siruppiddy

20/4/13

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது//,,


பாகிஸ்தான் மாஜி அதிபர் முஷாரப் கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 99ம் ஆண்டு, பிரதமர் நவாஸ் ஷரீப் அரசை கவிழ்த்து விட்டு, ஆட்சியை கைப்பற்றினார்.2008ல், நடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால், பதவியிலிருந்து விலகினார்.போதிய பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால், பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 2007ல் தலைமை நீதிபதி உள்பட, 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்து, அவசர நிலையை பிறப்பித்தார். இவரது இந்த செயல், தேச துரோக செயலாக குற்றம் சாட்டப்பட்டு, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.பல்வேறு நகரங்களில் இவர் மீது வழக்குகள் இருந்ததால், துபாய் மற்றும் லண்டனில் இவர் சில ஆண்டுகளாக தங்கியிருந்தார்.
அடுத்த மாதம், 11ம் திகதி, பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக, கடந்த மாதம் நாடு திரும்பினார்.நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு செய்திருந்தார்."அரசியலமைப்பை மீறி நடந்த முஷாரப்பை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது” என, வழக்கறிஞர்கள் பலர், தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தனர். இதையடுத்து, தேர்தல் தீர்பாயம், முஷாரப்பின், நான்கு வேட்பு மனுக்களையும் நிராகரித்து விட்டது.
இதனால், இவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம், ஜாமினை நீட்டிக்க கோருவதற்காக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.ஜாமினை நீட்டிக்க மறுத்த நீதிமன்றம், முஷாரப்பை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.இந்த உத்தரவை கேட்டதும், முஷாரப், தனது பாதுகாவலர்களுடன், அங்கிருந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் அவர் நேற்று கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில், முஷாரப்பை ஆஜர்படுத்தக்கூறிய, மாஜிஸ்திரேட், அவரை இரண்டு நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், முஷாரப்பை கொல்ல திட்டமிட்டுள்ளன. எனவே, அவருக்கு சிறையில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், இஸ்லாமாபாத் பண்ணை வீட்டிலேயே, பாதுகாப்பு கருதி அவரை சிறை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பண்ணை வீடு துணை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக