siruppiddy

25/9/15

அமெரிக்க யோசனைக்கு பிரதமர் ரணில்அனுசரணை! - த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளும் பங்கேற்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று ரணில் தெரிவித்தார்.

எனவே இந்த யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கமும் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை உரிய அரசியல் அபைம்பு மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்ட அமெரிக்காவின் புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்ட நகல் பிரேரணை வரைபில் காணப்பட்ட 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு் திருத்தங்களுக்குள்ளாக்கப்பட்ட பிரேரணை ஜெனிவா நேரப்படி நேற்று 5.15 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா நேற்றைய தினம் தனது பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

குறிப்பாக அப்பிரேரணையில் சர்வதேச குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் , விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கையின் நீதித்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், சர்வதேசத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பூரண பங்களிப்பை வழங்கவுள்ளது.

அதேநேரம் அரசாங்கம் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இவ்விடயங்களை கருத்திற்கொண்டு தனது ஒத்துழைப்புக்களை வழங்கி முழு அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

மேலும் இப்பிரேரணையில் சிபார்சு செய்யப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனூடாக கடந்த காலத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கானவொரு வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.

இவ்வரைபானது பல்வேறு கடினமான நிலைமைகளில் கருத்தொற்றுமை மிக்கதாகவுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கான பொறுப்புக்கூறும் தரப்பினர் என்ற அடிப்படையிலும் அவர்கள் திருப்திகொள்ளும் வகையில் சொற்றொடர்கள் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே இ்ந்த வரைபில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக அமையும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுத்து அவர்களின் நம்பிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

ஐ.நாவில் வெளியான அமெரிக்க திட்ட வரைவு...! எதிர்பார்ப்பில் ஏமாற்றமா.....?

இலங்கை தொடர்பிலான அமெரிக்க பிரேரணை ஜெனிவா நேரம் இன்று மாலை 5;30 மணிக்கு வெளியாகியுள்ளது.

இத் திட்ட வரைவில் எதிர்பார்த்ததை விட சில சரத்துக்கள் வித்தியாசமான முறையில் மாற்றி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கலப்பு நீதி மன்றம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதம் விஷேட சபை என மாற்றப்பட்டதுடன் அதனை விசாரிக்கும் நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ் வரைவு எதிர்வரும் 30ம் திகதி சபையின் விவாதிக்கப்படும்போது மேலும் ஒரு சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் போதிலும் , இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டே நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் கலப்பு நீதி மன்றம் என்னும் சொற்பதம் நீக்கப்பட்டமையானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ம் இணைப்பு

போர்க்குற்றம் தொடர்பில் திருத்த யோசனை அமெரிக்க சார்பு நாடுகள் முன்வைத்தன. ஹைபிரைட்டுக்கு பதில், இலங்கையின் நீதித்துறையுடன் சர்வதேச பங்களிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த யோசனையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று நகல் யோசனை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச சட்ட உரிமை மீறல்கள், மனித உரிமைமீறல் போன்றவற்றை விசாரணை செய்ய இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பாரபட்சமற்ற இலங்கையின் நீதித்துறை பொறிமுறை உருவாக்கப்பட்டு; அதில், சுயாதீன நீதி நிறுவனங்கள் இணைக்கப்படவேண்டும்.

அத்துடன் பொதுநலவாய நாடுகள் அலுவலகம், சர்வதேச நீதிபதிகள், சர்வதேச பாதுகாப்பு சட்டத்தரணிகளும் பங்கேற்கவேண்டும் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்ட ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்ற அம்சம் இதில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஐக்கிய அமரிக்கா, முன்னாள் யுகோஸ்லேவியா குடியரசு, மெசிடோனியா, மொன்டிக்ரோ, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

“நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இந்த யோசனையில் திருத்தங்களை முன்வைக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில், இலங்கையில் தனிப்பட்டவர்கள், மனித உரிமை காப்பாளர்கள், மதத்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நீதி அமைப்பில் இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை வரவேற்பதாகவும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த யோசனையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் கண்காணித்து தமது 32வது அமர்வில் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

இதனையடுத்து 34வது அமர்வில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவேண்டும் என்றும் திருத்த யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக