siruppiddy

22/7/13

மஹிந்தவை அழுத்தும் சிங்கள இனவாதிகள்


 13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தாமல் தேர்தலை நடத்தினால், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இனவாதிகள் கோஷ எழுப்ப தொடங்கியுள்ளனர்.
 

இது தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது, வட தமிழீழத்தில் தேர்தலை நடத்தினால் அது ஈழத்தை உருவாக்கும் என கடும்போக்குவாத சிந்தனை கொண்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட தமிழீழத்தில் தேர்தல், பொதுநலவாய மாநாடு ஆகியன முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்,

"பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமானால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஈழத்தை உருவாக்குவதற்கான அரசியல் போரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும்.

'வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13 இலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதென்பது முடியாத காரியமாகும்.

அரசின் முயற்சிக்குக் கூட்டமைப்பு நிச்சயம் தடங்கல் ஏற்படுத்திவிடும். எனவே, நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்காது நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மேற்படி அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

13 இல் மாற்றமின்றி தேர்தல் நடத்தப்படுமாயின், அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன், தனி ஈழ முயற்சிக்கும் வழிவகுக்கும்.

ஆகவே, இந்தியாவைப் பற்றியோ அல்லது பொதுநலவாய மாநாடு குறித்தோ யோசிக்காது 13இல் இருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கவேண்டும். சிங்கள மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசு உணரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக