சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறியுள்ளது.
வொசிங்டனின் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அண்மையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த போரை அடுத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலஅவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஐ.நாவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதற்கு அவசரப்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவரும் கூட, அமெரிக்காவும், ஐ.நாவும் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார்.
எனவே, மனிதஉரிமைகள் மற்றும் சிறிலங்காவின் ஏனைய நிலவரங்கள் தொடர்பாக, தற்போது என்ன நடக்கிறது?” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மேரி ஹாப்,
“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்தும் தமது கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்டமீறல்கள் குறித்த மோசமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பதிலளிக்கும் வகையில் நம்பகமான நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வருகிறது.
ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், சட்டத்தின் ஆட்சி சிதைக்கப்படுவது, மதசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் நாம் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்.
மனிதஉரிமை ஆர்வலர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்வது குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம்.
வெளிப்படையாக இவை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய தேவை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக