siruppiddy

15/12/13

இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும்!

இலங்கையிலே நடைபெற்ற இறுதி யுத்தத்தின் மனிதஉரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக்கும் இந்திய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆயுதத்தை வழங்கி அழிவுக்கு இட்டுச் சென்று, முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்திற்கு முடிவுரை எழுதிய பெரும் பங்கு இந்தியாவின் காங்கிரஸ் அரசிற்கே உண்டு .
   
ராஜிவ் காந்தியின் மரணத்தை வைத்து பிரபாகரனை பழிவாங்கும் நோக்கில் ஈழத்தமிழரையே அழித்த பெருமை அவர்களையே சாரும் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி , தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சிவசங்கர் மேனன் , எம்.கே. நாராயணன் போன்றோர் இலங்கை அரசிற்கு உற்சாகம் அளித்தனர். ஆயுதங்களையும் , போர்க்கப்பல்களையும் , போர்ப்பயிற்சிகளையும் , சர்வ சாதாரணமாக வழங்கியதுடன் இந்தியாவின் ஆசீர்வாதத்துடனேயே இனப்படுகொலை அரங்கேறியதை எவராலும் மறுக்க முடியாத உண்மை.

எனவே சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடைபெறும் போது இந்திய அரசையும் விசாரிக்க வேண்டும். காலம் காலமாக இந்திய அரசு எமக்கு நன்மை செய்கின்றோம் எனும் வெளிவேசத்துடன் எம் இனத்துவ, தனித்துவ, தார்மீக வாழ்வு நிலைமையை நசுக்கியதே வரலாறு. ஆகவே பல இயக்கங்களையும்

தோற்றுவித்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயுதமும் வழங்கி அவர்களுக்குள்ளேயே மோதலையும் உண்டாக்கி அமைதி காக்கும் படை எனும் போர்வையில் இங்குவந்து பல அட்டூழியம் செய்து தமிழினத்தை தொடர்ந்து சுதந்திரமாக வாழவிடாத பெருமை இந்தியாவுக்கு உண்டு.
இந்த விடயங்கள் தொடர்பில் நான் இந்திய துணைத் தூதருடன் பேசியிருக்கிறேன். எம்மை அழித்துவிட்டு 58 ஆயிரம் கோடியோடு பிராயச்சித்தம் தேடி வந்திருக்கிறார்கள். ஆகவே தனிநாடு

கோரினோம். சமஷ்டி கோரினோம், உள்ளக சுயநிர்ணய உரிமை கோரினோம். இவற்றையெல்லாம் புறம் தள்ளி ஒற்றை ஆட்சிக்கு பங்கமில்லாத, அலுவலக உதவியாளரைக் கூட மாற்ற அதிகாரமில்லாத 13 வது சரத்து மாகாண சபையை எம்மீது வேண்டுமென்றே திணித்து வைத்துள்ளது . இத்தனையையும் செய்யும் இந்திய அரசின் ஏக விசுவாசிகளாகவே எமது தலைவர்கள் இருப்பதையிட்டு மக்கள் வேதனைப்படுகிறார்கள்.தமது சொந்த நலனுக்காகவே தமிழ் மக்களையும் வழிநடத்துவதாக பலரும் அங்கலாய்கிறார்கள்.

இந்தியாவுக்கு முழந்தாலிட்டு அடிப்பணிந்து சேவகம் செய்யாத தலைமைத்துவமே தமிழருக்கு தேவை. ஆகவே நிறவெறிக்காக போராடி ஆபிரிக்கர்களின் தேச பிதாவாகத் திகழும் நெல்சன் மண்டேலா வரலாறு முழுமையும் வாழ்வார். பலர் இறந்து விடுகிறார்கள், சிலர் மரணித்து விடுகிறார்கள்.

இறப்பவரை மறந்துவிடுகிறோம். மரணிப்பவர்களை மனிதம் உள்ளவரை மனங்களில் வாழ்வார்கள். இவருடைய முன்மாதிரியையும் சகிப்புத்தன்மையும் ஏற்புடைமையையும் உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். குறிப்பாக இவருடைய அரசியல் அதிகார பதவி ஆசையின்மையை இன்றைய பல அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் வெறுமனே வாய்ப்பேச்சுக்கள் முடிவல்ல. மண்டேலாவிடம் உலகம் கற்க வேண்டிய பாடம் அதிகம். அதில் நாமும் கற்க வேண்டியவர்களாய் மாறுவோம் என்றார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக