siruppiddy

8/6/15

அதி சக்தி வாய்ந்த பிரபாகரனின் கைத்துப்பாக்கியை இராணுவம் மீட்கவில்லையாம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று 
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். பிரபாகரனின் விலைமதிப்புள்ள கைத்துப்பாக்கி மற்றும் தமது உறுப்பினர்களை 
அடையாளம் கண்டுகொள்வதற்காக புலிகள் பயன்படுத்திய இலக்கத்தகடு என்பன காணாமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தச் செய்தியை வெளியிட்டவர்களிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும். எம்மிடம் இதுபற்றிய தகவல்கள் பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படியாயின், பிரபாகரன் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து கைத்துப்பாக்கியோ அல்லது கழுத்தில் அணிந்துகொள்ளும் இலக்கத்தகடோ இராணுவத்தினரால் மீட்கப்படவில்லையா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரபாகரன் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது சடலத்தில் கைத்துப்பாக்கி இருக்கவில்லை. மீட்கப்படவுமில்லை; மீட்கப்பட்டதாக எம்மிடம் தகவல் பதிவாகவுமில்லை.
இருப்பினும், இலக்கத்தகடு குறித்து நான் சற்று ஆராய்ந்து கூறவேண்டும் – என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தனது இடுப்புப் பட்டியில் எப்போதும் பிஸ்டல் வைத்திருப்பார். அவரிடமிருந்த பிஸ்டல் நவீனத்துவமானதும் சக்தி வாய்ந்ததுமாகும். ஜி – லொக் 17 ரக 9 மில்லிமீற்றர் பிஸ்டலையே அவர் வைத்திருந்தார்.
அத்துடன், பிரபாகரனிடம் எப்போதும் ரைபிள் ஒன்றும் காணப்படும். அந்த ரைபிள், எம் -16, ஏ – 2 ரகத்தைச் சேர்ந்தது. அந்த ரைபிளைப் பயன்படுத்தி கிரனேட்டும் ஏவமுடியும். அவ்வாறு தனிச் சிறப்பு வாய்ந்த ரைபிளையே பிரபாகரன் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு அடையாளப்படுத்துவதற்காகத் தகடு வழங்கப்பட்டிருக்கும். பிரபாகரனது தகடு த.வி.பு 001 ஆகும். அந்தத் தகட்டையும் தற்போது காணவில்லை.
போரின் இறுதியில் பிரபாகரனது உடலை மீட்ட இராணுவ உயரதிகாரிகள் நினைவுச் சின்னமாக, இவற்றை எடுத்துச் சென்று விட்டனரா அல்லது அதனை எரித்து விட்டனரா என்பது தெரியவில்லை. இதனால் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளதாக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக