விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விலகி தமது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள் பெண் போராளிகளை விசாரணை என்ற போர்வையில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சிறீலங்காப் படைப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர். இது தமிழ் மக்களுக்கு இன்னும் இராணுவத்தின் கெடுபிடி குறையவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டை கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளிடம் எஸ்.கேவ் (வளைவு) இராணுவ முகாமிருந்து வருவதாக கூறி ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் விசாரணை மேற்கொள்வது, பாதுகாப்பு காரணங்களுக்காகவில்லை. மாறாக அவர்களைப் பாலியல் ரீதியாக இம்சப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.
கடந்த முதலாம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்கும்
இடையில் இரவு பகலாகக் குறைந்தது ஆறு ஏழு தடவைகள் இவர்களிடம் சென்று அச்சுறுத்தித் தொல்லைப்படுத்துவதாக எம்மிடம் முன்னாள்ப் போராளிகள் தெரிவித்திருக்கின்றனர். வீட்டிற்கு வரும் இராணுவ சீருடையணிந்த படையினர், தங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகள் முன்னிலையில் பெண் போராளிகளை தனியாக அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதினால் அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விடுபட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில் சிலர் திருமணமாகி தமது கணவர், பிள்ளைகளுடன் இயல்பு வாழ்க்கையில் இணைந்துள்ளனர். சிலர் தமது பெற்றோருடன் உள்ளனர்.
இவர்களின் இயல்பு வாழ்க்கையில் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், அச்சத்தை ஏற்படுத்தி உயிராபத்துக்களையும் உருவாக்கி வருகின்றனர்.
படையினரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்ய முடியாத நிலை எற்பட்டுள்ளதாகவும், சமூக வாழ்வியல் ரீதியாக தாங்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும்
அவர்கள், நாங்கள் எங்கள் மண்ணைச் சிங்களவனின் கையில் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காகத்தான் அதனை மீட்புக்காக போராடினோம். மக்களையும், போராளிகளையம் ஏமாற்றிய சில கயவர்கள் சிங்கள அரசாங்கத்தின் முன்னிலையில் நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டு போராட்டம்
மௌனிக்க சில சதிகளை செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததுடன், சிங்களம் பெண்ணியத்தையும் காவு கொள்ள உடந்தையாக செயற்பட்டனர்.
தாயகத்தில் ஆணொருவருக்கு நிகராக பெண்கள் உள்ளார்கள் என்பதை, எமது தேசிய தலைவர் அவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட பெண் போராளிகள் நிரூபித்துக் காட்டினர். இதனால் பெண்களின் பெருமையும் கூடின. பெண்களை அவமதிக்கும் சிங்கள படைகளுக்கும் தகுந்த பாடங்கள் புகட்டப்பட்டன. சுயமரியாதையுடன் பெருமைமிக்கவர்களாக வாழ்ந்தவர்கள், இன்று ஏற்படும் அவமானத்தைக் கூட முறையிட முடியாதளவுக்கு அவர்களின் நிலவரம் மாறியுள்ளது.
இவர்கள் ஏதாவது ஒரு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் முறையிட்டால், தங்களையும், குறித்த படைச் சிப்பாய்களையும் அழைத்து நேருக்கு நேர் விளங்கங்களை கோரி தகவல்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் படையினரால் நேரடியாகவே அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுவதுடன், எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமுமில்லை.
படைப் புலனாய்வு எனத் தெரிவித்து தொடர்பேயில்லாத கேள்விகளை முன்னாள் போராளிகளிடம் கேட்கின்றனர். அதுமாத்திரமல்ல, அவர்களை சிங்களப் படைகளில் இணைந்து கொள்ளுமாறும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுப்பு முகாங்களில் படையினரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள்.
இதேவேளை, இரவு வேளைகளில் படையினர் எனக் கூறிக் கொண்டுவருபவர்கள் உண்மையில் இவர்கள் யார் என்பதைக் கூட அவர்களால் அடையாளப்படுத்த முடியாதுள்ளது. இவற்றுக்கு பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவருகின்றன. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி தனது தாய் தந்தையரை இழந்த நிலையில், தனிமையில் ஒரு சிறிய பாதுகாப்பற்ற வீட்டில்
இருக்கின்றார். அவர் இவ்வாறான ஒரு சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். இரவு நேரத்தில் இராணுவப் புலனாய்வுக் எனக் கூறிக் கொண்டு வீட்டினுள் நுழைந்த ஒருவர் அவரின் படுக்கையறை வரைக்கும் சென்றுவிட்டார். இவ்வாறு அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து எங்கும் முறைப்பாடு செய்து நீதி பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள்.
சிங்களப் படைகளினால் நேரடியாக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள முன்னாள் போராளிகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி முன்னாள் போராளிகள் ஆண், பெண் இரு தரப்பினரையும் இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு அச்சுறுத்துகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வெல்லாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டவான் பகுதிகளில் இராணுவத்தில் இணையுமாறு வீடு வீடாகச் சென்று வலியுறுத்திவருவதுடன், அவ்வாறு இணையாவிட்டால் உங்களின் பெற்றோருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தியும் வருகின்றனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேர்ந்து இயங்கும் கருணா, பிள்ளையான் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது இரண்டு முன்னாள் போராளிகளை இராணுவத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால் உங்களுக்கு வழங்கப்படும் சம்பளம்
வழங்கப்படமாட்டாது என்று புலனாய்வுப் பிரிவினர்கள் அவர்களை மிரட்ட, அவர்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளை விட்டுவைக்காமல் துரத்துகின்றனர். இவர்களில் திருமணமானவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் என ஆண், பெண் இரு சார்களையும் வற்புறுத்திவருகின்றனர்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை மற்றும் வாகரை பகுதியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுவதை வெளியில் சென்று யாரிடம் முறையிடுவது என்பது தெரியாத நிலையில் முன்னாள் போராளிகள் அச்சம் கொண்டு பீதியடைந்துள்ளனர். தடுப்பு முகாமிற்கு சென்று கொடுமைகளை அனுபவித்து விடுதலையாகி வீட்டுக்கு வந்த முன்னாள் போராளிகள் மாவட்டத்தில் எங்கு சென்றாலும் அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுவது, தமிழர்கள் எவ்வாறு அடக்கப்படுகின்றார்கள் என்பது நன்கு புரியும்.
ஒரு முன்னாள் பெண் போராளியின் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொண்டு சென்றவர்களைகூட, யார் எதற்காக வந்தனர் என இப்பிரிவினர் கண்காணித்து விசாரணை செய்தாக ஒரு பெண் போராளி தெரிவித்துள்ளார். இதேபோன்று, மாவட்டத்தில் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு சில வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வாறு அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றால் அடுத்த நிமிடம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரிக்கின்றனர்.
மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரு மாதத்திற்கு ஒரு தடவை முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர், சிங்கள மொழியில் உள்ள ஏராளமான விண்ணப்பப் படிவங்களை கொண்டு சென்று, அவர்களுக்கு உதவிகள் வழங்குவதாக தெரிவித்து கையெப்பம் பெற்றுச் செல்கின்றனர். ஆனால், எந்த உதவிகளும் வழங்கப்பட்டதில்லை. இது எதற்காக நடைபெறுகின்றது என்று கூட அவர்களுக்குத் தெரியாதுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எங்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தி வைத்துள்ளதாகவே ஒரு போராளி தெரிவிக்கின்றார். எனக்கு எந்த நேரம் என்ன நடக்கும் என்பதை கூற முடியாத நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவர்களின் நிலவரங்களை கருத்தில் கொண்டு புலம்பெயர் உறவுகளிடம் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வாழ்கின்ற எமது முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக தங்களால் முடிந்த சிறிய உதவிகளை செய்யுமாறும் நாம் வேண்டிக் கொள்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக