வரிசை கட்டி சென்ற
வாகனங்கள் சுமந்து
வந்தன அந்நிய
நாட்டு வரவுகளை
நானும் அன்று தான்
வந்து சேர்ந்திருந்தேன்
சுதந்திர தென்றலை
சுவாசிக்க விரும்பி
ஆனாலும் எனது ஆவல்
செத்து போன காலமாக
கடந்து கொண்டிருந்தது
அந்த தேசம் எங்கும்
அந்நிய வாசனை நாத்தமெடுத்து
பல காலக் கழிவில்
மீண்டிருக்கும் என்
ஊர் உணர்வுகளில்
நான் மிக வேண்டாதவனாக
தோற்றம் கொண்டிருந்தேன்
பலகாலம் கம்பி கூண்டில்
அடைபட்ட கிளியாக
சந்தேகித்து அடைக்கப்பட்ட
வெறும் தமிழன் நான்
ஆனாலும் என்னை ஏற்றிட
அந்த ஊரில் எந்த மனிதமும் இல்லை
அந்த தேச காற்றில்
சுகந்தம் கலந்து போய் கிடந்த
மேற்கத்தைய வாசனையில்
தடுமாறி தூர விலகி கிடந்தது
இனிய காற்றை சுவாசிக்க
ஆசை கொண்டு ஓடிவந்த
என் மூக்கு துவாரங்கள்
அந்நிய வாசனையால்
மூச்சு முட்டி அவதிப்பட்டு
சாக துடித்து கொண்டிருந்தது.
வானம் வெளிக்கும் அந்த
விடியல் நேரம்
வாசல் தேடி ஓடி வந்த
மகளின் குடும்பத்தின்
மகிழ்வில் திளைத்து கிடந்தது
அந்த ஊர் பெரியவர் இல்லம்
கோடை விடுமுறையாம்
நாள் போக்க ஊருக்கு
ஒரு உலா
இதுவே அவர்கள் வலுவை
ஊருக்கு காட்டும் வழி கூட
வங்கியில் இருந்து வரும்
கடனுக்கான வட்டி கடிதங்கள்
மாதம் அவர் வீட்டு
காகிதப்பெட்டியை நிரப்பும்
ஆனாலும் ஊரில் அவர்
பணத்தின் மீது படுக்கை
விரித்து படுத்திருப்பர்
அதை காட்டும் மிடுக்குடன்
மின்னும் முறுக்கு தங்கம்
தினமும் யாரோ
உண்ட உணவு தட்டை
கழுவி காசு காண்பார்
ஆனால் ஊரில் அவர்
சிகை அலங்காரம்
அனைவருக்கும்
வெளிநாட்டில் அரச உத்தியோக
கதைகள் சொல்லும்
வஞ்சகம் அறியா குழ்ந்தைகள்
மனசில் தமிழ் மணம்
அற்று போய் கிடக்கும்
அந்த நாத்த காற்று
என் பக்கம் திரும்ப கூடாது
என்பதில் நான் அக்கறை கொண்டேன்
என் மகள் இன்றும்
மலர்களின் அழகில் மகிழ்கிறாள்
அவள் அந்த வைகறை
பொழுதில் பட்டாம் பூச்சிகளை
தேடி கொண்டிருகிறாள்
அவை மட்டுமே அவளின் நண்பர்கள்
பூக்களோடு பேசி கொண்டு
அவர்களின் உபசரிப்பில்
தேனுண்டு மகிழும் தேனீக்கள்
அவளது வழிகாட்டிகள்
உண்டிட தட்டில் உணவு
இல்லை என் வீட்டில்
ஆனாலும் மகிழ்ந்திட
என் முற்றத்தில் நறு மணம்
வீசிடும் மல்லிகை மணக்கிறது
ஆக்கம் கவிமகன்.இ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக