siruppiddy

21/7/13

கௌரவிப்போம் வீராங்கனைகளை!!!


 இலங்கையின் மிக மிகக் கேவலமான மனித உரிமை மீறல்கள் குறித்து லசந்த விக்கிரமதுங்க சொன்னதைப் பற்றிப் பேசும்முன் சென்ற இதழைப் படித்ததும் என்னைத் தொடர்புகொண்ட வாசக நண்பர்களின் மனக்குமுறல்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் விதத்தில் குறைந்தது 5 விளக்கங்களையாவது தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
1. இலங்கையில் இனப்படுகொலைதான் நடக்கிறது - என்பதை இந்தியா நிச்சயமாக அறிந்திருந்தது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அந்த இனப்படுகொலையின் ஒரு பகுதியாக திட்டமிட்ட பாலியல் வன்முறையில் சிங்கள ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது என்பது மட்டும் இந்தியாவுக்குத் தெரியாமலிருக்குமா என்ன! நா.சா.வுக்கும் நாச்சிகளுக்கும் தெரிந்திருக்காவிட்டாலும் உயர் பதவிகளில் இருந்த இரண்டு சேட்டன்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஒருவர் - சிவசங்கர் மேனன். இன்னொருவர் - எம்.கே.நாராயணன். இவர்களுக்குத் தெரியாமல் அங்கே ஒரு துரும்பு கூட அசைந்திருக்காது. ஒரு வேளை இப்படியொரு திட்டமிட்ட கற்பழிப்பு நடவடிக்கையை இலங்கை மேற்கொள்ளுமென்பது தங்களுக்கு முன்னதாகத் தெரியாது என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருந்தால் அதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.
2. நம்முடைய இதயத்தைச் சுக்குநூறாகத் தகர்க்கும் இந்தக் கொடுமை ஈழத்தில் இன்றும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அவலத்தை வெளிப்படையாக எதிர்க்கவும் இயலாத நிலையில் ஒரு இனமே நசுங்கி நாசமாகிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கில் பலாத்காரம் தொடர்வதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே வேதனையுடன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. (மார்க்சிஸ்ட் தோழர்கள் கவனத்துக்கு... அதிலும் குறிப்பாக சகோதரி வாசுகி கவனத்துக்கு!)
3. இதை எப்படித் தடுப்பது - என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மனசாட்சி என்கிற ஒன்று சர்வதேசத்துக்கு இருந்தால் தடுத்துவிட முடியும். சர்வதேசத்துக்கு அது இருப்பதாகத் தெரியவில்லை. தாய்த் தமிழ் நாட்டில் உள்ள ஏழரை கோடித் தமிழர்களுக்கு சுரணை இருந்தாலும் தடுத்துவிடலாம். தமிழ்நாட்டுக்கு இது இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியொரு நிலையில் இந்த வக்கிரம் பிடித்த தாக்குதல் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் தமிழ் உணர்வாளர்களில் உண்மையானவர்கள் உடனடியாக இறங்குவது நல்லது.
4. நமக்குக் கிடைத்திருக்கிற உடனடி வாய்ப்பு - நவம்பரில் இலங்கையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாடு. ஒட்டுமொத்த ராணுவத்தையும் 'கற்பழிப்பு' சேவையில் முழுமூச்சாக ஈடுபடுத்தியுள்ள இலங்கைக்கு காமன்வெல்த் மாநாடு ஒரு கேடா - என்கிற கேள்வியை இப்போதே... இந்தக் கணத்திலேயே... உரத்த குரலில் எழுப்பவேண்டும் நாம். சர்வதேசத்திலும் - ஏன் - இந்தியாவிலும் கூட அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையின் வக்கிரபுத்தியை அம்பலப்படுத்தி அதன்மூலம் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்திவிட்டோம் என்று வையுங்கள்... அதற்குப் பிறகு இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த நீண்ட காலம் ஆகாது. (இலங்கையின் தரத்துக்கு மாமன் வெல்த் மாநாடோ மச்சான்வெல்த் மாநாடோ நடத்தித் தொலைக்க வேண்டியது தானே! அதுகெட்ட கேட்டுக்கு எதற்கு காமன்வெல்த் மாநாடு?)
5. நான்கைந்து மாதங்களுக்கு முன்பே இந்தக் கொடுமை குறித்து இதே பகுதியில் எழுதியிருந்தேன். மாலதி - கார்த்திக் இணைந்து எழுதியுள்ள கட்டுரை மீண்டும் அதுபற்றி எழுதத் தூண்டியது. கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற கவிதையின் கடைசி இரு வரிகளை - அது கொடுக்கிற வலிகளைத் தாங்கிக் கொள்கிற சக்தி எனக்கு உண்மையிலேயே இல்லை. அதனால்தான் அந்த இரு வரிகளைத் தவிர்த்தேன். வாசகர்கள் மன்னிக்கவேண்டும்.
மிகுந்த மனச்சங்கடத்துடன்தான் இதுகுறித்து எழுதுகிறேன். படிக்கும்போது உங்களுக்கு எழுகிற அதே வேதனை எழுதும்போது எனக்கும் இருக்கிறது. 26வது மைலில் இருந்தும் 2009ல் ஒன்றரை லட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை நம்மால். 4 ஆண்டுகள் கழித்தும் தொடர்கிற மனித அவலத்தைத் தடுத்து நிறுத்தவும் இயலவில்லை. பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது சுற்றிலும் நின்றிருந்த நெட்டை மரங்களென நிற்கிறோம் இன்றுவரை.
நம்முடைய இந்தக் கையாலாகாத் தனத்தைப் பயன்படுத்தித்தான் வீடு கட்டுகிறோம் ரயில்பாதை போடுகிறோம் - என்று கூச்ச நாச்சமில்லாமல் தொலைக்காட்சிகளில் 'பிலிம்' காட்டுகிறார்கள் நாச்சிகள். 13ஐக் காப்பாற்றுங்கள் - என்று டெல்லியில் அவர்கள் மாநாடு நடத்துவது இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக அல்லாமல் வேறு எதற்காக? இதைப் புரிந்துகொள்ளாமல் விவரமேயில்லாமல் 'உடல் மண்ணுக்கு உயிர் பதிமூன்றுக்கு' ரேஞ்சில் தண்டவாளத்தில் தலைவைக்கத் தயாராகிறது - தமிழகத்தின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு கோஷ்டியான டெசோ.
இன்னொருபுறம் 'உலகில்இ போர் அல்லது உள்நாட்டுப் போர் நடந்த பகுதிகளில் இதுமாதிரி பாலியல் வன்முறைகள் நடப்பதெல்லாம் சகஜம்' என்கிற வக்கிரம் பிடித்த வியாக்கியானத்தை வெட்கமேயில்லாமல் வெளியிடுபவர்கள். இப்படி தம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் பார்க்கும் எவரும் இந்தக் கொடுமையை இழைத்த ஃ இழைக்கிற பொறுக்கிகளின் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் மகளோ தங்கையோ தமக்கையோ தாயோ இப்படி நசுக்கப்பட்டிருந்தால் 'இதெல்லாம் சகஜம்' என்று டயலாக் விடுவார்களா இவர்கள்? தன் கண்ணென்றால் வெண்ணெய் அடுத்தவன் கண்ணென்றால் சுண்ணாம்பா?
அப்படியே பார்த்தாலும் 'போர் நடந்த பகுதி' - என்று 2009க்குப் பிறகுதானே சொல்ல முடியும்? அதற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே தனித்த இறையாண்மை கொண்ட ஆட்சி அதிகாரத்தை ஈழத் தமிழ் உறவுகள் இழந்ததிலிருந்தே சிங்கள ஆதிக்கத்துக்கு அடிபணிய நேர்ந்த நாளிலிருந்தே இதுதானே நடக்கிறது அங்கு. இனக்கலவரங்கள் என்றாலும் சரி திட்டமிட்ட படுகொலைகள் என்றாலும் சரி பாதுகாப்புப் படை - ராணுவம் - காவல்துறை நடவடிக்கை என்றாலும் சரி - அந்தப் போர்வையில் கற்பழிப்பும் கேங் ரேப்பும் தானே நடக்கிறது. அது என்ன ராணுவ வீரர்களின் படையா காம வெறியர்களின் படையா?
'விடுதலைப் புலிகளின் சுண்டுவிரல் கூட சிங்களச் சகோதரிகளை நோக்கி நீண்டதில்லை' என்று சென்ற இதழில் எழுதியது இங்கே சிலரால் மூடிமறைக்கப்படும் உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்காகத்தான்! இவர்கள் சித்தரிப்பதைப்போல் பயங்கரவாதிகளாக இல்லாமல் - தர்ம நியாயத்துக்கு பயப்படும் விடுதலைப் போராட்ட வீரர்களாக அவர்கள் இருந்ததால்தான் சிறைப்பிடிக்கப்பட்ட 'சாகரவர்தன' கப்பலின் கேப்டனும் அவனது காதலியும் வன்னி மண்ணிலிருந்து ஒரு துரும்புகூட படாமல் பத்திரமாக வெளியேற முடிந்தது. அந்த இளம் சிங்களச் சகோதரி பிரபாகரனின் தோழர்களை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நாளாவது மறக்க முடியுமா?
ஒரே ஒரு பிரபாகரனுக்காக ஒன்றரை லட்சம் பேரை ஓட ஓட விரட்டிக்கொன்றது நியாயம்தான் - என்று நினைக்கிற அளவுக்கு கண்மூடித்தனமாக பிரபாகரனை வெறுக்கும் சோ.ராமசாமிகளையும் சுப்பிரமணிய சுவாமிகளையும் பார்த்துக் கேட்கிறேன் - பிரபாகரனோ அவனது தோழர்களோ ஒரே ஒரு சிங்களச் சகோதரியையாவது தங்களது நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் சிதைத்ததாக உங்கள் சுண்டுவிரலை நீட்டி நீங்கள் குற்றஞ் சாட்ட முடியுமா? அந்த மாவீரர்களுக்கும்இ எங்கள் உறவுகளின் மண்ணில் உறுப்பாயுதத்துடன் கொழுப்பெடுத்துத் திரிந்துகொண்டிருக்கும் கொழும்புப் பொறுக்கிகளுக்கும் இருக்கிற வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா இல்லையா? 'உங்களுக்கெல்லாம் என்ன கண்ணவிஞ்சா போச்சி?'
போரே முடிந்துவிட்டதாகவும் அமைதி திரும்பி விட்டதாகவும் இலங்கை அறிவித்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் எங்கள் சகோதரிகள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவது எதற்காக? அவர்களது மன உறுதியைச் சிதைப்பதற்காகத்தான் இந்த நடைமுறை என்றால்இ திமிரெடுத்துத் திரியும் அந்தப் பொலிகாளைகளின் உறுப்புகள் கூட ஒருநாள் வெடிவைத்துத் தகர்க்கப்படும்..... பொறுப்பில் இருக்கிற பொறுக்கிகள் புரிந்துகொள்ள வேண்டும் இதை!
வெறும் பெண் என்பதற்காகச் சிதைக்கப்படவில்லை தமிழ்ப் பெண் என்பதற்காகத்தான் சிதைக்கப்படுகிறோம் - என்பதை பாதிப்புக்கு உள்ளாகும் ஒவ்வொரு சகோதரியும் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருப்பதாகக் கூறுகிறார் மாலதி. தாங்கமுடியாமல் திருப்பி அடிக்கும் நிலை வரும்போது அவர்களும் சேர்ந்து அடிப்பார்களா மாட்டார்களா?
கற்பழிப்பு - என்பது உடல்ரீதியான சித்திரவதை மட்டுமல்ல. ஒரு இனத்தின் சுய கௌரவத்தை சுய மதிப்பை எதிர்காலக் கனவைத் தகர்ப்பது. இதற்காகத்தான் இந்த ஈனத்தனமான இழிவான நடவடிக்கையைத் தொடர்கின்றன பௌத்த சிங்கள மிருகங்கள். எங்கள் சகோதரிகளை அசிங்கப்படுத்துவது அவர்களது பெருமித உணர்வையும் மன உறுதியையும் நசுக்குவதற்காகத் தான்! அவர்களது இன அடையாளத்தை அழிப்பதற்காகத் தான்! இங்கேயிருந்து அங்கே போய்விட்டுத் திரும்பிய ஒரே ஒரு பத்திரிகையாளருக்குக் கூடவா இதை வெளிப்படையாக எழுதும் மனத்துணிவு இல்லாது போய்விட்டது! இவர்களின் இந்த மௌனத்துக்கும் பான் கீ மூன் சாதித்த கள்ள மௌனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இதைவிடக் கொடுமையான ஓர் உண்மையைஇ அண்மையில் சந்தித்த ஈழச் சகோதரர் ஒருவர் கண்ணீர் மல்கப் பகிர்ந்து கொண்டார். '2009ல் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குப் பின் தமிழினத்தை வேறு மாதிரி சிதைக்கும் நடவடிக்கையில் இலங்கை இறங்கியிருக்கிறது. புதிய தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள் தானே... அவர்களுக்குள் சிங்களக் கருவைத் திணிப்பதன் மூலம் தனித்த இன அடையாளத்தை அழித்துவிட சிங்கள மிருகங்கள் நினைக்கின்றன. பௌத்த சிங்கள அரசு இதற்கான விரிவான திட்டத்தை வகுத்து சிப்பாய்கள் மூலம் இதைச் செயல்படுத்தி வருகிறது' என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது குரல் உடைந்துவிட்டது.
போரில் தாய் தந்தையை இழந்த சிறுமிகள் சிலரைச் சிங்களச் சிப்பாய்கள் தங்கள் 'பாதுகாப்பில்' வைத்திருப்பதாகக் கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டபோது கண்ணீர் மட்டுமே அவரது பதிலாக இருந்தது. அந்த விழிகளின் மொழியில் வெளிப்பட்ட உணர்வுஇ அந்தக் குழந்தைகள் எந்த மாதிரியான பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்த உடைந்து போயிற்று மனசு. அன்றிரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அந்தக் கண்ணீர்த் துளிகளே கண்முன் நின்றன.
ஆதாரம் இல்லாமல் எதையுமே பேசுவதில்லை நான். யோசித்து யோசித்துத்தான் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். எழுதுவதில் மட்டுமல்ல என்னுடைய திரைப்படத்திலும் இதைத்தான் முன் நிறுத்துகிறேன். நடந்தது இனப்படுகொலை தான் என்பதை ஆதாரத்துடன்தான் பேசியது என்னுடைய - 'உச்சிதனை முகர்ந்தால்.' அது மட்டக்களப்புக்கு அருகே 2009 மார்ச் முதல் தேதி சிங்கள ராணுவ மிருகங்களால் சிதைக்கப்பட்ட ஒய்.புனிதவதியின் கதை. அந்த 13 வயதுக் குழந்தைக்கு 'கேங் ரேப்' என்பதற்கு அர்த்தம் புரியுமா? ஆனால் அவளுக்கு அதுதான் நடந்தது. அதைத்தான் படமாக்கியிருந்தேன்.
ஒரு காட்டுப் பறவை போல தன்னுடைய கிராமத்தில் சுதந்திரமாகப் பறந்து திரிந்த அந்த 13 வயதுக் குழந்தை ஒரு அதிகாலைப் பொழுதில் தான் அப்படிக் கிழித்தெறியப்படக்கூடும் என்று என்றைக்காவது நினைத்திருப்பாளா? அந்தக் கணத்தில் அந்தக் குழந்தை எப்படித் துடித்திருக்கும்.. எத்தகைய நரக வேதனையை அனுபவித்திருக்கும்? அந்த வேதனையை சோ.ராமசாமியோ சுப்பிரமணிய சுவாமியோ நாராயணசாமியோ நாச்சியப்பனோ உணர முடியுமா?
டாக்டர் ஆக வேண்டும்இ பொறியாளர் ஆகவேண்டும் டீச்சர் ஆக வேண்டும் பாடகி ஆக வேண்டும் விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும் - இப்படி ஏதேனும் ஒரு கனவு தானே இருந்திருக்கும் புனிதவதிக்கு! அவள் கனவு கண்டதா நடந்தது? புனித நதி மாதிரி நகர்ந்துகொண்டிருந்த அவளது வாழ்க்கையை ஒரு நாள் அதிகாலையில் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டனர் பௌத்தப் பொறுக்கிகள். அவர்களைக் கண்டுபிடித்துக் காயடிக்கவேண்டுமா வேண்டாமா?
புனிதவதி தொடர்பான காட்சிகளைக் கண்ணீருடன்தான் படமாக்கினோம். ஊரையும் பெயரையும் தேதியையும் குறிப்பிட்டுத்தான் படத்தின் காட்சிகளை அமைத்திருந்தோம். அதையெல்லாம் வெளிப்படையாகவே பேசின அண்ணன் தமிழருவி மணியனின் வசனங்கள். இதெல்லாம் கற்பனை என்று நிராகரிக்க முடிந்ததா மத்திய அரசால்! இனப்படுகொலைக்கான வலுவான ஆதாரமான 'உச்சிதனை முகர்ந்தால்' இந்திய அரசின் அனுமதியுடன்தான் வெளிவந்திருக்கிறது. இங்கேயிருந்து மகிந்த ராஜபட்சேவுக்கு மகுடி வாசிக்கிற மானங்கெட்ட மனிதர்களால் இதை மறுக்க முடியுமா? (இவர்கள் வாசிக்காமலேயே அடம்பிடித்துப் படமெடுத்து ஆடுகிறது அந்த நச்சுப்பாம்பு... இவர்கள் வேறு வீணாக ஏன் வாசிக்கிறார்கள்?)
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்போரில் 'கேங் ரேப்' செய்யப்பட்டவர்கள் மற்றும் தொடர் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டிருப்பவர்களின் நிலைமை தான் படுமோசம். இரண்டிலுமே சிறுகச் சிறுக உடல் சிதைந்துஇ நரக வேதனையைத் தொடர்ந்து அனுபவித்து மரணத்தைத் தழுவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிறப்புறுப்பில் குணப்படுத்த இயலாத நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். எந்தெந்த மிருகத்துக்கு என்னென்ன வியாதி இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்?
இவர்களைக் கூட காப்பாற்ற இயலாத மனித சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியிருப்பதும் இந்த நிலையிலும் தமிழ் மொழிக்காக உயிரையே விட்டுவிடுவோம் என்கிற அதன் கித்தாப்பு மட்டும் ஒரு புள்ளி கூட குறையாததும் கொடுமையிலும் கொடுமை! உங்க உயிரைக் கொடுத்து மொழியைக் காப்பாற்றி எங்கள் சகோதரிகளின் சவக்குழி மேல ஒரு நாலு வரி கவிதை எழுதுங்கப்பா! புண்ணியமாப் போகும்!
ஒரு பாரம்பரிய சமூகத்தில் போரின் பெயரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி மனத்தளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவரின் வலியை வேதனையை அதுவரை பெருமிதத்துடன் வாழ்ந்த அவரது குடும்பமோ அவரது சமூகமோ ஜீரணிக்க நீண்ட நெடுங்காலமாகும். எளிதில் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஆழமான வடு அது. இந்த வேதனையை எதிரி எதிர்பார்த்ததற்கு நேர் எதிர்த் திசையில் திருப்புகிற மாற்று யோசனை ஒன்றை 'காணாமல் போனவர்களில்' ஒருவரான டாக்டர் எழுமதி கதிரவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை பொருத்தமான நேரத்தில் மாலதி நினைவு கூர்ந்திருக்கிறார்.
'பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இத்தகைய சகோதரிகள் குறித்த சமூகப் பார்வையில் மாற்றம் தேவை. வியட்நாம் விடுதலைப் போர் முடிந்த பிறகு அமெரிக்கப் படையினரால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் உயிருடன் மிஞ்சியிருந்தவர்கள் - 'தேசிய வீராங்கனைகள்' என்று அறிவிக்கப்பட்டனர். அவர்களை நாடே போற்றிக் கொண்டாடியது. பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளைப் பார்த்து அனுதாபப்படுவதைத் தவிர்த்து அவர்களை தேசிய வீராங்கனைகளாகப் போற்ற நாமும் முன்வரவேண்டும். அதுதான் மனத்தளவில் உடைந்து போயிருக்கும் அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும்' என்பது எழுமதியின் வாதம்.
எந்த இனத்தின் பெண்களைச் சிதைத்து அதன்மூலம் அந்த இனத்தின் சுதந்திர வேட்கையைத் தகர்க்க எதிரி நினைத்தானோ அந்தச் சகோதரிகள் மூலமே விடுதலைத் தீ மூண்டு எழ இத்தகைய கௌரவங்கள் நிச்சயம் உதவும். எனவே நமது பாரம்பரிய சமூகம் இதற்கான ஏற்பாட்டை வியட்நாம் வழியில் செய்யவேண்டும். எங்கள் புனிதவதி உட்பட ஒவ்வொரு சகோதரியும் போற்றப்படும் நிலை உருவாவதுதான் எதிரியின் செருப்பைக் கொண்டோ அவனது உறுப்பைக் கொண்டோ அவனைத் திருப்பி அடிப்பதாக இருக்கும்.
இந்த நூற்றாண்டின் மிக மிகக் கொடுமையான இந்த மனித அவலத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால் மனசு கொதிக்கும். தங்களுடைய இனச் சகோதரிகளின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த இனம் உயிரைக் கொடுத்துப் போராடியது. அந்த எதிரி அந்தப் பெண்களின் சுய கௌரவத்தை பலாத்காரமாக அழித்து அதையே அந்த இனத்தை அழிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறான்... சிங்கள இன விருத்தியை சிங்களப் பெண்கள் மூலம் மட்டுமில்லாமல் தமிழ்ப் பெண்கள் மூலமும் நடத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து அமல்படுத்துகிறார்கள் ராஜபட்சே சகோதரர்கள். இதுதான் கொடுமை!
ஏம்பாஇ எரிக் சோல்ஹேம்இ அமைதி உடன்பாட்டை நாசமாக்கிய பிறகு அமைதியாகவே இருந்தா எப்படி? இனவிருத்தி தொடர்பான இந்தக் கண்டுபிடிப்புக்காக ராஜபட்சேவுக்கும் ஒரு நோபல் பரிசு கிடைக்க ஏற்பாடு பண்ணுப்பா! நார்வேயில இருந்துகிட்டு இதுகூட செய்யாட்டா எப்படி? ஏழரைக் கோடி தமிழர்கள் இருக்கிற இந்தியாவில் இருந்து கொண்டே 'அந்த மக்கள் உணவும் வேலையும் தான் கேட்கிறார்கள்' என்று பேசுகிற நாச்சியப்பன்களுக்கும் ரங்கராஜன்களுக்கும் இருக்கிற ராஜ விசுவாசம் கூட உனக்கு இல்லாட்டா எப்படி சோல்ஹேம்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக