siruppiddy

8/12/13

ஜெனிவாவில் வைப்பதற்கு ஆப்பு சீவும் அமெரிக்கா !

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கான களஆய்வில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக, அமெரிக்க காங்கிரசை சேர்ந்த, டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர், கொழும்பில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டோரை சந்தித்துள்ளனர்.

நேற்றிரவு இவர்கள், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனையும், அமெரிக்கா தூதுவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இராப்பாசன விருந்துடன் சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்காவில் தமிழர்களின் நிலை, வடக்கு மாகாணத்தில் தேர்தலுக்குப் பிந்திய நிலவரங்கள், ஜெனிவா தீர்மானங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, கேட்டறிந்துள்ளனர்.

மேலும், இராணுவத் தலையீடுகள், காணாமற்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும், அமெரிக்க குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில் , சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நகர்வுகளில் ஈடுபடுவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்வதற்காகவே அமெரிக்க காங்கிரஸ் குழு சிறிலங்கா வந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் இன்று திருகோணமலைக்கு செல்லவுள்ளதுடன், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று களஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக