விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்.
அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
“மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக, தற்போது இன்னொரு பிரபாகரன் தோற்றம் பெற்றுள்ளார்.
அந்தப் பிரபாகரன் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன்.
முப்பது ஆண்டுகளாக நடத்திய போரின் மூலம், புலிகளால் அடைய முடியாத ஈழத்தை, வடக்கு, கிழக்கை இணைப்பதன் மூலம் அடைந்து கொள்ளும் கனவுடன், அவர் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காகக் களமிறங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட துர்ப்பாக்கியமான முடிவை, விக்னேஸ்வரனும் அடைவது நிச்சயம்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் தமது பகுதிக்கு மட்டும் காவல்துறை, காணி அதிகாரங்களைக் கேட்கிறார்.
தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், அனைத்துலகதினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது சிறிலங்காவின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக