siruppiddy

28/10/13

30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம்


இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம். வேறு எந்த நாடும் இது போன்ற சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து அங்குள்ள விமான நிலையத்திற்கு சீன அரசின் நிதி உதவியுடன் (300 மில்லியன் அமெரிக்க டாலர்) 28 கி.மீ.தூரத்துக்கு விரைவு சாலை அமைக்கப்பட்டது.
இந்த விரைவு சாலையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராஜபட்ச பேசும்போது கூறியது:

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்குப் (பிரபாகரன் மரணமடைந்த நாள்)  பிறகு இலங்கை மண்ணில்  பயங்கரவாதச் செயல்களோ, ரத்த ஆறோ ஓடவில்லை. நாடு அமைதிப் பூங்காவாக மாறியது.

எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மக்கள் எனக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.

இலங்கை அரசு மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். இதற்காக 6 மாதத்துக்கு ஒரு முறை ஜெனீவா சென்று அதற்கான பதிலை அளித்து வருகிறோம்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் பற்றி மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் அடிக்கடி நடைபெற்ற குண்டுவெடிப்புகள் பற்றியோ, குண்டு வீச்சுகள் பற்றியோ எந்த கேள்வியும் கேட்கவில்லை என்று ராஜபட்ச தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக