siruppiddy

11/11/13

தொடக்கமே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: -


 முற்றத்தில் சீமான் பேச்சு  தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அமைக்கப்பட்டு உள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழா 2வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பொது அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் திருஞானம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது....

எவ்விதமான தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் ஆற்றில் ஓடுகிற நீரை தடுத்து அதை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த நதியின் குறுக்கே கல்லணையை கட்டி முடித்தான் கரிகாலச்சோழன். 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் போற்றப்படும் தஞ்சையின் வெற்றி சின்னமாக விளங்கி வரும் பெரியகோவிலை கட்டி முடித்து உலகத்திற்கு பெருமையைச் சேர்த்தான் ராஜராஜசோழன்.
இவைகள் எல்லாம் தமிழனின் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கி வருகிறது. நம் இன தமிழ் ஈழ மக்கள் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், சிங்கள வெறியர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். கொத்து, கொத்தாக குண்டுகளை வீசியும், உயிருடன் புதை குழிகளில் தள்ளியும் கொலைச் செய்யப்பட்டனர். இந்த துயர சம்பவங்களை தமிழ் இன உணர்வு உள்ள உலக மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முற்றத்தை கடந்த 3 ஆண்டுகளாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையுடனும், நேர்மையுடனும் தமிழ் இன ஈழ மக்களுக்காக வாழ்ந்து வரும் பழ. நெடுமாறன் மனதில் கண்ட கனவுகளை இன்று நினைவுகளாக செதுக்கி இந்த முற்றத்தை இங்கே நிறுவி உள்ளார்.
இது ஈழத்தில் உயிரிழந்த நம் இன மக்களின் துயரத்தின் நினைவு சின்னம். இந்தியாவை ஆள வந்த வெள்ளையர்களை எதிர்த்து நம் எல்லையை விட்டு அடித்து விரட்டினான் பூலித்தேவன்.
வெள்ளையனை எதிர்த்து போராடினான் கட்டப்பொம்மன். அதே வழியில் ஈழத்தில் நம் மக்களை காப்பாற்ற சிங்கள வெறியர்கள் எடுத்த ஆயுதத்தாலேயே எதிர்த்து நம் இன மக்களுக்கு போராடினான் பிரபாகரன்.
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து முத்துகுமார் உள்ளிட்ட 20 பேர்களின் திரு உருவ சிலைகள் சிற்பங்களாக இங்கு செதுக்கப்பட்டு உள்ளது. விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் விடுதலைக்காக உரிமைக்காக போராடியவர்களின் படங்கள் இங்கு இடம் பெற்று உள்ளன.
நாம் அனைவரும் மதம், இனம், சாதி இவைகளை கடந்து அனைவரும் தமிழன் என்ற உணர்வை மனதில் ஏற்படுத்த வேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்கள் வந்து வீரவணக்கம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் இனி வரும் காலங்களில் நாம் வாக்கு அளிக்க வேண்டும்.
50 ஆயிரம் ஆண்டுக்கு மேல் மூத்த வரலாற்று பெருமையைச் சார்ந்தது தமிழ் இனம். ஆனால் நம் தமிழ் இன மக்களுக்கு இலங்கையில் வாழ இடமில்லை.
வரலாற்று சான்றில் எந்த இனத்திற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது கிடையாது. இலங்கையில் தனி தமிழ் ஈழம் உருவாகுவதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும். இந்த நினைவு முற்றத்தில் ஏற்றப்பட்டு உள்ள சுடரை நாம் அனைவரும் அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஈழத்தில் தனி தமிழ் ஈழம் அமைந்தால் தான் நம் இன மக்களை நாம் காப்பாற்ற முடியும். தனி ஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு. உலக வரலாற்றில் தமிழன் போல் வாழ்ந்தவனும் இல்லை. வீழ்ந்தவனும் இல்லை.
இந்த மண்ணில் வாழும் உரிமை எவனுக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை நமக்கு மட்டும் தான் உண்டு. ஈழத்தில் தனித் தமிழ் ஈழம் விரைவில் உருவாகும். இதற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒரு தொடக்கமாக இருக்கும். தனித் தமிழ் ஈழ விடுதலைக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று சீமான் பேசினார்.




 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக