சீனாவின் மேலாண்மை இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது என்ற பேச்சுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெளியக புலனாய்வு அமைப்பான சி.ஐ.எ இலங்கைத் தீவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தில் சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இந்த போதை பொருளானது, பிரபல தாதாக்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிமின் 'டி கம்பனி' யினால் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இதனடிப்படையில், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் குறித்து சி.ஐ.எ புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில், இலங்கையில் இது தொடர்பில் விசாரணை நடாத்தும் பொலிஸ் அதிகாரிகளையும் சி.ஐ.எ அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.
அத்துடன், பாகிஸ்தான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் விடயத்தை காரணமாகக் காட்டினாலும், சிறீலங்காவுக்கு பதிலடி வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இது அமையக்கூடும் என்ற அச்சம் சிறீலங்கா அரசுக்கு உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆட்சிமாற்றத்திற்கான முதல் அடியாக இருக்கலாம் என்ற அச்சம் அலரிமாளிகையில் நிலவுவதாகவும் அறியமுடிகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக