siruppiddy

16/5/15

வடக்கில் சத்தமில்லா யுத்தம் நடக்கிறது ...!

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வடக்கில் நிகழும், நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் தமிழ் இனத்தின் அடையாளங்களையும், பண்பாட்டு கலாச்சார சீரழிப்பின் உந்துதலாகவே காணமுடிகின்றது.
இதை சற்று ஆழமாக ஆராய வேண்டிய தார்மீகக் கடமையில் நாம் இருக்கின்றோம்.
யுத்தம் முடிந்த 2009ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கில் தமிழர்களை அடக்கி, பயமுறுத்தி வைக்க வேண்டிய தேவை அரச தரப்பிற்கு உடன் அவசியமாயிற்று. அதன் அங்கமாகவே கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டலில் வெள்ளை வான் கும்பல்கள் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தன.
இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்தவர்களும், விமர்சித்தவர்களும், முன்னாள் போராளிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் என அத்தனை பேரும் ஏற்றப்பட்டார்கள்.
அதே சமகாலத்தில் கிறீஸ் பூதமும், மர்ம மனிதன் நடமாட்டமும் மக்களை அச்சுறுத்தி பயப்பீதிக்குள் வைத்திருந்தது ஆளும் தரப்பு. அதன் தொடர்ச்சியாய் நீண்டு சென்றது தான் ஆவா குரூப். இது வடக்கில் வாள்வெட்டு சம்பவங்களில் முக்கிய பங்காற்றியிருந்தது.
இவையெல்லாம் ஒரு இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்குவதில் முதன்மை பெறும் காரணிகள்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் அதாவது வடக்கில் புலிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த வேளை,  வாள்வெட்டுக்களும், கற்பழிப்புக்களும், போதைப்பொருட்களின் பயன்பாடும் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன.
அன்றைய காலகட்டங்களில் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தினையும், தமிழ் இனத்தின் போக்கினையும் புலிகள் தீர்மானித்திருந்தார்கள். இதனால் குற்றங்கள் குறைந்து இருந்தது அல்லது இல்லாமல் போயிருந்தன. இதனால் தான் புலிகள் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு என்று சர்வதேசமே ஒத்துக்கொண்டது.
இவ்வாறான ஒரு சூழமைவில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வடக்கில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இப்பொழுது வடக்கின் நிலையானது தமிழ் சினிமா மாதிரியிருக்கின்றது.
இப்பொழுது வடக்கில் தாராளமாக போதைப்பொருட்களை அதன் தரகர்கள் மூலம் அரசாங்கம் உள்நுழைத்துள்ளது. இது கோத்தபாயவின் காலத்தில் முளைவிடத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அது பெருவிருட்சமாக வளர்ந்து சாதாரணமாக மாறியுள்ளது.
வாள்வெட்டுக்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இளைஞர் குழுக்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டும், வன்முறையில் இறங்கி விடுகின்றார்கள். இதை காவல்த்துறை தட்டிக்கேட்பதாக இல்லை.
அதேவேளை பெண்களின் பாதுகாப்பு என்பது இப்பொழுது கேள்விக்குறியாக மாறியுள்ளது. நேற்றைய தினமும் புங்குடுதீவில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கின்றாள்.
இவ் வன்புணர்விற்கும், கொலைக்கும் குடும்பப் பகை தான் காரணம் என்று ஆகப்பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதனை சாதாரணமான கோணத்தில் நாம் நோக்குவது நல்லதல்ல. வடக்கில் இப்பொழுது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது போதைப்பொருட்களின் பயன்பாடு.
இது எங்கிருந்து வடக்கிற்கு செல்கின்றது. இதை யார் எப்படி விநியோகிக்கின்றார்கள். இதற்கான இடைத்தரகர்கள் யார் என்பதெல்லாம் அரசாங்கத் தரப்பிற்கும், பொலிஸாருக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் இவை யாவும் திட்டமிட்ட வகையிலான ஒரு இனவழிப்பின் மறுவடிவம் என்பது தான் உண்மை.
ஆயுத ரீதியில் போராடிய தமிழ் இனத்தினையும் அதன் போராட்டத்தினையும், பேரம் பேசும் சக்தியையும் நிர்மூலமாக்கிய பின்னர், தமிழ் இனத்தின் அடுத்த சந்ததியை குறிவைத்து செயலாற்றும் காரியத்தை தொடங்கியுள்ளது பேரினவாத அரசாங்கம்.
ஒரு இனத்தின் இளைய தலைமுறை சிந்திக்கும் ஆற்றலும், தன் இனத்தின் பற்றையும் கொண்டு இருக்குமாயின் அது தனக்கும் தனது இனத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளையும், அடக்குமுறையினையும் தட்டிக்கேட்க துணிந்து எழும். ஆனால் அந்த இளைய தலைமுறையின் வாழ்வில் சில திசை திருப்பல்களை செய்தால் தமக்கு தலையிடி குறையும் என நினைக்கின்றார்கள் சிலர்.
ஆம் போதைப்பொருட்கள் வடக்கிற்கு கடத்தப்படுவதற்கான காரணங்களில் முதன்மை பெறுவது இனத்தின் வேரையே அழிப்பதற்கான முதன்மை காரணியாக திகழ்கின்றது.
நமது இளைஞர்களை போதைப்பொருட்களுக்கு அடிமைப்படுத்திவிட்டால் அவர்கள் தம் இனம் சார்ந்தோ தமது எதிர்காலம் சார்ந்தோ சிந்திக்க மாட்டார்கள் என்பது அவர்களின் முடிவாக இருக்கின்றது.
இதனால் தான் போதைப்பொருட்களை வடக்கில் விநியோகிக்கும் கும்பல்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ காவல்துறை துணிந்து செயற்படவில்லை.
மாவீரர்களுக்கும், யுத்தத்தில் பலியானவர்களுக்கும் விளக்கேற்றியவர்கள் யார் என்று கண்டறிந்து உடனேயே கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் இவர்களால் போதைப்பொருள் விநியோகஸ்தர்களை கைது செய்ய முடியவில்லை.?
பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர்களுக்கும், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் தண்டனை வழங்க முன்நிற்பவர்கள் சட்டவிரோத, தடை செய்யப்பட்ட இவ்வாறான போதைப்பொருட்களை வைத்திருக்க அனுமதிப்பது ஏன் என்று யோசித்தால் எல்லாமே பதில் ஒன்று தான், இனவழிப்பை நேர்த்தியாக அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
இப்பொழுது வடக்கில் நிகழும் பாதி சீரழிவுக்கு காரணமே இவ்வாறான போதைப்பொருட்களின் பயன்பாடு தான். ஆரம்பத்தில் போதைப்பொருட்களினை இலவசமாகவே இக்கும்பல்கள் வழங்கியதாக முன்னர் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
ஆக அடிப்படையில் மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த இப்பொழுதே தயாராக வேண்டும்.
யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களுக்கு என்று ஒரு தமிழர்களின் சக்தியாக திகழ்வது வடமாகாண சபை. இது ஆட்சிப்பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளை கடக்கப் போகின்றது.
ஆனால் இவ்வாறான குற்றங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிகழ்வதனை தடுக்காமல் தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்று எடுக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது.
அப்படி இனத்தின் விடுதலையை பெறவும் முடியாது. புலிகளின் இடத்தில் வடமாகாண சபை இருந்தாலும்,(புலிகளின் பலத்தோடு) இல்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வடமாகாண சபை இருக்கின்றது.
ஆக, கடமையை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
இப்படியே நிலமைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமானால் இன்று புங்குடுதீவில் நடந்ததைப்போல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை தமிழ் இனம் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதற்கு வடக்கில் அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு செயலில் இறங்க வேண்டும்.
சத்தமாக நிகழ்த்தப்பட்ட போர் நின்று விட்டது. இப்பொழுது சத்திமில்லாத போர் தமிழ் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. அது எதிர்காலத்தில் இன்னும் வீரியம் பெறும்.
காலத்தின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இல்லேயேல் 2009 அழிவை விட மிகப்பெரிய அழிவு காத்திருக்கின்றது. அதையும் இந்த தமிழ் இனம் சந்திக்கப் போகின்றதா?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக