வெலிவேரிய சம்பவத்தினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொது எதிரணிகளின் தலைவர்கள் ஒருமித்து மஹிந்த ஆட்சியின் இறுதிக்கட்டமே இதுவென தெரிவித்தனர்.
இங்கு பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் இறுதிக் கட்டத்தினையே தற்போது அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கின்றது. தண்ணீர் கேட்ட வெலிவேரிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பள்ளிவாசல்களை உடைக்கும் இவ் அரசாங்கம் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
பௌத்தம் என்று சொல்லிக் கொண்டு பௌத்த மதத்திற்கு எதிரான கொடுமைகளையே அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது.
இதற்கு எதிராக நாட்டில் அனைத்து மக்களும் இன்று ஒன்றிணைந்து போராட ஆரம்பித்து விட்டனர். எனவே, இதற்கு மேல் இந்த அரசாங்கம் ஆட்சியினை நினைத்துக் கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க எம்.பி. பேசுகையில்,
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பினை இனியும் அரசாங்கம் செய்ய முடியாது. உணவுக்காக, தண்ணீருக்காக நிதி ஒதுக்கமுடியாத அரசாங்கம் உகண்டாவுக்கு நன்கொடை செய்கின்றது. முதலில் எமது மக்கள் மீது அக்கறை இருக்கவேண்டும். பின்னர் வெளிநாடுகளுக்கு உதவி செய்யலாம் எனக் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச எம்.பி. கூறுகையில்,
மக்களைக் கொன்று குவித்தே இந்த அரசாங்கம் ஆட்சியினை நடத்துகின்றது. வடக்கில் ஆரம்பித்த இராணுவக் காட்டுமிராண்டித்தனம் இன்று தெற்கு வரையில் தொடர்ந்து கொண்டே போகின்றது.
இனியும் மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை சூறையாடி ஆட்சி நடத்தமுடியாது. மக்கள் இதற்கான சரியான தீர்ப்பினைத் பெற்றுத் தருவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டின் அனைத்து மூலையிலும் இராணுவத்தினரை குவித்து மோசமானதொரு அராஜக ஆட்சியினை மேற்கொண்டு வருகின்றது. துப்பாக்கியினை நீட்டி ஆட்சி நடத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய அரசின் அராஜகங்களை மக்கள் ஒவ்வொரு நாளும் சகித்துக்கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தின் எல்லை கடந்த அராஜகச் செயற்பாடுகளுக்கு நாம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறுகையில்,
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டமாகவே நாம் இன்று கூடியுள்ளோம். அரசாங்கம் மதவாதத்தினைத் தூண்டி மக்களிடையே பிரிவினையினை ஏற்படுத்தி நாட்டினை சீரழிக்க முயல்கின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
வடக்கில் தமிழர்களை அழித்து, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம் மக்களை அழித்துவரும் அரசாங்கம் இன்று சிங்கள மக்களையும் அழிக்க ஆரம்பித்துவிட்டது. அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமும் பதவி, பண ஆசையாலும் நாட்டினை வெளிநாடுகளுக்குக் கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை நிறுத்தவேண்டிய காலம் அரசாங்கத்திற்கு வந்துவிட்டது. இனியும் அரசின் திட்டங்கள் பலிக்கப்போவதில்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக