ஈழத் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நிழல் யுத்தமாக, நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஒரு இனத்தின் உரிமைக்கான குரலை நசுக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குளாக்கவேண்டும் என்பதே ஆதிக்ககாரர்களின் சிந்தனை. அந்தச் சிந்தனையினையே சிறீலங்கா அரசாங்கம் இன்று செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.
வடக்கு மாகாணத்தில் இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இலக்கு முல்லைத்தீவு மாவட்டம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிராயுதபாணிகளுடனான யுத்தத்தையே இன்று முல்லைத்தீவு களத்தில் சந்திக்கின்றது. அழுத்தம் கொடுக்காத அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகினவே தவிர அதற்கு அப்பால் எதனையும் சாதித்திராத நிலையில் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடர்கிறது.
மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் உண்மையான நிலவரங்கள் வெளிக்கொணரப்படாமல், அதன் தீவிர தன்மையினை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் உணராமலிருப்பது துரதிஸ்டவசமானதே. மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலிருந்து 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் தமிழர் நிலங்களில் ஆமை வேகத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட்ட நிலையில், யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் அவர்கள் அனைவரும் நிரந்தர குடியிருப்பாளர்களாக பதிவு செய்யப்பட்டு. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கந்தசாமிமலை, எரிந்தகாடு, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, மாரியாமுனை, நித்திகைக்குளம், இலந்தைமுனை, வத்தாமடு, மாணற்கேணி, சாம்பன்குளம், ஆமையன்குளம், சின்னக்குளம், பறையனாறு, ஆலங்குளம், சி«லு£ன் தியேட்டர், புலிபாய்ந்தகல், நாயடிச்சமுறிப்பு, வண்ணாக்குளம், ஊரடித்தகுளம், தடடாமனைக்குளம், பனையாண்டான்குளம், கூவாவடிக்குளம், கூமாவடிக்குளம், கூமாவடிக்கண்டல், சலாத்துவெளி, கிடமங்குடா உள்ளிட்ட தமிழ் கிராமங்கள் இன்று இல்லை. அவை முழுவதும் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டு சிங்களக் கிராமங்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுமாயிற்று.
இவற்றை ஒன்றிணைத்தே வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கிராமங்களில் மக்கள் வாழ்ந்தது மட்டுமல்லாமல், கொக்கிளாய் கிழக்கு, மேற்கு, கருணாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி, தெற்கு. ஆகிய 6 கிராமங்களில் வாழ்ந்த அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக விவசாயத்தை நம்பியிருந்த 90 வீதமான விவசாயிகளின் 2 ஆயிரத்து 590 ஏக்கர் விவசாய நிலம், உள்ளடங்கியிருக்கின்றது.
இந்த விவசாய நிலங்களுக்கு சிறீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மக்கள் இன்றும் வைத்திருக்கின்றார்கள். இந்நிலையில்19.01.2012 இல் மேற்படி 6 கிராமங்களிலும் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களது விவசாய நிலங்களில் சென்று விவசாயம் செய்ய முடியவில்லை. மக்களுடைய நிலங்களில் சிங்கள விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருக்கின்றனர்.
இதனால் 6 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் சமகாலத்தில் பட்டினிச் சாவினை எதிர்நோக்கியிருக்கின்றனர். பல குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை விட்டு நிரந்தரமாக வெளியேறும் முடிவினையும் எடுத்திருக்கின்றனர். எனினும் மிகமோசமான இந்நிலை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கை கொடுப்பதுடன் மட்டுமே நின்று விடுகின்றனர். மக்கள் வெளிவந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் இல்லை.
இவையனைத்திற்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும், ஆக்கிரமிக்கப்படும் இந்தக் கிராமங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே வடகிழக்கு பிரிப்பு வெறுமனே சட்டரீதியாக மட்டுமில்லாமல், நிலத்தொடர்பினாலும் பிரிக்கப்பட்டுவிட்டது. ஜீரணிக்க முடியாவிட்டாலும் கூட இதுவே மறுக்க முடியாத உண்மையாகும்.
இரண்டு விடயங்கள் இங்கே சிறீலங்கா அரசாங்கத்திற்குச் சாத்தியமாவதை நாங்கள் அவதானிக்க முடிகின்றது. ஒன்று நிலத்தை ஆக்கிரமித்து சிங்கள மக்களை குடியேற்றுவது. மிக முக்கியமான அடுத்த விடயம் தமிழர்களின் பொருளாதார வளத்தைச் சிதைப்பது. ஏனெனில் மாவட்டத்தின் பொருளாதார வளத்தின் மிகப் பிரதானமான இரண்டு துறைகளில் ஒன்று விவசாயம். எனவே இதனைச் சாதாரணமாகப் பார்க்கமுடியாது. 2590 ஏக்கர் விவசாய நிலம் 6 கிராம மக்களடைய வாழ்வாதாரம்.
இது ஒருபுறமிருக்க மாவட்டத்தின் பொருளாதார வளத்திற் மற்றொரு துறையான கடற்றொழில் துறையும் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சுண்டிக்குளம் தொடக்கம் கொக்கிளாய் வரையில் மாவட்டத்தின் கடற்பரப்பு நீண்டிருக்கின்றது. இவை யுத்தத்தின் பின்னர் எதுவித அடிப்படைகளுமின்றி அதிகளவு வளங்களைக் கொண்டிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கின்றது.
கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 1983 ஆம் ஆண்டு இங்கிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது ஒரு சில சிங்கள மீனவர்கள் தொழிலுக்காக வந்து தங்கிருந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது இதே இடத்தில் 330 சிங்கள குடும்பங்கள் நிரந்தரமாக வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பாடசாலை, தேவாலயம், விகாரை, நடமாடும் வைத்தியசேவை, போக்குவரத்து என எல்லாமே பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இவர்களில் 280 குடும்பங்களுக்கு யுத்தத்தின் பின்னரான கடந்த 4 வருடங்களில் கொக்கிளாய் கிராமத்தில் நிரந்தரக் குடியுரிமையும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தங்கியிருக்கும் நிலம் தமிழர்களுடைய விவசாய நிலம். அவர்கள் தொழில் செய்யும் கடல் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்த கடல். இதேபோறு நாயாறு கரையோரத்தில் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் 60 சிங்கள மீனவர்களுக்கு பருவகால தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று அந்தப் பகுதியில் 300 சிங்கள மீனவர்கள் தங்கியிருக்கின்றார்கள். மிகப் பாரியளவு வளங்களுடன் வந்திருக்கும் இவர்களே கடலட்டை பிடித்தல், ஒளிபாய்ச்சி மீன் பிடித்தல், தங்கூசிவலை பயன்படுத்தி மீன் பிடித்தல் போன்ற சிறீலங்கா அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் செய்து வருகின்றனர். இந்த ஆண்டின் முற்பகுதியில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது, இந்த விடயம் தொடர்பில் முழுமையான ஆதாரங்களுடன் மாவட்டக் கடற்றொழிலாளர்கள் அமைச்சருக்கு மனுக் கையளித்தனர். அதனடிப்படையில் ஒருவார காலத்தினுள் அனுமதியின்றி தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கடற்படைக்கும், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இன்றுவரை ஒருவர் கூட அவ்வாறு வெளியேற்றப்படவில்லை. இதேபோல் சுண்டிக்குளம், மாத்தளன், வலைஞர்மடம் போன்ற பகுதிகளிலும் அட்டை பிடித்தலுக்காக பெருமளவு சிங்கள மீனவர்கள் வந்து தங்கியிருக்கின்றார்கள். எங்கிருந்து வந்தனர்? யாருடைய அனுமதியுடன் வந்தனர்? என்பது குறித்தெல்லாம் கடற்றொழில் திணைக்களத்திற்கே தெரியாது. இந்நிலையில் யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து வெறும் வள்ளங்களுடனும், கட்டுமரங்களுடனும் கடற்றொழில் செய்யும் தமிழ் மீனவர்களின் நிலை என்ன?
தங்களுடைய தொழில்களை கைவிட்டு, சிங்கள மீனவர்களுடன் நாள் கூலிக்கு தமிழ் மீனவர்கள் செல்கின்றார்கள். நேற்று வந்து எங்களுடைய மண்ணில், எங்களுடைய கடலில் எஜமானர்களாக சிங்களவர்கள் மாறிவிட்டனர். மிக விரைவில் கொக்கிளாயில் நடந்தது சுண்டிக்குளத்திலும், வலைஞர்மடத்திலும், மாத்தளனிலும் நடக்கும். நிரந்தரமாக வீடுகளும், நிலங்களும் அவர்களுக்கும் வழங்கப்படும் குடியுரிமையும் கூடவே வழங்கப்படும். ஒரு கட்டத்திற்கு மேல் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மீனவர்கள் கடலில் கால் நனைக்கவும் கூட அனுமதி மறுக்கப்பட்டதோ அவ்வாறு இந்தப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்படும்.
அவர்களுக்குப் பாதுகாப்பிற்கு கடற்படை எப்போதும் அவர்களுடனிருக்கும். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முஸ்லிம் அமைச்சர்களின் ஏற்பாட்டில் மாவட்டத்துடன் எவ்வகையிலும் தொடர்புபடாத முஸ்லிம் மக்களை, ஆயிரக் கணக்கில் முள்ளியவளையில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் உணர்ச்சிவசப்படுத்தலுக்கு அப்பால் நியாயத்திற்காக போராடும் அரசியல் தலைமைகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இல்லாமையே. அந்த வரலாற்று இழப்பை ர்காலத்தில் முல்லைத்தீவு மக்கள் நிவர்த்தித்துக் கொள்ளவேண்டும். அதுவே எம் இருப்பை அறுதியிட்டுக் கூறுவதற்கான ஆதிக்கச் சொல்லாக இருக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக