siruppiddy

1/3/14

தயாராகும் அரசாங்கம் நவநீதம்பிள்ளைக்கு பதில்

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சவாலில் வெற்றி பெறுவதற்காக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் 74 விடயங்களுக்கு எதிரான விபரங்களுடன் தகவல்களை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை மீது குற்றம் சுமத்தும் தரப்பினர் மற்றும் போர்க்குற்றங்களை சுமத்தும் சாட்சியாளர்களின் அடையாளங்களை வெளியிடுமாறு சவால் விடுக்க அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 74 விடயங்களில் பல விடயங்கள் உண்மையல்ல என்பதை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் சாட்சியங்களுடன் ஒப்புவிக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதனை தவிர வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரில் நடந்த சம்பவங்களை மட்டும் விசாரணை செய்யாமல், கடந்த 30 வருடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்க தரப்பில் கோரப்பட உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா உட்பட பல நட்பு நாடுகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாட்சியாளர்கள் யார் என்பதை 20 வருடங்கள் வரை வெளியிடாமல் இருப்பது சட்டவிரோதமானது என அரசாங்கம் நேரடியாகவே கூட்டத் தொடரின் போது தெரிவிக்க உள்ளது.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இலங்கைக்கு இடமளிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுக்க உள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக