siruppiddy

9/4/20

தாய் நாட்டில் நீக்காத சோகத்தின் ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது

வாழ்க்கை மட்டுமல்ல,“ பட்டால்தான் வலி புரியும் “
இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.
இலங்னக (சிறீலங்கா )என அழைக்கப்படும் தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை 
உலகறியா ஏராளம் ஏராளம்.
இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம்.
ஆம்...!
எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம்.
நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமைப் படுத்தினார்கள். ஆனாலும் மீண்டெழுந்தோம்.
இறுதியாக உலக நாடுகள் கைகோர்த்து ஓர் உத்தியை கையாண்டீர்கள்..!
ஓய்வின்றி ஓர் தொடர் போர்..!!
இறந்தவரை புதைக்க இடமுமில்லை நேரமும் இல்லை. காயம்பட்டவரை சிகிச்சை கொடுக்க மருந்துமில்லை மருத்துவமனையில் இடமும் இல்லை, மருத்துவர்களும் பற்றாக்குறை.
உண்ண உணவுத் தட்டுப்பாடு, கிடைப்பதையேனும் தேடிவர வெளியே போய் வர முடியாது குண்டு மழை.
போராடும் போராளிகளிடம் ஆயுத தளபாட வெடிபொருட்கள் எனக்
 கையிருப்பு கையறு நிலை.
பதுங்கு குழிக்குள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் முடங்கிய மக்களின் மன அழுத்தம், போராட்டத்தின் மீதே நம்பிக்கையீனம்.
எல்லாமே திட்டமிட்டே செய்து முடித்தீர்கள். நினைத்தவாறே எல்லாமும் நிறைவேறிற்று. இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு
 நாம் நடை பிணமானோம்.
ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது..!
உலகின் வல்லரசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டவர்களின் இன்றைய நாட்கள் இதே பாடத்தை தான் அவர்களுக்கு 
கற்றுக் கொடுக்கிறது.
நாட்டுக்கு நாடு எல்லையை மூடுகிறார்கள். உணவுக்கு / மருந்துக்கு / மருத்துவருக்கு அல்லாடுகிறார்கள்.
நாம் பதுங்கு குழிக்குள் முடங்கியது போன்று இன்று இவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனிமையில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.
இன்று களப் பணியாற்றுவோருக்கு நாளாந்தம் கைதட்டி நன்றி தெரிவிக்கிறார்கள். அதை ஊடகங்கள் 
கொண்டாடுகின்றன.
அன்று ஒரு சிறு நிலப்பரப்பில், எந்த நிமிடமும் நம் உடலும் சிதறலாம் எனத் தெரிந்தும், நமது மக்களை காப்பாறும் மருத்துவப் பணியில் இருந்த / இறந்த எமது மருத்துவர்கள், களப் பணியாளர்களே எம் கண்முன்
 வந்து போகிறார்கள்.
அன்று நாம் உங்கள் முற்றமெங்கும் / வீதிகளெங்கும் ஒப்பாரி வைத்தோம், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும்..,
நாம் ஈழத்தவர்கள்; மனித நேயத்துடன் எங்கள் கண்களும் உங்களுக்காக கண்ணிரைக் கசிந்து கொண்டுதான் 
இருக்கின்றன.
நன்றி,,யஸ்  கே, சாமி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>