siruppiddy

7/10/13

பதிப்பு-3- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை:

 
என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.
   
அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.
போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி

பூர்த்தி செய்வதான கிட்டிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர

சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும்.
சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இங்கு வன்முறைக்கு இடமில்லை.

வலோத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக