siruppiddy

20/3/14

நேற்று நள்ளிரவு முதல் சிவில் உடை இராணுவத்தினரால்

வவுனியாவில் உள்ள கிராமங்களில் நேற்று(19) நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக சிவில் உடை தரித்த இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு, தேடுதல் இடம் பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
வவுனியாவின் பிரதான கிராமங்களான பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வியாழன் நண்பகல் வரை அதனைத்

தொடர்கின்றனர். இவ்வேளை வீடுகளில் பட அல்பங்கள் சோதிக்கப்படுகின்றன. நள்ளிரவின் பின்னர் திடீரென இப்பகுதியில் ஆள் நடமாட்டம் காரணமாக வளர்ப்பு நாய்கள் குரைக்கத் தொடங்கியதால் ஊர் மக்கள் அச்சத்துடன் விழித்துக் கொண்டனர்.

இன்று காலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொது மக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டைப் பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம் பெறும் இடத்தினைப் போன்று அவர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடித்திரிந்ததாகவும் தெரிய வருகின்றது.

மேலும், வவுனியாவின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு வீடாக சென்று பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின்; சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராமத்தவர்களை ஒரு பொது மைதானத்திற்கு விசாரணைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே, தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெரும் எடுப்பிலான இத்தகைய சுற்றி வளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகளால் மீண்டும் இப் பிரதேசத்தில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கவே அரசு முயற்சிக்கின்றது.

மனித உரிமை விவகாரம் ஜெனீவாவில் சூடுபிடித்துள்ள நிலையில், அதனைத் திசை திருப்பவும் தனது ஆக்கிரமிப்புக் கொள்கையிலிருந்து சிறிதளவும் விலகாத தன்மையைக் கொண்டுள்ள இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் மீண்டும் தமது இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களைக் கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடே இதுவாகும்.

சமீபத்தில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெற்ற அடாவடித்தனமான, சுற்றிவளைப்பு, தேடுதல், கைதுகள் மற்றும் வண.பிதாக்கள் ஒன்றுமறியாத தாய் இராஜேஸ்வரி மற்றும் பராயமடைந்த மகள் கைது விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கவனத்திலெடுத்து இங்குள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக