siruppiddy

13/8/15

சிறுதை நோர்வே உஷாவின் ஆருயிரே,,,,,

கோடைகாலம் என்கிற நினைவிருக்கிறது. ஆனாலும் சின்னதாய் ஒரு நடுக்கம் பரவி உடல் சில்லிடுகிறது. போர்வையை யாராவது இழுத்து விட மாட்டார்களா என்று தோன்றிய மறு கணமே வியர்த்துக் 
கொண்டு வருகிறது. மூச்சு அடிக்கடித் திணறுகிறது. அப்போதெல்லாம் என்னைச் சுற்றி ஆள் நடமாட்டமும் சலசலப்பும் அதிகமாகிறது. பின்னர் ஆழ்ந்த அமைதி. என்னுள் ஏதோ செயலிழந்து போய்க் கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.
 வெளியே என் ரங்கன் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது. வசீகரமான குரல். எவ்வளவு தான் பெரிய ஒரு ஆணாக வளர்ந்து விட்டாலும் இன்னமும் அள்ளி அணைத்துக் கொள்ளத் தூண்டும்
 அன்பு தடவிய குரல்.. திடீரென்று படபடப்பாக இருந்தது. எழுந்திருக்க என்னுள் ஒரு அணுவும் இடமளிக்கவில்லை. நம் உடல் இப்படியா 
பாறாங்கல்லாய்க் கனக்கும்? ரங்கா…. என் செல்வமே…. உன்னுடன் சுயநலமாக நடந்து கொண்டு விட்டேனா? இத்தனை 
வருடமும் என்ன சாதித்தேன்! உனக்கு எதையுமே செய்து கொடுக்காது மகா பாவியாகப் போகப் போகிறேனே! அருகே அவனை 
உட்கார வைத்து, என் கண்களிலும் மனதிலும் நிறைத்துக் கொண்டு.. அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு… அவன் மனதில் ஏதும்
 ஏக்கங்கள் இருக்கின்றனவா எனத் தெரிந்து கொண்டு…… அவனுக்குச் செய்த அனியாயங்களிற்காக என்னை மன்னித்து விடும்படி கேட்க வேண்டும்…. என் குழந்தை பேசக் கேட்டு அவன் மடியில் இந்த உயிர் பிரிய வேண்டும்…. 
ஆனால் முடியுமா என்னால்…? கண்ணீர் கன்னங்களில் இறங்குவதை உணர முடிகிறது. ஆனால் துடைக்கக் கைகள் எழவில்லை.
20 நாட்கள் கோமாவில் கிடந்திருக்கிறேனாம்.
 இன்றோ.. நாளையோ.. தான் தாங்குவேனாம்… அவ்வப்போது கேட்ட பேச்சுக்குரல்களால் என் நிலமை எனக்கு நன்றாகவே புரிந்தது. சில மணி நேரங்களில் நான்.. காற்றாகி விடப் போகிறேன். குப்பையாய்க் கிடக்கப் போகும் அசைவற்ற உடலை வெளியிருந்து வேடிக்கை பார்க்கப் போகும் உன்னதமான தருணம் நெருங்குகிறது. சாவைப் பற்றிப் புதிதாகச் சிந்திப்பதற்கு இந்தக் கணம் எனக்கு எதுவுமே இல்லை
. என் பாதி வாழ்வு என் சாவை இலக்காகக் கொண்டு வாழ்ந்தது தான். ஒவ்வொரு கணமும் ஒரு வியாபாரியைப் போல நான் உயிர் வாழ வேண்டிய அவசியத்தையும் இறந்து போக
வேண்டும் என்ற தீராத வேட்கையையும் தராசிலிட்டு, இரண்டு தரப்பு நியாயங்களையும் இரவு பகலாக ஆராயந்ததில் வாழ்ந்த வாழ்க்கை தான் என்னுடையது. இந்த நிமிடம் தான் என்னுடையது. சில மணி நேரங்களில்… உருத் தெரியாமல் எனக்குள் கலந்து விட்ட ஏக்கங்களும் வலிகளும் சத்தமின்றி என்னுடனேயே சமாதியாகும். வலியற்ற அந்தப் பொழுதுக்காக காத்திருக்கிறேன்…..
ஆனால்.. என் சின்னு பாவம். தனித்து விடுவானே.. தன் மனதில் உள்ளதையெல்லாம் கொண்டு போய் எங்கே கொட்டுவான். அவன் சந்தோஷமாக, உற்சாகமாக, தன் தனிமை தெரியாதவனாய் வளர வேண்டும் என்று நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தில்… 
அவனது எதிர்காலத்திற்கு உபயோகமாய் நிரந்தர படிப்பு, உத்தியோகம் என்று ஒரு தாயாகச் செய்து முடிக்க வேண்டிய கடமைகளிலிருந்து தவறி விட்டேனா…?
«எல்லாம் உன் திமிர் ஒரு பொம்பிளையின் வளர்ப்பு. ஒரு தகப்பன் இருந்து வளர்த்திருந்தால் இந்த வயதுக்கு அவன் ஒரு நல்ல வேலையில் இருந்திருப்பான். உன்னால் தான் அவன்ர வாழ்க்கை இப்ப கேள்வியா இருக்குது!»
ஆக்ரோஷம் என்ற வார்த்தை ராமுக்குத் தான் நன்றாகப் பொருந்தும். கண்களில், முகத்தில்.. ஒவ்வொரு அணுவும் நெருப்பை வெறுப்பாய் உமிழ வார்த்தைகளை விட்டெறிய அவனால் தான் முடியும். அந்தளவிற்கு நான் அவனுக்கு என்ன தவறு செய்து விட்டேன் என்று யோசித்துக் களைத்த வேளையில் தான் ஒரு நாள் அவனை விட்டு நான் குழந்தையுடன் வெளியேறினேன்.
தெரிந்தோ தெரியாமலோ… ராமின் வளர்ப்பில் வளரக்கூடிய ஒரு குழந்தையின் சின்ன ஒரு சாயல் கூடத் தெரியாமல் ரங்கனை வளர்த்து விட்டேன். குழந்தையைச் சந்தோஷப்படுத்திய மலை 
ஏறுதல் முதல் புல்லாங்குழல் இசை வரை என் சக்திக்கு மீறி எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வைத்தேன். அதற்காக நேரம் காலமின்றி உழைக்க வேண்டியிருந்தது. சரியோ, தவறோ…என் மன 
உளைச்சலுக்கும் என் குழந்தை மனதில் ஏக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஒரே வழி மனதுக்குப் பிடித்த விஷயங்களில் வரையறை இல்லாத ஈடுபாட்டைச்
செலுத்துவதே என்று ஒரு கண்மூடித்தனமான எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ராம் சொல்வது போல் அது முட்டாள்த்தனமோ. குழந்தையின் வாழ்வை கருத்தில் கொண்டு ராமுடனேயே வாழ்ந்திருக்க வேண்டுமோ.
ராமுடன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கெட்ட கனவு போலத் தெரிகிறது. எவருக்கும் புலப்படாத அர்த்தங்கள் அவனுக்கு வெகு சுலபமாகப் புரியும். நான் குழந்தையை இந்த நாட்டுக்கே பிரதமராக்கியிருந்தாலும் 
அதற்கும் கூட ஏதாவது குறை கூற அவன் விரல் என்னை நோக்கி நீளும். நல்ல வேளையாக அவன் என் சாவுக்கு இல்லை. முன்னுக்குப் பின் முரணான பேச்சிலிருந்தும் அவனது நடிப்புத் திறமையைப் பார்ப்பதிலிருந்தும் விடுதலை…
தன் மனைவி பிள்ளைகளுடன் வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறானாம். அரசல் புரசலாய்க் காதில் கேட்ட சங்கதி தான் இதுவும். நல்ல வேளையாக என் கேட்கும் சக்திக்கு இது வரை எந்தப் பிரச்சனையும் 
இல்லை.
ராமை விட்டு நான் வெளியேறிய போது பாவம், குழந்தை சரியாகப் பேசக் கூடத் தொடங்கியிருக்கவில்லை. பிறர் கண்களுக்கு நான் துணிந்தவளாகத் தெரிந்திருக்கலாம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தெளிவு என் புத்திக்குத் தெரிந்தாலும் அதன்படி வாழ விடாமல் எனக்குள் இருந்த காயங்கள்… ஏமாற்றங்கள், பாதுகாப்பின்மை… எனக் கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சல் என்னை எரிக்கத் தொடங்கியிருந்தது… 
ஒரு சின்னத் தவறும் செய்யாமல் எப்போதும் விழிப்பாக…ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஆரம்பித்த மன அழுத்தம்…. ராமைத் திருமணம் செய்த பின்பு ஆரம்பித்தது….. 
அவனுடன் வாழ்ந்த போதும் சரி… பின் தனியே வந்து விட்ட பின்பும் சரி… ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தது. அவ்வப்போது மாத்திரைகளைப் போட்டு உள்ளுக்குள் கனன்ற மன உளைச்சலை அணைத்துக் கொண்டு என் குழந்தைக்கான உலகத்தில் 24 வருடங்கள் ஓட்டியாகிவிட்டது.
ராம் சொல்வது போல் ஒரு ஆணின் உதவியின்றிக் குழந்தையை வளர்த்ததால் தான் பல விஷயங்களில் கவனம் 
செலுத்த விட்டு அவனது வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனோ..? என் குழந்தை பட்டப்படிப்பு முடித்த பிறகும் வேலை எதுவும் கிடைத்த பாடாக இல்லையே. ஒரு ஆண்
குழந்தைக்குத் தந்தையிடம் தன் கனவுகளைப் பகிர்ந்து கொள்வது இலகுவாக இருக்குமோ? சுலபமாக வேலை கிடைக்கும் ஒரு துறையில் அவனை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அவனுக்குப் பிடித்தது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தத் துறையைத் தெரிவு செய்ய விட்டேன். வேலை தேடி மனம் சலித்துப் போகிறானோ என்னவோ. நான் படுக்கையில் விழ முன்னர் சில நாட்களாய் ரங்கன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதும் என் மடியில் சாய்ந்து கொண்டு என் கைகளை வருடியபடி அமைதியாக எதையாவது படித்துக் கொண்டிருப்பது நினைவிலிருக்கிறது. «தலையிடிக்குதா குட்டிக்கு?» கவலையுடன் குழந்தையைத் தொட்டுப் பார்த்ததும் அவன் எதுவும் இல்லையென எனக்குச் சமாதானம் சொன்ன நாட்களும்…
அவன் நிலமைக்கு என்னை விட வேறு யார் 
காரணமாக இருக்க முடியும்?…..
ஒரு வேளை ராமுடன் வாழ்ந்திருந்தால் மருத்துவத்துறையோ பொறியியலோ… பிடிக்காததாக இருந்தாலும் குழந்தை நாளடைவில் படித்து முடித்திருப்பான். தகப்பனைப் போலில்லாமல் எதுவாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செயற்படுபவன் அவன். தந்தை இல்லாமல் வளர்ந்ததால் தான் இந்த நிலை என்று நினைப்பானோ என் குழந்தை? அம்மா அப்பாவை விட்டுத் தனியாகப் புறப்பட்டு வரும்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லையே என நினைப்பானோ…?
அவனுக்காக கைகளை நீட்ட முயற்சித்தால்.. முடியவில்லை. வெறுமனே விரல்கள் நடுங்க மட்டுமே செய்தன. «ங்ங்…ஆ…!» மெல்ல குரல் பிரயத்தனப்பட்டு வெளிவருகிறது.
யாரோ உள்ளே வருவது கேட்டது. கூடவே «வா..!» என்கிற ரங்கனின் கிசுகிசுத்த குரல். வேடிக்கை தான். உரத்துப் பேசினால் விழித்துக் கொள்வேன் என்று நினைத்தாயா ரங்கா…? யாரோ தயங்கி நின்றிருக்க வேண்டும். அவன் அழைத்ததும், உள்ளே வந்திருக்க வேண்டும். «இரு பிருந்தா». என்றபடி என் கட்டில் விளிம்பில் உட்கார்ந்தான். ஓ.. பிருந்தாவா.. !? 
ரங்கனுடன் படித்தவள். கூடப் படிக்கும் மற்றைய நண்பர்களுடன் நம் வீட்டிற்குப் பல தடவைகள் வந்திருக்கிறாள். என் கைகளைச் சட்டென்று
பிடித்துக் கொண்டு என் ரங்கன் அழத் தொடங்க.. என் சிந்தனை தடைப்படுகிறது.
« அம்…மா… பாரம்மா. எனக்கு வேலை கிடைச்சிருக்கு பாரம்மா….மாசம் 40,000 என்றாலும் கிடைக்குமம்மா.. நான் எதிர்பார்த்த அதே இடம்…. ஐயோ கடவுளே இவ்வளவு காலமும் உங்கட முயற்சி பலனளிச்சு எல்லாம் கூடி வாற வேளையில இப்பிடிப் படுத்திட்டீங்களேயம்மா… தாங்க முடியேல்லயம்மா…….» கேவிக் கேவி அழுதவனின் அருகில் பிருந்தா வந்து உட்கார்ந்து, « ரங்கா..ப்ளீஸ்……» என ஏதோ ஆறுதல் சொல்கிறாள்.
«பிருந்தா.. அம்மா என்ன மாதிரி ஒரு ஜீவன் தெரியுமா..? 
அப்பா ஒரு மாதிரி என்று கேள்விப் பட்டிருக்கிறன். அதைத் தவிர அவரைப் பற்றி எனக்கு எதையும் தெரிந்து கொள்ள வேணும் என்ற எண்ணமே வந்ததில்லை. அவ்வளவு தூரம் ஒரு அம்மாவா, அப்பாவா, அண்ணாவா, நண்பனா அம்மா இருந்திருக்கிறா. என் விருப்பங்களை மதிச்சு உற்சாகப்படுத்தி.. எப்பவுமே இவ்வளவு energetic ஆக positiveஆக யாராலும் இருந்திருக்க முடியாது. அம்மா எனக்குக் கிடைத்த
 ஒரு வரம் பிருந்தா… எனக்கு அவ படிப்பை மட்டும் தரவில்லை. அயராமல் முயற்சி செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கிறா. அவ கோமாவில் விழும் வரை அவவின் வியாதி யாருக்கும் தெரியாது. கடைசி வரை தன்னால் முடிந்ததை முயற்சி செய்தபடி தான் இருந்தா. ஏதாவது சரி வராட்டி ஒரு நாளும் சோர்ந்து போனதில்லை. என்னைச் சோர்ந்து போக விட்டதும் இல்லை. என் நன்றியை… என் அன்பை நான் சரியாகச் சொல்லவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை பிருந்தா……….
ஸ்போர்ட்ஸ், இலக்கியம், இசை என்று எல்லா விஷயங்களிலயும் ஆர்வமுள்ளவனாய் நான் இருப்பதால் தான் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பான வேலை கிடைச்சது. அது அம்மாவால தான். ஓயாத அவவின் முயற்சி என்னிட்டையும் இருப்பதால் தான்….
உன் friendsக்குள் பிருந்தா நல்ல பிள்ளையா இருக்கு எண்டு சொல்லுவா. உன் குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரிப்பா. அவவுக்கு உன்னைக் கட்டாயம் பிடிக்கும் என்று தெரிஞ்சும் காத்திருக்க நினைச்சேன். எனக்கு ஒரு வேலை கிடைச்சதும் அவ்விடம் சொல்லி உன்னிடமும் பேச நினைச்சேன். இப்ப எல்லாமே late ஆகப் போச்சு பிருந்தா…»
என் குழந்தை கேவிக் கேவி அழுகிறான். பிருந்தா அவனை உலுக்குகிறாள். «பார் ரங்கா..அம்மாவின்ர கண்ணில கண்ணீர்… அவவுக்கு நீ சொல்லிறது எல்லாம் விளங்குது எண்டு தான் நினைக்கிறேன்…..»
ரங்கன் என் கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான். «அம்மா..என்னோட நீங்க இருக்கோணுமம்மா… நீஙக எனக்கு எப்பவும் வேணுமம்மா… நீங்க இல்லாட்டி நான் எங்கயம்மா போவேன்..!» எனக் கதறுகிறான். அப்போது என்னை அவன் தொடுவதை என்னால் உணர முடியவில்லை. மருத்துவமனைக் கட்டிலில் காய்ந்து கறுத்த உடல் ஒன்று கிடக்க.. அட.. அது நானே தான். அருகே அழுதபடியிருந்த 
ரங்கனையும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த பிருந்தாவையும் ரசிக்கிறேன். என் கண்மணி…. இந்த இழப்பு உனக்குத் துயரம் தான். ஆனால் நீ இப்போது தயாராகி விட்டாய். இனிமேல் உன்னால் வாழ்க்கையுடன் போராட முடியும்.
சிறுதை ஆக்கம் நோர்வே உஷா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக