siruppiddy

18/5/13

அடங்க மறுக்கும் தமிழனின் வீரம்- படைகளை குவிக்கும்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நாலாம் ஆண்டைய நினைவு நிகழ்வுகள் கெடுபிடிகள் மத்தியில் நேற்று பல்கலைக்கழக சமூகத்தினால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
 
 கடந்தாண்டு மாவீரர் தின கைதுகள் மற்றும் மிரட்டல்களையடுத்து இம்முறை பல்கலைக்கழக சமூகம் அடக்கிவாசிக்குமெனவே சிறிலங்கா படைத்தரப்பு நம்பியிருந்தது.

எனினும் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்கலைக்கழக விடுதிகளிலும் நினைவு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படலாமென்ற அச்சங்காரணமாகவே இத்தகைய படைக்குவிப்பு நடந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.
 
 சுமுகமான சூழலில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் படையினரது பிரசன்னம் இல்லாதிருக்கவேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதனால் அச்சமடைந்த விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவ மாணவிகள் விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறி தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரே பலர் இவ்வாறு செல்லத் தொடங்கியதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக