siruppiddy

7/10/13

முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்!



செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
  அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது
ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கமைய தேர்தல் மூலம் புதிதாக அமைக்கப்படும் அரசவை ஐந்து வருடங்களைத் தனது ஆட்சிமைக் காலமாகக் கொண்டிருக்கும் என்பதனையும் புதிய அரசவையினை உருவாக்குவதற்கான தேர்தல்களைச் சுயாதீனமான வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களும் நடைமுறைகளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் மக்களுக்கு அறியத் தரப்படுகிற என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலவாது அரசவை கலைக்கப்பட்டுப் புதிய அரசவை உருவாக்கப்படவுள்ளதொரு சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாகவும்; அதன் செயற்பரிமாணம் தொடர்பாகவும் சில கருத்துக்களை இந்நேரத்தில் மக்களுடன் பகிர்ந்து கொள்ளல் பயன் தரக்கூடியது எனக் கருதுகிறேன்.

2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பினை நடத்தி முடித்துத் தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதுடன் தமிழர் தேசத்தின் விடுதலைக் கனவை முழுமையாகத் தான் துவம்சம் செய்துவிட்டதாகவே சிங்களம் கருதியது.

தமிழீழத் தாயகத்தின் அனைத்துப் பரப்புகளிலும் சிங்கள இராணுவத்தின் அசிங்கமான கால்களைப் பரவச்செய்து சிறிலங்காவின் ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஊடாகவும், இராணுவ வன்முறைகள் ஊடாகவும் தமிழ் மக்களின் கழுத்தை இறுகத் திருகியவாறு தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் தகர்த்துத் தமிழர் தேசத்தை

அடிமைகொண்டு விடலாம் என்றும் சிங்களம் எண்ணியது.
தமிழர் தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், இலங்கைத்தீவு ‘ஒருநாடு ஒருமக்கள்’ கொண்டது என்றும் அம்மக்கள் அனைவரும் ‘சிறிலங்கர்களே’ என்றும் கூறி ‘வெற்றிப் பிரகடனம்’ செய்தது.

இத்தகையதொரு சூழலில்தான் சிறிலங்கா சிங்கள தேசத்தின் நாடு என்பதனையும் தமிழீழமே தமிழர் தேசத்தின் நாடு என்பதனையும் தெளிவாக அடையாளப்படுத்தும் வகையிலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தைப் புதிய பரிமாணத்தில் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தமிழர் தேசத்தின் விடுதலை இலட்சியத்தினை இனஅழிப்பு நடவடிக்கைள் மூலமோ எத்தகைய பெரும் ஒடுக்குமுறைகளின் மூலமோ தகர்த்தெறிய முடியாது என்பதனை முரசறைந்து சொல்லும் வகையில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் முதலாண்டு நினைவு நாட்களின் போது 2010ம் ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை அங்குரார்ப்பணம் செய்துகொண்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் பல்வேறு எதிர்ப்புக்களின் மத்தியிலேயே நிகழ்ந்தது என்பதுவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தையைக் கருவிலேயே கருக்கிவிட முயற்சிகள் பல நடைபெற்றன என்பதுவும் இத் தருணத்தில் நினைவில் வரவே செய்கின்றன.

இருப்பினும் அவற்றையெல்லாம் தாண்டி இக் குழந்தை மூன்று வயதை நிறைவு செய்திருக்கிறது என்பதுவும் தழிழீழ மக்களின் சுதந்திர தாகத்தின் குறியீடாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது என்பதுவும் தமிழர் தேச வரலாற்றில் முக்கியமான பதிவாக அமைகின்றன.
புலம் பெயர் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தழிழீழத் தாயகத்திலும் நமது மக்களின் விடுதலைக் கனவை உயிர்ப்போடு வைத்திருப்பதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணையாக அமைந்திருக்கிறது.

தமிழ் நாடு மற்றும் உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் தமிழீழ அரசின் உருவாக்கத்தைக் கட்டியம் கூறிநிற்கும் அமைப்பாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று விளங்குகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் உலகுக்கு முன்னுதாரணமாக அமையும் ஒரு நடைமுறையான நாடுகடந்த அரசாங்கத்தினை நாம் நடாத்தியிருக்கிறோம். ஜனநாயக விழுமியங்களுக்கமைய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அவர்களால் வரையப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் ஒரு அரசாங்கம் இயங்குவதென்ற

செயன்முறையைப் பின்பற்றி நாம் செயற்பட்டு வந்துள்ளோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரமும் தமிழீழ மக்கள் தமது அரசை நிறுவும்போது பயன்படுத்தக்கூடிய சொற்பதங்களைத் தன்னோடு கொண்டிருந்தது. இது தமிழீழ மக்களின் விடுதலைக்கனவின் ஒரு

குறியீடாகவே உட்கொணரப்பட்டது. அரசவை எனவும், பிரதமர் எனவும் அமைச்சர்கள் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விளிப்பது மக்கள் மத்தியில் நிலவும் தனித் தமிழீழ அரசின் உருவாக்கம் பற்றிய பெருவிருப்பினைச் சுட்டிக் காட்டும் வகையிலானதாகவே அமைகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலவாது அரசவைக்காலம் உண்மையில் ஒரு பரீட்சைக்களமாகவே அமைந்தது என்பதனையும் இங்கு குறித்துக் கொள்ளல் பொருத்தமானது.
முன்னர் ஒருபோதும் இயங்கியிருக்காத வகையில் முற்றிலும் புதியதொரு பரிமாணத்திலேயே நாம் இயங்கி வந்துள்ளோம். பல்வேறு விடயங்களையும் நாடுகளின் எல்லைகளைக் கடந்த அளவிலே அரசியல் ரீதியாக,

 வெளிப்படையாக, விவாதித்து ஜனநாயக அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் நடைமுறைக்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டோம்.
இக் காலத்தில் நாம் எதிர்பார்த்த எல்லாவற்றையும் பல்வேறு சவால்கள், காரணங்களால் எம்மால் நிறைவு செய்யமுடியவில்லை. எனினும் தமிழீழ

 இலட்சியத்தை உயிர்ப்பாகப் பேணும் ஓர் அமைப்பாக எம்மை நிலைநிறுத்திக் கொண்டோம். எமது தொடர்சியான செயற்பாடுகளை உலகின் பல்வேறுசக்திகளும் பலமிக்க அரசுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள் என்பதனை நாம் தெளிவாக உணரமுடிகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேலும் விரிவாக்கிச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது.

தாயகத்தில் நமது மக்கள் விடுதலை வேண்டி எழுச்சியாக உள்ளார்கள். அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்களின் பங்குபற்றல், வாக்களிப்பு என்பன அதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஆறாவது அரசியல் அமைப்புச் திருத்தச் சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அரசியல் வெளிக்குள் நின்றுகொண்டு, தமது விடுதலை உணர்வை தம்மாலியன்ற அளவுக்கு எம்முறவுகள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேநேரம் முற்றிலும் திறந்த அரசியல் வெளியில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பானது சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழமே என்பதை அதன் உருவாக்க நாட்களிலிருந்து உரத்துக் கூறிவருகின்றது.
சிறிலங்கா அரசு தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப் போவதில்லை. சிங்கள அரச இயந்திரம் தமிழீழ மக்களை மேலும் அடிமைப்படுத்தவே வழிதேடும்.

இதனால் தமிழீழத் தனியரசைத் தவிர எமது விடுதலைக்கு வேறு வழியேதும் இல்லையென்ற உண்மையை வரலாறு மீண்டும் வலியுறுத்துவதற்கும், சர்வதேச அரங்கில் அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கும் அதிககாலம் எடுக்கப் போவதில்லை. அப்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இன்னும் கூடுதலான அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும்.

தற்போது மூன்று வருடக் குழந்தையாயுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வழிநடாத்தி வளர்த்துச் செல்வதற்குரிய பாதுகாவலர்களைத் தெரிந்தெடுப்பது இக் குழந்தையின் பெற்றோர்களாகிய மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தையின் உண்மையான பாதுகாவலர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டும், தகுதி கொண்டோரையெல்லாம் வரப்போகும் அரசவைக்கான தேர்தலில் முன்னிறுத்தியும், நடைபெறவுள்ள தேர்தல்களில் பெருந்தொகையாகக் கலந்துகொண்டு மக்களாட்சி மரபுகளை மேலொருபடி உயர்த்தும் வகையில் வாக்களித்தும், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவை நனவாக்கும் பெரும் பணிக்காகச் செயற்படுமாறு தமிழ் உறவுகள் அனைவரையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவையின் உறுப்பினர்களாக முன்வந்து பல்வேறு முனைகளில் அருந்தொண்டாற்றிய அனைத்து உடன்பிறப்புகளுக்கும்,  துணைநின்று பல துறைகளில் உதவி வந்த எல்லோருக்கும் இத் தருணத்தில் எனது பணிவும் அன்பும் கலந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு பிரமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைக்கான தேர்தல்! வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 2 முதல் 8 ஆம் திகதி வரை
தமிழ் மக்கள் செறிவாக வாழும் 15 நாடுகளிலிருந்து 112 அங்கத்தவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஒக்டோபர் 01, 2013 அன்று கலைக்கப்பட்டு ஒக்டோபர் 26ம் நாள் புதிய அரசவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் சம்பந்தமான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன.
1. நா.க.த. அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது  ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள்  ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.க.த. அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013

அரசவை கலைக்கப்படுவதற்கும் தேர்தல் மனுத் தாக்கல் செய்வதற்குமான கால இடைவெளி ஒரு வாரம். வேட்பாளராக மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அன்பர்களைக் கருத்தில் கொண்டு, இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இத் திகதிகள் ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் அறியத் தரப்பட்டுக் கொண்டிருக்கிறன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தலில் வாக்குரிமை
வாக்காளர், பொதுவாக, அவரவர் வதிவிடத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட ஒரு தொகுதியில் தங்கள் ஒற்றை வாக்குகளைப் பதிவு செய்யும் தகைமை உடையவராவர். இருப்பினும், பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளில் வேறுபாடுகள் காணப்படலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எதிர்வரும் தேர்தலில், தேர்தல் தொகுதிகள் தனி அங்கத்தவர் தொகுதியாகவோ அல்லது பல அங்கத்தவர் தொகுதியாகவோ அமையலாம். பொதுவாக, அதிக பட்ச வாக்குகளைப்

பெற்றவரே வெற்றியாளராவார். இருப்பினும், பல அங்கத்தவர் தொகுதிகளில் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் கிரமங்கள் வேறுபடலாம். நாட்டு நிலைமைக்கேற்ப, உரிய கிரமத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிக பட்ச வாக்குகளின் அடிப்படையிலான வாக்களிப்பு
• தனி அங்கத்துவத் தொகுதி

பெற்றுக் கொண்ட வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில், என்ன நூற்றுவிழுக்காடாக இருந்த போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்கும் முறை.

• பல அங்கத்துவத் தொகுதி
அங்கத்துவ எண்ணிக்கைக்குச் சமனான வாக்குகளைப் பதிவாக்கும் உரிமை தனி வாக்காளருக்கு வழங்கப் படுதல், அல்லது ஒருவருக்கு ஒரே வாக்கு என்ற முறையில் வாக்குகள் பதியப்பட்டு, தனித்தனி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தி அத்தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

வாக்காளர், வேட்பாளர் தகைமைகள் கீழே தரப்படுகின்றன:
வாக்குப் பதிவு முறை- கனடாவில் தேர்தல் நடைபெறும் அனைத்துத் தொகுதிகளிலுமே ஒரு வாக்காளருக்கு ஒரு வேட்பாளர் என்னும் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்குக்கே உரித்துடையவராவார்.
வாக்காளர் தகுதி

1. தேர்தல் நாளன்று வாக்காளருக்கு 17 வயது பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
2. வாக்குரிமை கோரி வரும் வாக்காளர், தலைமைதாங்கும் அலுவலர்  கணிப்பில் தமிழீழப் பண்பாட்டுடன் இனங்காணப்படல் வேண்டும்.
ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் என்பவற்றாலோ, வேறு ஏதும் எஞ்சிய பிரிவின் அடிப்படையிலோ இணைந்தவராதல் வேண்டும்.

பின்னைய பிரிவு ஓர் எஞ்சிய பிரிவாகக் கருதப்பட்டு தனித் தனியே ஆராயப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்கப்படும்.
வேட்பாளர்களின் தகுதி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நோக்குடன் நடாத்தப்படும் தேர்தலில் போட்டியிட முன்வரும் ஒருவர் கீழ்க்காணும் தகமைகளைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
1.   குறிப்பிட்ட தேர்தலில் தான் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,

2. வேட்பு மனு தாக்கல் செய்பவர், அந்த நாட்டின் வதிவுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
2.1 அவர், தேர்தலுக்கு நிற்கும் மாவட்டத் தொகுதியில் வதிப்பவராக இருத்தலே அதிசிறந்த நிலையாகும்.

2.2 இருப்பினும், அவர் வதியும் குறிப்பிட்ட மாவட்டத் தேர்தல் தொகுதியில் மட்டுமல்லாமல் அதே தேர்தல் பிராந்தியத்தில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவதற்குத் தகுதியுடையவர் ஆகிறார்.

2.3 குறித்த அப் பிராந்தியத்தில் வசிப்பவர் எவரும் வேட்பாளராக முன்வராத நிலையில் அந்நாட்டின் எப் பிராந்தியத்திலாவது வசிப்பவரிடமிருந்தும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் சிறப்புரிமை தேர்தல் ஆணையாளருக்கு உண்டு.

3. வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், நா.க.த.அ தேர்தல் ஆணையத்திலோ, நாட்டுத் தேர்தல் ஆணையத்திலோ பதவி வகிப்பவராகவோ அல்லது நா.க.த. அரசாங்கத்தின் தேர்தல் நிர்வாகத்துடன் எவ்வழியிலேனும் தொடர்புடையவராகவோ இருத்தலாகாது.

வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், இலாபத்துக்காகவோ, இலாப நோக்குடனோ குற்றவியல் தவறு செய்தார் என எந்த நீதிமன்றத்தாலும், தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது போட்டிக்காலத்தில் குற்றப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
4.  வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், தமிழ்ஈழ மக்களின் நலன்களுக்கு மாறாகவுள்ள வேற்று நாடுகளில் சேவை ஆற்றுபவராக இருக்கக் கூடாது. அத்தகைய நாட்டிலிருந்து பொருளாதார நன்மை ஏதும் அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

5. வைப்புப் பணம்: பதிவுக்கட்டணமாகத் அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் தொகையை அவர்கள் குறிப்பிடும் முறைப்படி செலுத்தவேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசுடன் இணைந்து இனத்தின் விடிவிற்காகச் செயலாற்ற விரும்பும் அன்பர்கள் உங்கள் நாட்டுத் தேர்தல் ஆணையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தேர்தல் நேர்மையாகவும், உண்மையாகவும், நன்நோக்குடனும், வெளிப்படையாகவும் நடக்கும் என்பதை உறுதி செய்கிறேன்.
திருமதி. செ. ஸ்ரீதாஸ்  தலைவர், தேர்தல் ஆணையம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக