siruppiddy

10/12/15

மழைக்குள் இருந்து ஒரு குரல்-01

நாங்கள் இப்ப நல்லா இருக்கிறம். இப்ப கொஞ்சம் தண்ணி வடிஞ்சிட்டுது. இன்றுதான் கரண்ட் வந்திச்சு. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மண்ணை கடந்து வந்திருக்கிறம். பாவப்பட்ட எங்கள் மீது தான் மீண்டும் மீண்டும் துன்பத்தை இந்த கடவுள் விதைக்கிறன். ஏற்கனவே ஏற்பட்டிருந்த வலி இன்னும் ஆறவில்லை அதற்குள் மீண்டும் தொடரும் அவலங்களால் எங்கள் வாழ்க்கை துயரம் நிறைஞ்சு போய் கிடக்குது. நியத்தில் கடவுள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது?
சரி நாங்கள் ஏதோ பாவத்தை செய்து பிறந்தோம் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பச்சிளம் பருவத்திலே தந்தையை பறி கொடுத்தார்கள் கண்முன்னே பல உயிர்கள் மடிந்ததை கண்டு ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீள முன் இவ்வாறு துன்பத்தை இந்த கடவுள் ஏன் அவர்களுக்கு கொடுத்தான்...?
தம்பி கிட்டத்தட்ட ஒரு வாரங்கள் யாருமே அற்ற தனிமையில் வெளித் தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் என் இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உதவிக்காக காத்திருந்தேன். ஆனால் உதவி எனக்கு கிட்டவில்லை. நான் நினைக்கிறேன் நெஞ்சளவிற்கு அதிகமான தண்ணீர் 
பாச்சலிற்கு நடுவில் 
நடுக்கடலில் கைவிடப்பட்டவர்களாக நாங்கள் கிடந்தோம். இருந்த உணவுப்பொருட்களை பகிர்ந்து குழந்தைகளின் பசியாற்றிக் கொண்டு மழைநீரை கொதிக்க வைத்து பருகிக்கொண்டும் எங்களின் இறுதி மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டிருந்தோம்.
பிள்ளைகள் பயத்தில் உறைந்து போய் கிடந்தனர். வெளியில் என்ன நடக்குறது என்றது புரியவில்லை. இருட்டும் குளிரும் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த வெள்ளமும் அவர்களை நிலைகுலைய வைத்திருந்தது. எப்போதும் என்னை இறுக பற்றிக் கொண்டே இருந்தார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் வெடிகுண்டு மழைக்குள் எவ்வாறு தவித்தோமோ அதே போலவே நாங்கள் தவித்துப் போய் கிடந்தோம். இருட்டும், துயரமும், உயிர்பிழைத்தலுல் எமக்கு புதியவை அல்ல பல தடவைகள் எங்கள் மரணத்தை 
கண்முன்னே
 பார்த்தாலும், அருகில் உதவிக்கு உறவுகள் இருந்தது எமக்கு கொஞ்சம் பலத்தை தந்தது ஆனால் இங்கு தனிமையே எழுந்து எம்மை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் நாங்கள் மீண்டும் ஒருமுறை மீண்டு வந்துள்ளோம்.
இது நீண்ட முயற்சியின் பின் இன்று கிடைத்த ஒரு தொலைபேசித் தொடர்பில், இறுதி சண்டையில் தேசத்துக்கான விடுதலைப்போரில் தனது துணையை வித்தாக்கி தமிழகத்தில் உயிர்வாழ்தலுக்காக தஞ்சமடைந்த ஒரு சகோதரியின் குரல்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக