தமிழீழத் தேசியத் தலைவர் என்று சொல்லப்படும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். அவருக்கு இன்று நவம்பர் 26 ம் நாள் பிறந்த நாள். இந்த நாளை தமிழகத்தில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய படங்களைக் கூட வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்ட மாவட்டம் திருவரங்குளத்தில் சாலையோரத்தில் பிரபாகரனுக்கு பிறந்த நாள் மற்றும் மாவீரர் தினத்திற்கு பதாகை வைத்து அசத்தியுள்ளனர் சில இளைஞர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு , மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, செலுவாவிடுதி, திருச்சிற்றம்பலம் சுற்றி உள்ள ஊர்களில் பிரபாகரன் படம் இல்லாத திருமண அழைப்பிதழ்களோ காதணிவிழா அழைப்பிதழ்களோ மொய்விருந்து அழைப்பிதழ்களோ காண்பதரிதாகும். அனைத்து விழாக்களிலும் அவரது படம் தாங்கிய பதாகைகளைக் காணலாம். அந்தளவுக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் பற்றோடு இருப்பதைக் காணலாம்.
ஆண்டுதோறும் அவரது போராட்டக் காலங்களிலேயே தமிழர்கள் பகுதியில் நவம்பர் 26-ஆம் தேதியை பிரபாகரனின் பிறந்த நாளாகவும் 27-ஆம் தேதியை மாவீரர்கள் தினமாகவும் கடைப்பிடித்து வந்தார்கள். அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விழாக்கள் நடத்தப் பட்டன. அவை கவியரங்கங்களாகவும் பொதுக் கூட்டங்களாகவும் நடத்தியிருக்கிறார்கள். அது குறித்து நெருக்கடிகள் வந்த காலங்களும் உண்டு. நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று வந்து உணர்வாளர்கள் நடத்தியும் இருக்கிறார்கள்.
இப்போது முள்ளி வாய்க்கால் இறுதிப் போருக்குப் பின் அது போன்ற விழாக்கள் எங்கும் அதிகம் நடந்ததில்லை என்ற போதிலும் இன்று பிரபாகரன் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து திரவரங்குளம் கடைவிதியில் பிறந்த நாள் பதாகை வைக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக