யாருமே முன்வர மாட்டார்கள். எங்களது தேசத்தில் பலர், இலங்கை அரசாங்கத்தின் அடிமைத்தனத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரை மாய்த்துள்ளனர். அவர்களை நாங்கள் என்றுமே மறக்ககூடாது.6(2127)ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவே இன்று சர்வதேச சமூகத்தின் கதவை நாங்கள் தட்டியுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற இன்று முயற்சி செய்து வருகின்றது. சமஸ்டி முறையில், தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ உரித்துடையவர்கள் என்ற தீர்வைப் பெற வேண்டும் என்று உழைத்துக்கொண்டு இருக்கின்றது.
மீண்டும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை சொல்லெணாத் துன்பத்துக்குள் தள்ளிவிட முயல்கின்றது. துப்பாக்கிகள் சத்தம் ஒழிந்துவிட்டதே தவிர தமிழ்மக்கள் போர் சூழலிலேயே வாழ்கின்றார்கள்.
இன்றைக்கு சர்வதேசம் எங்களுடன் இருக்கின்றது. இந்த வாய்ப்பையே நாம் பயன்படுத்த வேண்டும். அந்த வாய்ப்பினை இன்னமும் பலப்படுத்த நாம் தொடர்ந்து போராட வேண்டும். போராடும் தன்மையை விட்டுவிட்டு நாம் எம்பாட்டுக்கு இருந்தால் எங்கள் தேசம் எங்கள் சுதந்திரம் பறி போய்விடும்’ என மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக