siruppiddy

16/5/13

படையினருக்கு எதிராக திரளும் தமிழர் படை -

 தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா படையினர் திட்டமிட்ட நில அபகரிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்,இதற்கு எதிராக பல தரப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. எனினும் இது ஆயுத முனையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தது.

எனினும் தமிழர்களின் கோரிக்கையை கருத்திற் கொள்ளாத சிறிலங்கா படையினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தமிழர் தாயகத்தின் காணி உரிமையாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நேற்றையதினம் யாழ்.மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரால் சுவீகரிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்கள் 1474 பேர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறிலங்காப் படையினர் தமது படைத்தளங்களை கட்டியெழுப்புவதற்காக, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் 6381 ஏக்கர், 38.97 பேர்ச் காணியை சுவீகரிக்கவுள்ளதாகவும், இது சுமார் 25.8 சதுர கி.மீ பரப்பளவுக்குச் சமமான பாரிய நிலப்பரப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் 2011ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக இவ்வாறு காணிகளை சுவீகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 யாழ்ப்பாணம் காணி சுவீகரிப்பு அதிகாரி, மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட காணி அளவை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 2000 பேர் வரையில் சிறிலங்கா படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக விரைவில் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.நீதித்துறை வரலாற்றில் அதிகளவு வழக்குகள் ஒரு நாளில் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக