siruppiddy

23/11/13

4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த வழக்கு :


                                           ஜெயலலிதவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி, நவ.23 (டி.என்.எஸ்) 4 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு செய்திருந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது ஜெயலலிதா மற்றும் தொடர்புடைய தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்குதல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று தி.மு.க. எம்.பி.யாக இருந்த குப்புசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தன் அடிப்படையில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இடையில் இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான குப்புசாமி கடந்த மார்ச் மாதம் காலமானார். மனுதாரரின் மரணத்தைக் காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல்.தத்து மற்றும் மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா ஆஜராகி வாதாடினார். குப்புசாமி காலமான நிலையில் இந்த வழக்கில் ஏ.கே.எஸ்.விஜயன் எதன் அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2001-ம் ஆண்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து மறைந்த குப்புசாமியுடன் இணைந்து ஏ.கே.எஸ்.விஜயனும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும் இந்த

விஷயத்தில் மனுதாரர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இந்த வழக்கைத் தொடர அவரை அனுமதித்து இந்த மனுவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த மனுவின் மீது மேலும் விசாரணை தொடரும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீசு வழங்குமாறு உத்தரவிட்டனர். நான்கு வாரங்களுக்குப்பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக