siruppiddy

12/11/13

கனடாத் தமிழர் அமைப்புக்களின் பொது அழைப்பு


உலகெல்லாம் குரலெழுப்ப உலகத் தமிழினமே எழுந்து வா! கண்டனப் பேரணிக்கான கனடாத் தமிழர் அமைப்புக்களின் பொது அழைப்பு
நவம்பர் 14, 1976ம் ஆண்டு ஈழத் தமிழர் அறப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை. சமஷ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சியையே வழி நடாத்தி வந்த ஈழத்துக் காந்தியாம் தந்தை செல்வா அவர்களே தனித் தமிழீழ வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பிரகடனம் செய்த நாள்

அதையும் ஜனநாயக ரீதியிலான ஒரு ஆணையாக, அங்கீகாரமாக, முடிந்த முடிவாக வெளியிட்ட நாள் இதே காலப்பகுதியில் தான் இப்போது பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது.
இந்தச் சமயத்தில் சனல்-4 ஊடகம் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டமைக்கு சான்றான காணொளியை வெளியிட்டது. ஆம், இது உலகத் தமிழினமே ஒருமித்து உலகெல்லாம் குரலெழுப்ப வேண்டிய தருணம் இதுவரைக்குள், கனடாத் தமிழ்க் கூட்டமைப்புடன் கனேடியத் தமிழக் காங்கிரஸ், கனேடியத் தமிழர் இணையம், கனேடிய நாம் தமிழர் இயக்கம் ஆகியவற்றுடன் கனடா நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்துள்ளது.
இந்த இனவழித் தேசிய முடிவை ஏனைய குழுக்களும் ஊர்ச் சங்கங்களும் தமிழர் அமைப்புக்களும் மேற்கொள்ளலாம்.

இது பிரிந்து நின்று நமது குழுக்களின் பலத்தைக் காட்டும் நேரமல்ல முழுத் தமிழக் குலத்தின் எழுச்சியையும் எதிர்ப்பையும் ஒருமித்துக் காட்ட வேண்டிய நேரம். தாயகத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட உள்ள நேரத்தில் கனடா வாழத் தமிழர்களாகிய நாங்களும் இணைவோம்.
வெளிநாடெங்கும் புலம்பெயர் தமிழர்களும் அதே சமயத்தில் ஒரே அணியில் திரண்டு முழங்க வேண்டும் என்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை.

நிலத்தில் வட கிழக்கெங்கும் நவம்பர் 15 , 16 ம் திகதிகளில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை கூட்டமைப்பினர் நடாத்துவதற்கு ஆதரவாக புவியின் வடதுருவ நாடாம் கனடா தேசத்தின் முன்னணிக் கட்சிகளின் நிலைப்பாட்டின் வழியில் கனடாவின் அரச தலைமையே பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மகாநாட்டை புறக்கணித்ததை வலுப்படுத்தும் முகமாக ரொறன்ரோவில் இடம் பெறவுள்ள ஜனநாயக ரீதியிலான அறவழி அகிம்சைப் போராட்டத்தில் பங்கெடுப்போம்.

புலிகளின் மறப்போராட்டத்தை முள்ளிவாய்க்காலுள் புதைக்க முயன்றபோது உலகின் நகரெல்லாம் திரண்ட தமிழப் படையே ரொறன்ரோவில், 36 எக்லிங்ரன் அலெனியூ மேற்கில் அமைந்துள்ள தமிழரைக் கொல்ல அன்றே வாளேந்திய சிங்கக்கொடியை கொண்ட கொடிய சிறிலங்கா அரசின் தூரகத்தின் முன்னால், நவம்பர் 14 , 2013 வியாழக்கிழமை மாலை 3 .30 தொடக்கம் 6 30 மணிவரை நடைபெறவுள்ள அறப் போரில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

நில அபகரிப்பு, இன அழிப்பு, கற்பழிப்பு, இனக் கலப்பு, இராணுமயப்படுத்தல், சிங்களமாக்கல், பௌவுத்த திணிப்பு போன்றனவற்றை எதிர்த்தும், காணாமல் போனவர்கள், விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்போர், அரசியற் கைதிகள் ஆகியோருக்காகவும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் நிகழவுள்ள அறப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் அமைப்புக்களின் சார்பில் அழைக்கிறோம் என கனடிய தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன..

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக