siruppiddy

4/4/15

தமிழ்நாடு சென்று பேச்சு நடத்த தயார்! தீர்வு காணும் முயற்சியில்

மீனவர்கள் பிரச்சினைக்கு வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம், இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாணசபையும் தமிழ்நாடு அரசும் இந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசுடன் சிறிலங்கா அதிபர் மீனவர்கள் பிரச்சினை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழ்நாடு சென்று பேச்சு நடத்தவும் தான் தயாராக இருப்பதாக அவர் கூட்டத்தில் தெரிவித்ததாகவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், கடல் வளங்கள் சுரண்டப்படுவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்த மீன்பிடிமுறையை இலங்கைக் கடற்பரப்பில் முழுமையாக தடை செய்வதற்கான வலுவான சட்டத்தை கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இருதரப்பு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் நடந்த மீனவர்களுக்கிடையிலான கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட, ஆண்டுக்கு 83 நாட்கள் சிறிலங்கா கடற்பரப்பில், இந்திய மீனவர்களை அனுமதிக்கக் கோரும், யோசனையும் இந்தக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு கடலோரக் காவல்படையை பயன்படுத்துமாறு கோரும் மனு ஒன்று சிறிலங்கா அதிபரிடம், வடக்கு மாகாண கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில், சிறிலங்கா அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்திய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக