siruppiddy

1/7/13

கரும்புலிகள் நாளில் ஐ.எல்.சி வானொலியில் மானாட மயிலாட்டமா?


தமிழீழ தேச விடுதலைக்காக தமது உயிரையே ஆயுதமாக்கி வீரகாவியமாகிய கரும்புலிகளை நினைவுகூரும் நாளாகிய யூலை 5ஆம் நாளன்று இலண்டன் ஐ.எல்.சி (அனைத்துலக உயிரோடை – தமிழ்) வானொலியில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுடன் ‘மானாட மயிலாட’ முன்னோட்ட ஒலிபரப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ மக்களுக்காக குரல்கொடுத்து வரும் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களின் தமிழின உணர்வு பாராட்டுக்குரியது.
அதிலும் 2009ஆம் ஆண்டு கொழும்புக்கு வருமாறு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து ஈழத்தமிழர்களுக்கு தோள்கொடுத்தவர்கள் தென்னிந்திய திரையுலகத்தினர்.
அவர்கள் இலண்டனுக்கு வருகை தந்து புலம்பெயர்வாழ் தமிழ் மக்களை சந்திப்பதையிட்டோ அன்றி கலை நிகழ்வுகளை நடத்துவதையிட்டோ எவருக்கும் ஆட்சேபனை இல்லை.
இந்த வகையில் வரும் யூலை 6ஆம் நாளன்று இலண்டனில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் மானாட மயிலாட்ட நிகழ்ச்சியையிட்டு எவருக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அதற்கான முன்னோட்ட நிகழ்ச்சிகள் கரும்புலிகள் நாளன்று ஐ.எல்.சி வானொலியில் ஒலிபரப்பாக இருப்பது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரும்புலிகளை நினைவுகூரும் நாளில், கரும்புலிகளுக்கான நினைவுகூரல் நிகழ்வுகளைப் பின்தள்ளிவிட்டு அதற்கு மாற்றீடாக திரையுலக நட்சத்திரங்களுடன் கூடிக்குலாவும் நிகழ்ச்சிகளை ஐ.எல்.சி வானொலி நடத்த உத்தேசித்திருப்பது அங்கு பணியாற்றும் ஒலிபரப்பாளர்களிடையே கூட கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது விடயத்தில் தற்பொழுது ஐ.எல்.சி வானொலியை நிர்வகித்து வரும் தமிழின உணர்வாளர்களான தனம், ஏ.சீ.தாசீசியஸ் ஆகியோர் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து கரும்புலிகள் நாளில் களியாட்ட ஒலிபரப்புக்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக