siruppiddy

30/5/15

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்!  இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறிசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள். மே 19 2009. இலங்கை மண்ணிலிருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்று வெற்றியை இலங்கை இராணுவம் கொண்டாடிய தினம்.
மனித உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு காட்டுமிராண்டித் தாக்குதலை ‘போர்’ என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் மீது தொடுத்தது இலங்கை இராணுவம்.
அதில், இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம் பேர். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்து முடமாக்கப்பட்டவர்கள், குடும்பத்தை இழந்து நிர்க்கதியானவர்கள், கணவரை இழந்து விதவையானவர்கள் எண்ணிக்கையும் இதில் அதிகம். வன்னி பகுதியைச் சேர்ந்த 1,46,679 பேர் இதுநாள் வரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்திருக்கிறது
 இலங்கை அரசு.
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 28-வது கூட்டத் தொடரில், ‘2010-ல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேரை இலங்கை அரசு சிறைப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களைக் கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை ஐ.நா அதிகாரிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாவது,
என் கணவர் எழிலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்தார். போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என் கணவர், நான் மற்றும் என்னுடைய மூன்று குழந்தைகளும் 17-ம் தேதி முல்லைத்தீவில் இருந்தோம். குடிக்க தண்ணீர்கூட கிடையாது. நாலாபுறமும் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளும் குண்டு பொழியும் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.
அதற்கு மறுதினம், வட்டுவாகல் என்ற இடத்தில் பாதர் பிரான்ஸிஸ் என்பவரின் தலைமையில் என் கணவரும் 1,000-க்கும் மேற்பட்ட போராளிகளும் வெள்ளைக் கொடியேந்தி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.
அதில், யோகரத்தினம் யோகி, லாரன்ஸ் திலகர், அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், முன்னாள் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, நிர்வாகச் சேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், பிரியன், தீபன், விளையாட்டுத் துறை ராஜா மற்றும் அவரது மூன்று பிள்ளைகள், வில்வன், இன்பன், மஜீத், ஹோல்சர் பாபு, கவிஞர் புதுவை இரத்தினதுரை, வே.பாலகுமார், மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் ஆகியோரும் இருந்ததை நான் நேரில் பார்த்தேன்.
அவர்கள் சரணடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை கடந்துவிட்டன. அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது என்றார்.
இலங்கையில் 2 லட்சம் தமிழ் மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும் என்று சொன்ன பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பொறுப்பாளர் சுதா, அதற்கான ஆதாரப் புகைப்படத்தையும் நம்மிடம் கொடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள்! அந்த சமயத்தில் பசில் ராஜபக்‌ச மூலம் இலங்கை இராணுவத்தைத் தொடர்பு கொண்டோம். விடுதலைப் புலிகள் சரணடைய தேவையான அனைத்து விடயங்களையும் செய்வதாக உறுதி தந்தார்கள்.
நான் உடனே நடேசன் அண்ணனைத் தொடர்புகொண்டு விபரத்தைச் சொன்னேன். அவர் என்னையும் வருமாறு அழைத்திருந்தார். ஆனால், முள்ளிவாய்க்கால் பகுதியில் என்னை இராணுவம் அனுமதிக்காததால் நான் செல்லவில்லை.
மறுநாள் அதிகாலையில், மகிந்த ராஜபக்‌ச என்னைத் தொடர்புகொண்டு, ‘அவர்களுடைய சரண் அடைதலை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதை நீங்கள் கட்டாயம் அவர்களிடம் சொல்ல வேண்டும். எத்தனை பேர் சரணடைய போகிறார்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு நான், ‘3000 போராளிகளும், 22,000 ஜனங்களும்’ என்று சொன்னேன். விஷயத்தை நடேசனிடம் சொன்னேன். போராளிகள் வெள்ளைக் கொடியை ஏந்தி வருவார்கள். அவர்களைச் சுட்டுவிடாதீர்கள் என்று எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
சரணடைய வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்துள்ளனர். அந்த தேநீரின் சுவை நாக்கில் இருந்து போவதற்குள் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று வெடித்திருக்கிறார். போரில் காயப்பட்டவர்களுக்கு, தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இறுதிவரை சிகிச்சை அளித்து வந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான மருத்துவர் வரதராஜா கூறியதாவது,
போர், இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை போர் என்றே சொல்ல முடியாது. கண்மூடித்தனமான தாக்குதலை இலங்கை இராணுவம் மேற்கொண்டிருந்தது.
அப்போது நான் பணி செய்த அனைத்து மருத்துவமனையிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. யூனிசெப் சொன்ன பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மாண்டு விழுந்தார்கள்.
அடிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கக் கூடாது என்பதில் இலங்கை இராணுவம் மிகத் தெளிவாக செயல்பட்டது. நான் இருந்த பகுதியும் கடைசியில் இராணுவத்தின் பிடியில் வந்தது. மே 15-ம் தேதி நடந்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்தேன். கைதுசெய்து மூன்றரை மாதங்கள் சிறை வைத்தனர்.
பின், சர்வதேச மருத்துவர்கள் அமைப்பின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டேன் என்கிறார் அவர். காணாமல் போல லட்சக்கணக்கானோர் பற்றி விரைவில் உண்மை வெளிவர வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக