siruppiddy

8/11/13

‘மெத்தப்படித்த கனவான்களின்’ அதிமேதாவித்தனம்!

                             
 
இலண்டனில் உள்ள டவுணிங் வீதியில் அமைந்திருக்கும் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலத்தில் நேற்று 07.11.2013 வியாழக்கிழமை பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, இனவழிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை மீளப்பெறுமாறு பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக (15 மீற்றர் தொலைவில்) கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தில் சுப்ரமணியம் பரமேஸ்வரன் ஈடுபட்டு வரும் நிலையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இவையெல்லாம் இன்று இணையத்தளங்களில் பரபரப்பாக வரப்போகும் செய்திகள்தான்.
ஆனால் இந்தப் பரப்பரப்புக்குள் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி உள்ளது.

அது மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தி!
அது இதுதான்:
பிரித்தானியப் பிரதமரைச் சந்திக்கச் சென்ற பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் ‘மெத்தப்படித்த கனவான்கள்’ எவரும் நான்கு நாட்களாக உணவேதுமின்றி கடும் குளிரில் உடல்நலம் பாதிக்கப்பட்டுப் பட்டினிப் போரில் ஈடுபடும் பரமேஸ்வரனை பிரதமரின் வாசத்தலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

சரி. இதற்கு பாதுகாப்பு அனுமதி கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
போகும் வழியில் ஒரு நிமிடம் தானும் தமது வாகனத்தை நிறுத்தி பரமேஸ்வரனை சந்தித்து அவரது உடல்நலம் குறித்தாவது விசாரித்தார்களா? அதுவும் இல்லை.

ஏன் பிரதமரை தாம் சந்திக்கச் செல்வது பற்றி அவரிடம் தொலைபேசி வாயிலாகக் கூட இந்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’ தெரிவிக்கவில்லை.
போனால் போகட்டும். போகும் அவசரத்தில் இப்படிச் செய்து விட்டார்கள் என்று நாம் எம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் இவர்களை சந்திக்கச் சென்றது பிரித்தானியப் பிரதமரை அல்லவா?
சரி. திரும்பி வரும் வழியிலாவது பரமேஸ்வரனை சந்தித்திருக்கலாம் அல்லவா?
ஆனால் அப்படியெதுவுமே நடக்கவில்லை.
மாறாக...
பிரித்தானியப் பிரதமரை சந்தித்த மகிழ்ச்சியில் 10 டவுணிங் வீதியை விட்டு வெளியேறினார்கள் இந்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’.


இவர்களில் ஒருவருக்குத் தானும் பரமேஸ்வரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற எண்ணமே இருக்கவில்லை. அல்லது பரமேஸ்வரனின் உடல்நலம் பற்றி விசாரிக்கும் சிந்தனையும் இருக்கவில்லை.
தமது கோட் பட்டன்களை இறுகப்பூட்டிக் கொண்டு பரமேஸ்வரன் என்ற இளைஞன் அருகில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருப்பதைக் கூட அறியாதவர்கள் போன்று அங்கிருந்து அகன்றுவிட்டார்கள்.
ஆனால் இவர்களில் இருந்து சற்று மாறுதலாக வீதியைக் கடந்து அங்கு வந்தார் இனவழிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பின் பிரதிநிதி ஜனனி ஜனநாயகம்.

தமது முகங்களைத் திருப்பிக் கொண்டு ‘மெத்தப்படித்த கனவான்கள்’ அங்கிருந்து அகன்று செல்ல ஜனனி ஜனநாயகம் மட்டும் பரமேஸ்வரனை சந்தித்து உரையாடினார். பிரதமருடனான சந்திப்பில் நடந்ததை எடுத்து விளக்கினார்.

இவற்றையெல்லாம் அங்கிருந்து அவதானித்த மூத்தவர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்: ‘‘தம்பி. 70களிலை அமிர்தலிங்கத்தாரும், கூட்டணிக்காரரும் செய்த கூத்தை இப்ப இந்தப் பேரவைக்கார கோட் சூட் போட்ட ஆக்கள் செய்யினம். அவையள் வேட்டியும், சேட்டும் போட்டிருந்து சனத்தை ஏமாத்தினவை. இவையள் கோட்டும் சூட்டும் போட்டிருக்கினம். அவ்வளவுதான் வித்தியாசம்’’ என்றார் அந்த மூத்தவர்.
இன்னொரு விதத்தில் கூறுவதானால்:

‘மெத்தப்படித்த கனவான்கள்’ பற்றி 2008ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாக கணித்ததும், அதனை அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) எடுத்துரைத்ததும் மீண்டுமொரு தடவை இலண்டனில் நிரூபணமாகியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக