siruppiddy

11/7/13

வன்னியில் படையினரின் வற்புறுத்தல்!


 கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்த மக்களின் வீடுகளுக்கு செல்லும் படையினர் வட மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்துவதாக முறையிடப்படுகிறது.
 ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு வாக்களித்தால் மட்டுந்தான் நிவாரணங்களை பெறமுடியுமெனவும், இல்லையேல் எதவும் கிடையாதெனவும் வீடுகளுக்கு செல்லும் ஸ்ரீலங்காப் படையினர் அச்சுறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்கள்.
 வணிக நிலையங்களுக்கும் செல்லும் ஸ்ரீலங்காப் படையினர், வட மாகாணசபைத் தேர்தலில் அரசதரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் கடனுதவி வழங்கப்படுமென கூறுவதாகவும் அரசாங்க வேட்பாளர்களுக்கு சார்பான பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் வற்பறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
 படையினர் இந்ந நடவடிக்கைகள் தொடர்பாக முல்லைத்தீவு பிரசைகள் குழு தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகளிடம் முறையிட்டது. படையினர் பக்கச் சார்பாக செயற்படுவதுடன் மக்களை அச்சுறுத்துவதனால் மக்கள் வீதியில் நடமாட தயங்குவதாகவும் முல்லைத்தீவு பிரசைகள் குழு அதன் முறைப்பாட்டில் குறிப்பிடுகிறது.
 கொழும்பில் உள்ள தேசிய சமாதான பேரவையின் அதிகாரி ஒருவர் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக ஸ்ரீலங்கா இராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிடம் முறையிட்டார். படையினர் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதியான தேர்தலுக்கு வழிவகுக்காதென அந்த அதிகாரி சுட்டிக்காட்டியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக