siruppiddy

10/10/13

தேர்தல் மேடையும் அலரி மாளிகையும் -


தேர்தல் மேடைகளில் உதிர்ந்த உரிமை முழக்க வார்த்தைகள், இன்னமும் வடக்கின் வசந்தக் காற்றில் உயிர்ப்புடன் தவழ்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில், இறைமை எனும் மையால் வரைந்த எழுத்துக்கள் இன்னமும் காயவில்லை. அவையெல்லாம் மக்களின் உணர்வுகளை வாக்குக்களாக அறுவடை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள்.
வெற்றி பெற்றபின் மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளை காண்பதரிது. அதற்குப் பின்னரே அவர்களின் இராசதந்திர அறிவு வேலை செய்யுமாம். அதிகாரத்தைக் கைப்பற்ற முன் பேசுவதற்கும், கைப்பற்றியபின் பேசுவதற்கும் இடையில் இருக்கும் வெளியில், இராசதந்திரம் என்கிற பூச்சு பூசப்படுகிறது. இதனைத் தேர்தல் மேடைகளில் கட்டாயம் பேசக்கூடாது என்பதுதான் இவர்களின் சனநாயகக்கோட்பாடு.
‘மகிந்தரின் முன்னால் பதவிப் பிரமாணம் செய்வேன்’ என்று, மக்கள் முன்னால் சொல்லமாட்டார் விக்கினேஸ்வரன். எந்த முகத்தோடு மகிந்தர், வடக்கு மக்களிடம் வாக்குக்கேட்க வந்துள்ளார் என்று கேட்பார்கள். ஏனெனில், மக்களுக்கு பிடித்த விடயம் அது. வாக்கு வங்கியை அதிகரிக்கும் அருமருந்து.
ஆனால் தாங்கள் செய்யும் கருமங்களுக்கு, மக்களே பொறுப்பு என்று கூறுகின்றார்கள். அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்கிற ஒரே ஒரு அங்கீகாத்தை வைத்துக் கொண்டு, தாங்கள் விடும் தவறுகளுக்கு மக்களையும் பங்காளியாக்கும் இராசதந்திர வித்தை இவர்களுக்கு கைவந்தகலை.
‘மகிந்தர் ஒரு போர்க்குற்றவாளி’, ‘சிங்களத்திற்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ள  வேண்டும்’, ‘பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்` என்று உரத்தகுரலில் சத்தம் போட்ட பலர், இன்று என்ன சொல்கிறார்கள்?.
விக்கினேஸ்வரனும், சம்பந்தனும், சுமந்திரனும் எதைச் செய்தாலும், அதற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க வேண்டுமாம். இனி, தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்பார்கள். சர்வதேச வல்லரசுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு, தம்மை வளைத்துக்கொண்டு செயற்படுவதே, தமிழ் மக்களுக்கான இராசதந்திரம் என்கிறார்கள். சிங்களத்தின் ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்துள் தோண்டித் துழாவிப்பார்த்து, விக்னேஸ்வரனை நியாயப்படுத்தும் சிறு துரும்பாவது கிடைக்குமாவென்று அலைகின்றார்கள்.
மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை இவர்களே உருவாக்கினார்கள். அமெரிக்கா ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டுவந்த போதே, அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு அல்லது இணக்கப்பாட்டு அரசியலுக்கு மட்டுமே இத்தீர்மானங்கள் பயன்படுத்தப்படுமே தவிர, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நோக்கி இது நகராது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஏற்றாற்போல், நவிபிள்ளை அம்மையாரின் அறிக்கைகளில் ‘சர்வதேச விசாரணை’ என்ற சொல்லாடல் வந்ததும், அமெரிக்கா கூறியே அம்மையார் சொல்கிறார் என்கிறவகையில், தமது கற்பிதங்களை அள்ளிவீசத் தொடங்கினர். எந்த வல்லரசு, சர்வதேச விசாரணையைக் கொண்டுவரும் என்று இவர்கள் நம்பினார்களோ அல்லது நம்பியதுபோல் நடித்தார்களோ, அதே வல்லரசுகளே இனப்படுகொலையாளி முன்னால் தமிழர் தரப்பினை சத்தியப்பிரமாணம் செய்யத் தூண்டுகிறது என்பதுதான் நிஜம்.
ஆனால் இந்த சத்தியப்பிரமாண சங்கதிகள், ஒரு உண்மையை மட்டும் தெளிவாக உணர்த்துகின்றது. அதாவது மகிந்தருடன்  இணங்கிப் போகாமல் துளியளவு அதிகாரத்தையும் பெறமுடியாது என்பதுதான் அந்த உண்மை. இப்போதுள்ள நொய்ந்துபோன 13வது திருத்தச் சட்டத்தில், எதுவுமே கிடையாது என்பதும் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
இவைதவிர, மக்கள் போராட்டங்களின் ஊடாக உரிமைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபடாமல், தேர்தல் மூலம் உரிமையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள் என்கிற வல்லரசுகளின் அறிவுரையை தெளிவாகத்தான் உள்வாங்கியிருக்கிறார்கள் கூட்டமைப்பின் மூன்று தலைவர்களும். அதாவது தீவிர தேசிய அரசியலை தேர்தல் விஞ்ஞாபனத்திலும், மென் அரசியலை சிங்களத்துடனான இணக்கப்பாட்டிலும் பிரயோகித்தவாறு மீதமுள்ள அரசியல் வாழ்வினைக் கழிக்கலாம் என்று முடிவுகட்டிவிட்டார்கள்.
இது அடிப்படையில் மிக மோசமான ஏமாற்று வித்தை. வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக இயங்குவது, அதனை வெற்றிக்கான இராசதந்திரம் என்று பொய் சொல்வது, யாழில் 85 வீதமான மக்கள் வாக்களித்திருந்தும் எம்மிடம் பலம் இல்லையென்று சனநாயகத்தை கேலி செய்வது எல்லாமே, பிழையான தலைமையின் மோசமான பரிமாணங்களாகும்.
இவர்கள் போகும் இந்தப்போக்கு, தேர்தலில் முழங்கிய தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்கிற அடிப்படைப்பிறப்புரிமையை எக்காலத்திலும் பெற்றுத்தரப் போவதில்லை. மந்திரிப்பதவிக்கு அடிபடும் இவர்கள், மக்களின் இழந்து போன உரிமைக்காக எப்படிப் போராடப்போகிறார்கள்?.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்த்தும், மகிந்தரின் முன்னால்தான் சத்தியம் செய்வோம் என்று சம்பந்தன் அடம்பிடிப்பதால், உள்கட்சி சனநாயகம் அங்கு இல்லையென்கிற முடிவுக்கு வரலாம்.
வாக்களித்ததுடன் தமது கடமை முடிந்துவிட்டதென மக்களும், சிவில் சமூகங்களும் அசமந்தமாக இருப்பதால்தான், ஆபத்தான பாதையில் தமிழ்த் தேசிய அரசியல் நகர்கின்றது எனலாம். அவர்களுக்கும் இதில் பொறுப்புண்டு
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக