இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்: பசுமைத்தாயகம் வலியுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர.அருள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ் குமார், சேலம் இரா.அருள், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ்குமார் ஆற்றிய உரையின் சுருக்கம்:
இலங்கை மீதான ஐ.நா.மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை குறித்த வாய்மொழி அறிக்கையை தாக்கல் செய்ததற்காக பசுமைத்தாயகம் அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை தொடர்பான பேரவையின் ஆணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு பதிலாக இன்னுமொரு உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் இலங்கை அரசு நடத்திய இத்தகைய விசாரணை தோல்வி அடைந்ததால் தான் ஐ.நா.மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக்கு இந்தப் பேரவை ஆணையிட்டது.
இலங்கையில் போர் முடிவடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அங்கு நிலவும் நிலைமை, கடந்த 8ஆம் தேதி இலங்கை அரசு இந்த பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றில் இருந்து வெகுதொலைவில் உள்ளன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகள் இன்னும் இலங்கைப் படைகளின் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. சிங்கள ராணுவத்தின் 85% வீரர்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 96% தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்கள் அல்லது சோதனைச்சாவடியின் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தான் வாழ்கின்றனர். ஐ.நா. மனித உரிமை ஆணையரே சுட்டிக்காட்டியுள்ளவாறு இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோருக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது; அதுமட்டுமின்றி, இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மார்க்கத்தை கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறையும் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இனம் மற்றும் மத வேற்றுமையின் காரணமாக தமிழர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் பரவலாக நடத்தப்படுவது தடையின்றி அனுமதிக்கப்படும் நிலையில், இனியும் தாமதமின்றி அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். ஆனால், அத்தகைய விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காத நிலையில், கடந்த காலங்களில் நடந்தவை மட்டுமின்றி, இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னுரிமை
அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக