இறுதி
நிமிடமேனும்
உன் அருகாமை
தருவாயா!!
நீ மொழியும்
வியாக்கியானத்தை
வேதெமென
மொழிபெயர்க்க
விரும்புகிறேன்!
நிசப்தத்திலெழும்
உன் குறட்டையை
இசைத்தட்டாக்கி
இன்பத்தின்
பரிணாமங்களை
பிரித்தறிய
பிரியப்படுகிறேன்!!
போதையில்
நீ உளறுகையில்
ஒலிப்பேழையில்
உள்ளீர்த்து
பட்டிமொன்றில்
உன் குரல்
ஒலித்திட செய்திடும்
உன்மத்தம் எனக்கு…
நீதானே
இறுதிக்கணங்களில்
எல்லோருக்குமாய்
விடையளிப்பாய்!!
என்னை மட்டும்
வெறுக்காதே
உன் அருகாமை தா!!
உன்னிடம்
நிலையாமையின்
எண்ணங்கள்
ஏராளம்!
எனக்கும் சொல்
இருக்கும்
மிச்ச சொச்ச
வாழ்வையேனும்
வாழ்ந்திட
பிரியப்படுகிறேன்!!
முடிந்தால்
உன் வீட்டு
உணவு தா!!
உலகம் எங்கே
தொலைந்ததென்பதை
உன் வீட்டுணவில்
உணரமுடியும்….
இறந்துபோக
இச்சையெனக்கு
உன் அருகாமை
உள்ளபோதே…
ஏய் மின்சார
சுடுகாடே!!
வெட்டியான்
வேலைக்கு
விண்ணப்பமே
வெற்றிடமாமே..
எங்கேனும்
ஓர் சுடுகாட்டில்
இன்னும் நீ
உயிர்ரொடிருந்தால்!
உன் தத்துவத்தை
கற்றுக்கொண்டே
தவறிவிட விருப்பம்…
ஏய் வெட்டியானே
உலகம்
தொலைந்ததன்
உண்மை உணர்த்து
உன் வீட்டுணவில்…
வெட்டியான்
சோறென்ன
பிணவாசமா
வீசும்..
முதியோரில்லத்தில்
மரித்துப்போன
யாரோ ஒருவர்
எழுதிவைத்த
இறுதி ஆசை
இல்லை!!!!!!!
நிராசை கூட…
கவிதையாகி
உயிரை
எரிக்கிறது!!
ஆக்கம் அர்த்தனன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக