siruppiddy

12/4/14

ஆமிக்கு ஆட்பிடிப்பில்! முகவரானார் அதிபர்**

வன்னியினில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளினில் படைக்கு அல்ல, ஏனைய வேலைகளிற்கே என்று கூறியே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதே பாணியிலேயே கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதால் அங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக சூழலினில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரியில் இலங்கை இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவது தொடர்பினில் மாணவ அமைப்புக்கள் கடும் சீற்றமடைந்துள்ளன. குறிப்பாக குறித்த தொழில்நுட்பக்கல்லூரி அதிபரே மாணவர்களை பொறியினுள் தள்ளிவிடும் கைங்கரியத்தினில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலிருந்து தொழில்நுட்பக்கல்லூரியினில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்புச்செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக்கல்லூரிப் பணிப்பாளர் கலாநிதி ந.யோகராஜனின் அனுசரணையுடனேயே படையினர் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை சீருடையினில் அங்கு சென்ற படை அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இக் கலந்துரையாடலில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று யோகராஜன் நிர்ப்பந்தித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய படை அதிகாரி இது படையினருக்கான ஆட்சேர்ப்பு அல்ல என்று கூறியதுடன் படைதரப்பின் அங்கமான விரிவுரையாளர்கள், சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் வெற்றிடங்களிற்கே இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் தாங்கள் எந்தத் துறைகளில் கல்வி கற்கின்றார்களோ அந்த துறையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இணைந்துகொள்பவர்களுக்கு படைப்பயிற்சி இல்லையெனவும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வேதனம், உடைகள், தங்குமிடம், உணவு இலவசம், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே வேலை என்று பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டிருந்தன.கற்கை நெறியைப் பூர்த்தி செய்யாத மாணவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும் என்று படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக