யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டன. காணாமற் போன சுமார் 1000 பேர் பற்றிய விவரங்கள் இதன்போது பதிவு செய்யப்பட்டன.
இந்தப் பதிவு நடவடிக்கை தொடர்ச்சியாக இன்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காணமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருந்தது.
இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க காணாமற்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மன்னார் பிரஜைகள் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் செய்யும் இந்தக் குழுவினர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் சகல இடங்களிலும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகள் பொலிஸ் பதிவு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட பதிவுகளின் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட பதிவு நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணத்தில் 468 பேரும், கிளிநொச்சியில் 537 பேரும் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரையில் பதிவு செய்யத் தவறியவர்கள் இன்றைய தினமும் பதிவுகளை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் திருமதி.என்.கமலநாயகி, இல.16, கச்சேரி கிழக்கு ஒழுங்கை என்ற முகவரியிலும் கிளிநொச்சியில் திருமதி யோகராசா கனகரஞ்சினி, இல.59 தொண்டமான் நகர்என்ற முகவரியிலும் பதிவுகளை செய்ய முடியும். மேலதிக விவரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் 0212221037 என்ற இலக்கத்துடனும், கிளிநொச்சியில் 07780887759 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு வடக்கு பொதுநோக்கு மண்டபத்திலும், 10 ஆம் வட்டாரம், வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு (தற்போதைய மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமியின் வதிவிடம்) என்ற முகவரியிலும், நாளை வியாழக்கிழமை வவுனியா இறம்பைக்குளம். புனித அந்தோனியார் ஆலயத்திலும் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பதிவுகள் தொடரபில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர மன்னார் பிரஜைகள் குழுவின் செயலர் சிந்தாத்துரையுடன் 0771139897 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக