ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம கடத்திச் செல்லச் சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் சிறீலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகன் ஒருவரே அவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி டிக்மன்ஸ் வீதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற நிலையில் சிறீலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட நபர் சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த கதிரப்புலிகே இந்திக சம்பத் குமார என்ற இராணுவத்தினன் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இலக்கம் 502712, உதசிறி அசங்க என்ற சிறீலங்கா இராணுவ கோப்ரல், இவர் 5வது சிங்க படைப்பிரின் அதியுயர் பாதுகாப்பு வலய பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுகிறார்.
இலக்கம் 418908, கதிரப்புலிகே ரெஜின் சந்திமல் குமார சிங்க படைப்பிரிவின் விசேட படைப்பிரிவு அதியுயர் பாதுகாப்பு வலயம் கொழும்பு. கதிரப்புலிகே ரோஹித்த லக்ஷ்மன், வித்தான ஆராச்சிகே சந்தகுமார ஆகியோரும் சிங்கப்படைப் பிரிவினர் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
ஒரு வர்த்தக கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்த தரகுப் பணம் தொடர்பான தகவல்கள் ஊடகவியலாளர் மந்தனாவுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பிலான புலனாய்வு தகவல் சம்பந்தப்பட்ட முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்ததாகவும் இதனையடுத்து அந்த ஆவணங்களை ஊடகவியலாளரிடம் இருந்து கைப்பற்ற அவர் சிறீலங்கா இராணுவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் தெரியவருகிறது.
இதற்காக பேசப்பட்ட தொகையில் மூன்று லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை சிறீலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே செலுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
ஊடகவியலாளரையோ, அவரது வீட்டில் இருப்பவர்களையோ கொலை செய்யாது, அவரை அச்சுறுத்தி அந்த ஆவணங்களை பெறுமாறு அங்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறீலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளரின் வீட்டிற்கு புகுந்து அவரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி ஆவணத்தை பெற்று கொள்ளுமாறு, அது சாத்தியப்படவில்லை என்றால் அவரை கடத்திச் செல்லுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை மந்தனாவின் வீட்டிற்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தினர் டிபெண்டர் ரக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் அவதானித்துள்ளனர் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக